ஹஜ் யாத்திரியர்கள் எதிர்கொண்டதாகக் கூறப்படும் சிரமங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இன்று (26) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை வலியுறுத்தினார்.
ஹஜ் யாத்திரியர்களுக்கு எந்தவிதமான குறைபாடுகளோ அசௌகரியங்களோ ஏற்படவில்லை, இதனை ஆராய சுயாதீனமான விசாரணைக் குழு தேவையில்லை என்றும், ஹஜ் குழுவின் அறிக்கை திருப்திகரமாக இருப்பதாகவும் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார். எனினும், மினா மற்றும் முஸ்தலிபா பகுதிகளில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான ஹஜ் யாத்திரியர்கள் அடிப்படை வசதிகள் இன்றி கடுமையான சிரமங்களை எதிர்கொண்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, மலசலகூட வசதிகளைப் பயன்படுத்துவதற்கும், உணவு மற்றும் தேநீர் பெற்றுக்கொள்வதற்கும் யாத்திரியர்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாக அறியமுடிகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட யாத்திரியர்கள் தாங்கள் எதிர்கொண்ட அவல நிலைகளை சமூக ஊடகங்கள் வாயிலாக காணொளிகள் மற்றும் பதிவுகளின் மூலம் பகிர்ந்துள்ளனர். நாட்டிற்கு திரும்பிய பின்னரும், விமான நிலையங்களிலேயே பலர் தங்களது அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்திருந்தனர்.
எனவே, ஹஜ் குழுவின் அறிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், அதற்கு வெளியே உள்ள உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமித்து, உண்மை நிலையை ஆராய வேண்டும். அதனைத் தொடர்ந்து, அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், இம்முறை ஹஜ் யாத்திரையின் போது ஹாஜிகள் எதிர்கொண்ட அசௌகரியங்கள் குறித்து நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சூழ்நிலையில், "எந்தவித குறைகளும் ஏற்படவில்லை" என்ற வகையிலான பதில்கள், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் பற்றிய தவறான விம்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்தார்.
-- ஊடகப்பிரிவு
