எம்.யூ.எம்.சனூன்
நாடளாவி ய ரீதியில் நடைபெற்று வரும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலய மாணவர்கள் புளிச்சாக்குளத்தில் டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை வியாழக்கிழமை (18) மிகவும் சிறப்பாக அனுஷ்டித்தனர்.
கல்லூரியின் அதிபர் எம்.யூ.எம். சாஜஹான் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
முதலாவதாக, காலை கூட்டத்தில் மாணவர்களுக்காக அதிபரினால் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து பாடசாலை ஆசிரியையான திருமதி ஆர். தர்ஷினியினால் டெங்கு நுளம்புகளின் தோற்றம், அவை பரவும் விதம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக நிழற்படங்கள் ஊடாக தெளிவான விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, தரம் 6 முதல் 13 வரை கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் இணைந்து பாடசாலை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் சுத்தம் செய்யப்பட்டதுடன், சுற்றுப்புறத் தூய்மைக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
மேலும், பாடசாலைக்கு வருகை தந்த பெற்றோர்களுக்கு டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாணவர்கள் பாதையின் இருபுறங்களிலும் நின்று பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் மூலமாக தகவல்களை எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வை பாடசாலையின் டெங்கு ஒழிப்புக் குழுவும் சுற்றாடல் முன்னோடி கழகமும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.




