(எம் என் முஹம்மது)
அக்கரைப்பற்று பொது மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது APL சீசன் 3 கிரிக்கெட் சுற்றுப்போட்டி!
அக்கரைப்பற்று பொது மைதானத்தில் இன்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்ட APL சீசன் 3 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய காங்கிரஸ் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வருமான ஏ.எல்.எம். அதாவுல்லா, இளைஞர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை மாநகர சபை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மனாருல் ஹுதா கழகத்தினர், விளையாட்டு கழகங்கள், மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், நடுவர்கள் , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உரையாற்றிய அவர், அக்கரைப்பற்று கலை, இலக்கியம், ஆன்மீகம் மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் நீண்டகால பாரம்பரியம் கொண்ட பகுதி என குறிப்பிட்டார். கடந்த காலங்களில் கால்பந்து மற்றும் மென்பந்து கிரிக்கெட் துறைகளில் பல திறமையான வீரர்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு விளையாட்டு முக்கியமானது என்பதால், மேலும் பல விளையாட்டு மைதானங்களை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பாலமுனை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட மைதானங்கள் மூலம் பல திறமையான வீரர்கள் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், அக்கரைப்பற்று மாநகர சபைக்கென தனியான கிரிக்கெட் அணி, கால்பந்து அணி மற்றும் பேண்ட் குழுவை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவித்தார். அதேபோல், APL சீசன் 3 போட்டியின் மூலம் திறமையான வீரர்களை தெரிவு செய்து மாநகர சபை அணிக்குள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கான AI தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் Digital Economy தொடர்பான அறிவூட்டல் வேலைத்திட்டங்களும் மாநகர சபை மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் அறிவு, திறன் மற்றும் பொருளாதார வலிமையுடன் உருவாக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த மனாருல் ஹுதா கழகத்தினருக்கும், இணைந்து செயல்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

