(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பிரதேச செயலக பிரிவில் டித்வா புயலால் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களை மீளக்கட்டி எழுப்பும் நோக்கில் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிதி உதவி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக காசோலை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (16) கற்பிட்டி பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில், மதிப்பிடப்பட்ட கணக்கெடுப்பின் படி முழுமையாக சேதமடைந்த 219 வீடுகளுக்கு தலா ஐம்பது இலட்சம் வீதமும் பகுதியளவில் சேதமடைந்த 223 வீடுகளுக்கு ஐந்து இலட்சம் வீதமும் மற்றும் 229 வர்த்தக நிலையங்களின் சேதங்களுக்கு ஐந்து இலட்சம் வீதமும் கட்டம் கட்டமாக காசோலைகள் வழங்கப்பட உள்ளது
அதன்படி செவ்வாய்க்கிழமை (16) இரண்டாம் கட்டமாக முழுமையாக சேதமடைந்த வீடுகள் புதுப்பிக்க 28 குடும்பங்களுக்கான முதற்கட்ட காசோலைகளும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் புணரமைப்பிற்காக 28 குடும்பங்களுக்கான முதற்கட்ட காசோலைகளும் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன 30 நபர்களுக்கான முதற்கட்ட காசோலைகள் என மொத்தமாக 86 காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது
இந் நிகழ்வில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கற்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.ஜே.எம். பைசல் ஆகியோருடன் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ எஸ் எம் றிகாஸ் கற்பிட்டி பிரதேச தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் சஞ்சீவ ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.











