JobVibe.lk - Sri Lanka Job Portal

14 மாவட்டங்களுக்கு டெங்கு நோய் பரவல் எச்சரிக்கை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

நாட்டின் 14 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகவும், இதனால் டெங்கு ஒழிப்பு தொடர்பான ஆய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் மேலும் தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.


இந்த பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் எனவும், கடமையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்களின் பணிகளுக்கு ஒத்துழைக்காதோர்கள் அல்லது தடைகள் ஏற்படுத்துவோர் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


கடந்த ஜனவரி மாதம் முதல் நிலவிய மழைக்கால வானிலை, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த ஜூன் 5ஆம் தேதி வரையில் 36,168 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


மேலும் மாத்தறை, காலி, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் கணிசமான அளவில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


இதுவரை டெங்கு காரணமாக 20 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் மூவர் சிறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் உருவாகியுள்ள அபாய நிலையை கட்டுப்படுத்துவதற்காக நாளை (ஜூன் 8), 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்க சுகாதாரத் துறையினர் தீர்மானித்துள்ளனர்.


இந்த விசேட வேலைத்திட்டம், டெங்கு அதிகளவில் பதிவாகும் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 72 மருத்துவ சுகாதார அதிகாரி (MOH) பிரிவுகளை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال