JobVibe.lk - Sri Lanka Job Portal

இஸ்லாமிய புது வருட முஹர்ரம் நிகழ்வு 2026/1448

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், இஸ்லாமிய புது வருடம் 1448 ஹிஜ்ரியை முன்னிட்டு முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்வு 17 ஆம் திகதி புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் மினுவாங்கொடை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.

முஸ்லிம் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் முனீர் முழப்பர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவந்திலக ஜயக்கொடி, மினுவாங்கொட நகர சபைத் தலைவர் ஜனக சேனவிரத்ன, மினுவாங்கொடை பிரதேச சபைத் தலைவர் அசங்க சஞ்சீவ, முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் என். நிலூபர், உதவிப் பணிப்பாளர் மப்ரூஸ் அஹமட், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முப்தி முர்ஷி மற்றும் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பிரதியமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் சாஜஹான், பிரதியமைச்சரின் ஊடக செயலாளர் முஷர்ரப், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மினுவாங்கொடை ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் ஹுஸைன், உபதலைவர் அல்ஹாஜ் நூர்தீன், செயலாளர்  அல்ஹாஜ் சியாத் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

இஸ்லாமிய புது வருடத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், கல்லொலுவை மினுவாங்கொடை அல்-அமான் முஸ்லிம் மகா வித்தியாலய களிகம்பு மாணவர்களினால் அதிதிகளுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டு, அதிதிகள் அழைத்து வரப்பட்டனர்.

கிராஅத் மொழிதலோடு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில், முஸ்லிம் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது.

நிகழ்வில் முஹர்ரம் பற்றிய விசேட உரையை மௌலவி அஷ்ஷெய்க் அர்கம் அபுல் ஹஸன் (அஸ்ஹரி) அவர்கள் நிகழ்த்தினார்.

அத்துடன் ஹிஜ்ரத்தின் வரலாற்றுப் பின்னணி, இஸ்லாமிய விழுமியங்கள், சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கம் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் தொடர்பான உரைகளும் நிகழ்வில் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து புதிய ஹிஜ்ரி ஆண்டை வரவேற்கும் வகையில் விசேட துஆப் பிரார்த்தனை மற்றும் ஸலவாத் மினுவாங்கொடை ஜும்ஆப் பள்ளிவாசலின் பிரதம பேஷ்இமாம் அஷ்ஷெய்க் லாபிர் (ரஷாதி) மேற்கொண்டார்.

மத்ரஸா மாணவர்களின் ஹஸீதா உட்பட  முஹர்ரத்தின் மகத்துவம் பற்றி தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளில் உரைகளும் இடம்பெற்றன. 

இறுதியாக நன்றியுரையை மினுவாங்கொடை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஆலோசகர் அஷ்ஷெய்க் ஹிம்ஸத் (ஹுமைதி) வழங்கினார்.

முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக மற்றும் சமூக விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மினுவாங்கொடை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த ஜமாஅத்தார்கள் மற்றும் மஹல்லாவாசிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.























Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال