JobVibe.lk - Sri Lanka Job Portal

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சர்வதேச அங்கீகாரம்: ஜெர்மன் அரசின் விசேட திட்டத்திற்கு தேர்வானது அக்கரைப்பற்று மாநகர சபை

(எம் என் முஹம்மது)

அக்கறைப்பற்று மாநகர சபை அமர்வில், நேற்று ( 17)மாநகர முதல்வர் A.L.M. அதாஉல்லா அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானம் சபையின் அங்கீகாரத்தை பெற்றது. இதன்படி, ஜெர்மன் அரசின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் ஆதரவுடன், Engagement Global நிறுவனத்தால் 2025 முதல் 2027 வரை நடைமுறைப்படுத்தப்படும் “Connective Cities Deep Dive Workshop – Water Resilience” என்ற சர்வதேச திட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை பங்கேற்கத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 84 முன்மொழிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 நகராட்சிகளில் ஒன்றாக அக்கரைப்பற்று மாநகர சபை இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாநகர சபை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக புவியியல் துறையுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, நகரின் நீர்வள முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ், வறட்சி மற்றும் வெள்ள அபாயங்களை சமாளிக்கும் நகரத்தின் திறன் மேம்படுத்தப்படுவதுடன், நீர்வள முகாமைத்துவத்தில் சிறந்த நடைமுறைகள் பகிரப்பட்டு செயல்படுத்தப்படும். மேலும், மாநகர சபையின் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகத் திறன்கள் வலுப்பெறுவதோடு, நிலையான நகர அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தழுவல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளைப் பெறவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூத்த கல்வியாளர்கள் நிபுணத்துவ ஆலோசகர்களாக இணைக்கப்படுவதற்கும் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த சர்வதேச அங்கீகாரம் அக்கரைப்பற்று மாநகர சபை, அம்பாறை மாவட்டம் கிழக்கு மாகாணம் மற்றும் இலங்கை நாட்டிற்கு சர்வதேச அரங்கில் பெருமையும் கௌரவமும் சேர்க்கும் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.   இச்சாதனை கௌரவ அக்கறைப்பற்று மாநகர சபை முதல்வர் தேசிய காங்கிரஸ் தலைவர்  ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களின் அரசியல், அபிவிருத்தி மற்றும் தூரநோக்கு என்பவற்றின் அனுபவத்தையே பறைசாற்றி நிற்கின்றது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال