கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஸ்கில் விஸ்டா தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை இலக்காகக் கொண்டு மூன்று மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட கற்கைநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த 85 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 23 ஆம் திகதி பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில், பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எம். ரிஸ்கான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட திறன் மேம்பாட்டு இணைப்பாளர் பீ. காமினி உதயகுமார், திறன் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.எம். பராஜ், பொருளாதார மேம்பாட்டு உத்தியோகத்தர்களான எம்.ஜே.எப். தஸ்னிஹா மற்றும் எம்.ஆர். முஸ்லினா ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
மேலும், பாடசாலையின் பிரதியதிபர் எஸ்.ஏ.எம். சீனத் பேகம், பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எச்.யூ. பரீதா முசம்மில், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளின் மாணவர்களுக்கும் பொதுவான மத்திய கற்கை நிலையமாக பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டு, மூன்று மாத காலமாக இக்கற்கைநெறி முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இக்கற்கைநெறி கல்பிட்டி பிரதேச செயலகத்தின் ஸ்கில் விஸ்டா இணைப்பாளர் எம்.எஸ்.எம். அஸ்லம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இதில் தொழில் வழிகாட்டல் பயிற்சிகளை அவர் வழங்கியதுடன், ஆங்கிலப் பயிற்சிகளை டி.எம்.எம். இஹ்சான் மற்றும் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) பயிற்சிகளை ஏ.யு.ஏ.எப். பஸ்லா ஆகியோர் வழங்கினர். கற்கைநெறியை முன்னெடுத்த பயிற்றுவிப்பாளர்களான இம்மூவரும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக ஏற்பாடு செய்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள், இத்தகைய தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதோடு, உயர்கல்வி மற்றும் தொழில் உலகிற்கான சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கும் உறுதுணையாக அமைகின்றது எனத் தெரிவித்தனர்.
இறுதியாக, கற்கைநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த 85 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






