அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் சமூக, கலாச்சார கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கான நேர்வழிகாட்டும் “Future Leader Islamic Life Studies” 7 நாள் பயிற்சி நெறியின் நிறைவு விழா வியாழக்கிழமை (12) தில்லையடி, அல் காசிம் சிட்டி, புத்/றிஷாட் பதியுதீன் முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். மேலும் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான NTM.தாஹிர் விஷேட அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை, அல் காசிம் சிட்டி றிஷாட் பதியுதீன் முஸ்லிம் மகா வித்தியாலயம், மற்றும் ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய நிலையங்களில் நடைபெற்ற செயலமர்வுகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு இந்நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், வளவாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளராக மௌலவி அஹ்சன் (முஹாஜிரி) அவர்களும், மாவட்ட மேற்பார்வையாளராக மௌலவி பஸால் இஸ்மாஈல் அவர்களும் செயற்பட்டனர்.
சுமார் 21 நிலையங்களில், 35 க்கும் மேற்பட்ட வளவாளர்களின் பங்களிப்புடன், ஒரே பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இப்பயிற்சி நெறியின் மூலம் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இளைஞர்களை மார்க்க, சமூக மற்றும் தலைமைத்துவ திறன்களுடன் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இத்திட்டம், எதிர்கால சமூகத் தலைவர்களை உருவாக்கும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்கள், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கல்வியாளர்கள், மார்க்க அறிஞர்கள், வளவாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.




