JobVibe.lk - Sri Lanka Job Portal

தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களில் உள்ளோர் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் - திருச்சி விமான நிலையத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்பிராந்திய மாநிலங்களில் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என திருச்சி சர்வதேச  விமான நிலையத்தில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்  தெரிவித்தார்.

இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முதன்முறையாக தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள  அமைச்சருக்கு கொழும்பில் பாராட்டு விழா நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை (18) முற்பகல் வருகை தந்தார். அவரை திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் ஹபிபுல்லாஹ், மூத்த ஊடகவியலாளர்  திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர்  சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் ,அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர்   கூறியதாவது ,

கேள்வி : வெளிநாடுகளில் இலங்கையில் தான் முதன் முதலில் இசைமுரசு  நாகூர் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. அதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முதன்முதலில் இடம் பெற்றுள்ள அமைச்சருக்கு பாராட்டு விழா எதுவும் நடத்தப்படுமா?

பதில் : இந்தியா யூனியன் முஸ்லிம் லீக்கில் முதன்முறையாக அமைச்சரவையில் பங்கேற்ற அமைச்சர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது தொடர்பாக கட்சி ரீதியாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும், நிச்சயமாக பாராட்டு விழா குறித்து  விரைவில் திகதி முடிவு செய்யப்படும்.

கேள்வி : தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி செயற்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன ?

பதில்: தமிழகத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. இதற்கு முன்பு ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஒரு வித்தியாசமான அணியினர், எதிர்பாராத வகையில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.

ஜனநாயகத்தில் இதுபோன்ற இடைக்கால மாற்றங்கள் வருவது நல்லது. முந்தைய ஆட்சியாளர்கள் தமிழகத்தைக் கொண்டு நிறுத்திய இடத்திலிருந்து, இந்தப் புதிய ஆட்சியாளர்கள் மாநிலத்தை இன்னும் அடுத்தகட்ட முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழக வெற்றிக் கழகம் நல்ல முறையில் சிறப்பாக செயற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி : இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு என்ன?

பதில் : மீனவர் பிரச்சினை என்பது இரு தரப்பிலும் மனிதாபிமான ரீதியாக அணுகப்பட வேண்டிய ஒரு விஷயம். சட்ட மீறல்கள் என்ற விவகாரத்தையும் தாண்டி, மக்களின் வாழ்வாதாரத்தை இதில் கவனத்தில் கொள்ள வேண்டும். இரு தரப்பிலும் சில விட்டுக்கொடுப்புகளோடு இதற்கு சுமுக முடிவு காணப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில அரசும், மத்திய அரசும், இலங்கையின் மத்திய அரசு மற்றும் யாழ். குடாநாட்டு மீனவர் சமூகத்தோடு இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். எங்களது மீன்பிடித்துறை அமைச்சர் ஏற்கனவே தமிழகத்திற்கு வந்து, இங்குள்ள அரசியல் தலைமைகளுடனும் மத்திய அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது ராஜதந்திர மட்டத்தில் பேசித் தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் என்பதால், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து இப்போது கருத்துக் கூறுவது கடினம்.

இலங்கை மக்களின் தற்போதைய வாழ்வாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்துப் பேசுகையில், தற்போதைக்கு விலைவாசி விவகாரத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. நாளுக்கு நாள் விலைவாசி ஏறிக்கொண்டுதான் செல்கிறது.

மத்திய கிழக்கு யுத்தத்தை பொறுத்தவரை,மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு இன்னும் அநேக நாட்கள் எஞ்சியுள்ளன. அது சுமுகமாக முடிந்தாலும், அதன் சாதகமான பலன்களை அனுபவிக்க இன்னும் 2 முதல் 3 மாதங்கள் ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே, உலகளாவிய இந்த யுத்த சூழ்நிலைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளையும், ஏற்கனவே இலங்கையில் உள்ள பொருளாதார வீழ்ச்சியையும் சேர்த்து சமாளிப்பது என்பது தற்போதைய அரசுக்கு மிக சவாலான காரியமாக உருவெடுத்துள்ளது .

திமுக அரசாக இருந்தாலும் சரி, தமிழக வெற்றிக் கழகமாக இருந்தாலும் சரி, இரு நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க மத்திய அரசுடன் இணைந்துதான் செயற்பட வேண்டும்.

சர்வதேச நாணய மாற்று விகிதத்தில் இலங்கை நாணயம் சந்தித்துள்ள வீழ்ச்சி, இறக்குமதியாளர்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. கச்சா எண்ணெய், பயிர் உரம் (பசளை) போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான இறக்குமதி இதனால் முடங்கியுள்ளது. 

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கையின்படி கடன்களை மறுசீரமைப்பு செய்ய எங்களுக்கு இரண்டு வருட கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கச்சா (மசகு) எண்ணெய் மற்றும் இதர அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக எங்களின் அந்நியச் செலாவணி இருப்பு வேகமாக கரைந்து வருகிறது. சர்வதேச நாணயநிதி   எதிர்பார்த்த அளவை விட கையிருப்பு குறைந்து வருவது நாட்டுக்கு மேலும் ஒரு பாரிய கடன் சுமையை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தக் கடன் சுமையைச் சமாளிப்பது எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நாம் ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் அல்லது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களிலும் தற்போதைய இலங்கை அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட தென்பிராந்திய மாநிலங்களில் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். அதற்கான தாராளமான ஊக்குவிப்பு தொகைகளையும், சாதகமான சூழலையும் ஏற்படுத்தித் தர இலங்கை அரசு தயாராக இருக்கிறது. அதனை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

கேள்வி : இலங்கை இந்தியா இடையே உறவுகள் எப்படி இருக்கிறது 

பதில் : இலங்கையில் பொருளாதார சரிவு ஏற்பட்டது. எங்களுக்கு இந்தியா பெரும் அளவில் உதவி செய்ததது. ரூ. 4000 பில்லியன் டாலர்கள் உதவி செய்யதை மறக்க முடியாது. எங்கள் உறவு தொப்புள் கொடி உறவு. எப்போதும் இந்தியாவோடு நெருங்கி உறவுகளுவோடு தான் இருக்கிறோம்.

விலைவாசி விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை நாளுக்குநாள் ஏறிக்கொண்டு செல்கிறது, ஈரான் அமெரிக்கா இடையே மோதல் முடிவுக்கு வந்தாலும் நிலைமை சீராக இரண்டு மூன்று மாதங்கள் ஆகும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், யுத்தத்தினால் ஏற்பட்ட சுமை மற்றும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் மீண்டு வருவது ஒரு சவாலான விஷயம்.

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பாக, வட பிராந்தியத்தின் மீனவர் சமுதாயம் நெகிழ்ச்சி போக்கை கையாள்வது பற்றி அரசு அவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறது. இலங்கை மீன்வளத்துறை அமைச்சு மத்திய, மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது. ராஜதந்திர மட்டத்தில் இதற்கான முடிவுகள் எட்டப்படுவது தான் சிறந்தது, சட்டரீதியாக நீதிமன்றத்தில் உள்ள விவகாரங்கள் பற்றி பேச முடியாது.

திமுகவாக இருந்தாலும் சரி, தமிழை வெற்றி கழகமாக இருந்தாலும் சரி இரண்டு நாடுகளிடையே உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மத்திய அரசுடன் பேசி தான் தீர்வு காண வேண்டும், இரு அரசுகளும் இலங்கை அரசுடன் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஒத்துழைப்பு தர அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என்றார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال