Breaking News

உலக நாடுகளின் மக்களினதும் தேவை - அட்டாளைச்சேனையில் மு.கா.தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு...!.

ஈரான்  வெற்றி  பெறுவது மூன்றாம் யுத்தத்தில் ஈரான்  வெற்றி பெற வேண்டும் என்பது உலகளாவிய முஸ்லிம்களுடைய எதிர்பார்ப்பு மாத்திரமல்ல ,எல்லா அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் தேவையுமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.


அட்டாளச்சேனை, அல் இபாதா கலாசார மன்றத்தின் 15 ஆவது இப்தார் நிகழ்வும், பரிசளிப்பும் ஞாயிற்றுக்கிழமை(15), பெரிய பாலத்தடி மைதானத்தில்  நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.


அங்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,


எமக்கு ரமழான் மாதம் பல படிப்பினைகளை ஒருசேர கற்றுத் தருகிறது.தேவையுள்ளவர்களுக்கு கொடுத்து வாழ்கிற ஈகைப் பண்போடு சேர்த்து, சகிப்புத்தன்மை பாவமன்னிப்பு கோருதல் மற்றும் ஆன்மாவையும் , உடலையும் தூய்மைப்படுத்திக்கொள்ளுதல் ஆகிய  உயரிய நோக்கங்களோடு இறைவன் எங்களுக்கு  இந்த ரமழான் மாதத்தை அருளியுள்ளான்.ஆயினும்,இந்த புனித மாதத்திலும்கூட அவ்வப்போது நாங்கள் பல்வேறு சோதனைகளைச் சந்திக்க நேரிடுகின்றது. 


முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் சொன்னதுபோல் ஏகாதிபத்தியவாதிகளின் ,சியோனிச ஆக்கிரமிப்பாளர்களின் அட்டூழியங்களை நாள்தோறும் நாங்கள் பார்த்துவருகிறோம். அதன் விளைவாக இன்று முழு உலக பொருளாதாரத்தையும் பாரிய பாதிப்புக்குள் ஆக்குகிற ஓர் ஆபத்தை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்.எமது நாடு மாறிமாறிவந்த பல அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு,அண்மையிலும் காலநிலை அனர்த்தத்தை நாங்கள் சந்தித்தோம். எனவே இந்த பாதிப்புகளுக்கு மத்தியில் ஒருவாறு எங்களை சமாளித்துக் கொண்டு மீண்டு வந்துவிடலாம் என்று நினைத்ததிருந்தோம். இந்த நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அ மீண்டு வருகின்ற ஒரு சந்தர்ப்பத்தில் ,ஏராளமான உல்லாசப்பயணிகள் எங்களுடைய நாட்டுக்கு வரத்தொடங்கிவிட்டார்கள்,தாராளமாக வெளிநாடுகளில் வேலைசெய்கின்ற எம்மவர்களுடைய அந்நியச்செலாவணி நாட்டின்  இருப்பை முன்னேற்றுவதற்கு பெரிதும் உதவும் என்றெல்லாம் கொஞ்சம் நிம்மதி அடைந்துகொண்டிருக்கிற ஒரு சந்தர்ப்பத்தில்தான் நினையாப் புறமாக இந்த முழு உலகத்திற்கும் ஒரு சாபக்கேடாக நாங்கள் பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்களைப் பேசிக் கொண்டிருக்கிறார். அவரது  எதேச்சாதிகரமான நடவடிக்கை இன்று எங்களுக்கு மாத்திரமல்ல, முழு உலகத்திலும்  பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பின்னணி என்ன என்று மிகத் தெளிவாக எல்லோருக்கும் தெரிகிறது .


சியோனிச இஸ்ரேலுடைய இரண்டரை வருட கால அப்பாவி காசா மக்கள் மீதான தாக்குதலில் சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் மீறிய நடவடிக்கைகளை கண்டு பெரிதாக எதையுமே செய்யாமல் புதினம்  பார்த்துக் கொண்டிருந்த மேற்கு நாடுகளும் அரபுலக நாடுகளும் கூட அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை என்ற அங்கலாய்ப்பு  எங்களுக்கு மத்தியில் இருந்தது .


