(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான என்.எம். நௌபீஸ் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (16) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வருகின்ற நிலையிலேயே கிழக்கு மாகாண ஆளுநரினால் இவருக்கு இம்மேலதிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த ஏ.ரி.எம். றாபி அவர்கள், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக பதவியேற்றுக் கொண்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நௌபீஸ் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர், கிழக்கு மாகாண சபையின் முகாமைத்துவப் பயிற்சி பிரிவு பணிப்பாளர், கிண்ணியா நகர சபையின் செயலாளர், விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர் போன்ற பதவிகளை வகித்துள்ள இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கல்முனை மாநகர ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

