JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் இஹ்யாவுல் உலூம் அரபுக் கல்லூரி மத்ரஸாவில் உலமாக்கள் மற்றும் ஹாஃபிழ்களுக்கான சிறப்பு குர்ஆன் பயிற்சி ஆரம்பம்.

 எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் இஹ்யாவுல் உலூம் அரபுக் கல்லூரி மத்ரஸாவின் முதல்வர் அஷ்ஷெய்க் சனூஸ் ரஹ்மானி ஹழ்ரத் அவர்களின் பல வருட கால கனவை நனவாக்கும் வகையில், பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட வேண்டிய முக்கியத்துவமிக்க நிகழ்வொன்று கடந்த சனிக்கிழமை (13) மத்ரஸா வளாகத்தில் நடைபெற்றது.

புத்தளம் மாவட்டத்திலுள்ள ஆலிம்கள் மற்றும் ஹாபிழ்களுக்காக, புனித அல்குர்ஆனை தஜ்வீத் விதிமுறைகள் மற்றும் கிராஅத் அடிப்படைகளுக்கு அமைவாக சரியான முறையில் ஓதுவதற்கான நான்கு மாத கால சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குர்ஆன் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோடு, ஆலிம்கள் மற்றும் ஹாபிழ்களின் ஓதுதல் திறன்களை மேலும் செம்மைப்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“குர்ஆனை அழகாகவும் சரியான முறையிலும் ஓதுவதற்கான திறனை வளர்க்கும் இந்தப் பயிற்சி, வடமேல் மாகாணத்தின் சமயக் கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்” என நிகழ்வில் கலந்துகொண்டோர் கருத்து தெரிவித்தனர்.

வடமேல் மாகாணத்தில் முதன்முறையாக இஹ்யாவுல் உலூம் அரபுக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, புத்தளம் வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கும் ஒரு சிறப்புமிக்க முயற்சியாகக் கருதப்படுகிறது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இஹ்யாவுல் உலூம் அரபுக் கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் சனூஸ் ரஹ்மானி ஹழ்ரத் கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் மிஸ்பாஹி பங்கேற்றார்.

மேலும், மத்ரஸாவின் உஸ்தாத்களான அஷ்ஷெய்க் அல்காரி இர்பான் இஹ்ஸானி, அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் ரஸூல் இஹ்ஸானி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், பிராந்தியத்தின் மூத்த உலமாக்கள், ஆலிம்கள், ஹாபிழ்கள் மற்றும் சமயக் கல்வியாளர்கள் பலரும் பங்கேற்று இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

இப்பயிற்சி நிகழ்ச்சியின் வளவாளர்களாக காரிமார்கள் அஷ்ஷெய்க் அல்காரி அப்துல்லாஹ் இக்பால் ரஷாதி, அஷ்ஷெய்க் அல்காரி ஸஹீல் இஹ்யாயி, அஷ்ஷெய்க் அல்காரி அஸீல் ஷாஃபி, அஷ்ஷெய்க் அல்காரி வஷீம் சிராஜி மற்றும் அஷ்ஷெய்க் நாசிக் பலாஹி ஆகியோர் செயற்படுகின்றனர்.

குர்ஆனை தஜ்வீத் மற்றும் கிராஅத் விதிமுறைகளுக்கு அமைவாக சரியான முறையில் ஓதக்கூடிய திறமையான குர்ஆன் ஓதுனர்களை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நான்கு மாத காலப் பயிற்சி நிகழ்ச்சி, புத்தளம் மாவட்டத்தின் சமயக் கல்வி வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தளம் பிராந்தியத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் சமயக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள், ஆலிம்கள், ஹாபிழ்கள் ஆகியோர் இப்பயிற்சி நிகழ்வில் கலந்துகொண்டு அதன் பயன்களைப் பெற்றுக்கொள்ளுமாறு நிர்வாகம் சார்பில் அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال