Breaking News

323 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயினை ஏற்றிச் சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையின் சிறப்பு நடவடிக்கையால் கைப்பற்றப்பட்டது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையானது, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இணைந்து, 'முழு நாடும் ஒன்றாக' என்ற போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான தேசிய திட்டத்திற்கு இணங்க, கடல் மண்டலத்தை உள்ளடக்கிய தீவிர கடற்படை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ், இலங்கையின் தென்மேற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது, பத்தொன்பது (19) சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற ஒரு (01) உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.  


கடற்படையால் இவ்வாறு கைப்பற்றப்பட்ட உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகு, புதன் கிழமை (2026 ஏப்ரல் 01) டிகோவிட்டா மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டு, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பிரிவால் நடத்தப்பட்ட ஒரு நிபுணர் பரிசோதனைக்குப் பிறகு, அந்தப் பல நாள் மீன்பிடிப் படகில் பத்தொன்பது (19) பொதிகளில் முந்நூற்று இருபத்து மூன்று (323) கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின் கையிருப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. 


கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, மேற்கு கடற்படைக் கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் ஜகத் குமார மற்றும் கடற்படையின் நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா ஆகியோர் போதைப்பொருள் கையிருப்பை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர். இச் சந்தர்ப்பத்தில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி,  இலங்கை கடற்படையும் கடலோரக் காவல்படை திணைக்களமும், தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை உள்ளடக்கிய நன்கு திட்டமிடப்பட்ட கடற்படை நடவடிக்கைகள் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதோடு, 'முழு நாடும் ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான தீவிரமான கடற்படை நடவடிக்கைகளையும் திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.


அதன்படி, இந்த ஆண்டில், கடற்படை மேற்கொண்ட​ சோதணை நடவடிக்கைகளின்​ போது, நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களைக் கொண்டு வந்த உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகுகளை கைப்பற்ற முடிந்ததாகவும், மேலும் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பெருமளவிலான போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்ய முடிந்ததாகவும் தெரிவித்தார். மேலும், இலங்கை கடற்படைக்குக் கிடைத்த வெளிநாட்டு உளவுத் தகவல்களின் அடிப்படையில், கடந்த சில நாட்களாக பேருவலை கடற்பகுதிக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட தொடர் கண்காணிப்புப் பணிகளின் விளைவாக புதன்கிழமை (2026 ஏப்ரல் 01) அதுபோன்ற ஒரு உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதாக​ அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும், இந்த பல நாள் மீன்பிடிப் படகில் கண்டெடுக்கப்பட்ட, சட்டவிரோத போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 298 பொட்டலங்களில் முந்நூற்று இருபத்து மூன்று (323) கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின் இருந்ததை முதற்கட்ட விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஆறு (06) மீனவர்கள், அவர்களது தகவல் தொடர்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களுடன் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், முப்படைகள், பொலிஸ், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவற்றால், குறிப்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பெரிதும் உதவுகிறது என்றும், இது நாட்டின் எதிர்கால சந்ததியினர் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுபட வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும், 07 உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், படகுகளில் கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருட்களின் தெரு மதிப்பு சுமார் 40 பில்லியன் ரூபாய் என்றும் மேலும் தெரிவித்தார்.


போதைப்பொருள் அச்சுறுத்தலைக் குறைப்பதற்காக, கடற்படை நடவடிக்கைகள் மிகவும் திட்டமிட்ட முறையில் 24 மணி நேரமும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் கடத்தல், வியாபாரம் மற்றும் கொள்வனவு செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் அத்தகைய செயல்களில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் குறித்த தகவல்களை 1818 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினார்.


மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு (01), முந்நூற்று இருபத்து மூன்று (323) கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின் மற்றும் ஆறு (06) சந்தேக நபர்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.









No comments