1979 ஆம் ஆண்டு ஈரானிய புரட்சி வெடித்த போது நாங்கள் எல்லாம் பாடசாலையில் உயர்தரத்தில் படிக்கின்ற மாணவர்களாக இருந்தோம்,அந்தக் காலத்திலும் அதை ஒரு இஸ்லாமிய புரட்சி என்று சொல்வதற்கு கொஞ்சம் பேர் தயங்கினார்கள். ஷீஆ,சுன்னி என்கிற வேறுபாடுகளை மையமாக வைத்து  இஸ்லாமிய புரட்சி என்று சொல்வதற்கு தயங்குபவர்கள்  கொஞ்சம் பேர் இன்னும் இருக்கிறார்கள். 


ஆனால் ,இது ஈரான் தொடுத்த போர் அல்ல.அந்த நாட்டு மக்கள் மீது  திணிக்கப்பட்ட ஒரு போர். அந்தப் போரின் காரணமாக இன்று நாங்கள் எல்லோரும் பாரிய சிக்கலுக்கு ஆளாகிருக்கிறோம். நாளும் பொழுதும் தொலைக்காட்சிகளில் காண்கிறோம். 


நோன்பு கால பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருக்கின்றோம்.  இந்த அட்டூழியங்களுக்கு இறுதி முடிவாக இந்த யுத்தத்தில் ஈரான்  வெற்றி பெற வேண்டும் என்பது உலகளாவிய முஸ்லிம்களுடைய கோரிக்கை மாத்திரமல்ல, எதிர்பார்ப்பு மாத்திரமல்ல எல்லா அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் தேவையுமாகும்.


 இந்த நடவடிக்கைகளுக்கு அனுமதி கொடுக்காத, அங்கீகரிக்காத இரண்டு வல்லரசுகளாக ரஷ்யாவும், சீனாவும் உள்ளன.இந்த பட்டியலில் மேற்குலகில் ஸ்பெயினும், இத்தாலியும்  சேர்ந்திருக்கின்றன .


நாளடைவில் இந்த பாரிய யுத்தம் இவ்வாறான எதேச்சகரமான நடவடிக்கைகளுக்கு இனிமேலும் இந்த ஏகாதிபத்தியவாதிகள் துணிந்துவிடக்கூடாது என்பதற்கான ஒரு படிப்பினையாக மாற வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ; பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறோம்.  


ஐக்கிய அமெரிக்கா தோற்றம் பெற்று 200 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், அந்த 200 வருடங்களில் 16 வருடங்கள் தவிர மற்றைய எல்லா வருடங்களிலும் ஏதாவது ஒரு யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு நாடுதான் அமெரிக்கா. யுத்தமே தன்னுடைய நோக்கம் என்று இருக்கிற ஒரு நாட்டைத்தான் இன்று ஏக வல்லரசு என்று நம்பிக்கொண்டு அதற்கு வால் பிடிக்கிற ஒரு கூட்டம் எல்லா இடங்களிலும் இருக்கிறது.


 அவர்களுடைய இந்த அநியாயமான தாக்குதல்களை பெயர்  குறிப்பிட்டு  கண்டிப்பதற்கு திராணியற்ற நாடுகளில் எங்களுடைய நாடும் இருக்கிறது என்ற ஒரு மிக கேவலமான ஒரு நிலையில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம்.


 அமெரிக்காவையோ,இஸ்ரேலையோ பெயர் குறிப்பிட்டு இந்த தாக்குதல் கண்டிக்கப்படவேண்டும் என்று சொல்லாமல் விட்டது மாத்திரமல்ல ,ஒரு நட்பு நாடான ஈரானுடைய ஆன்மிக தலைவரை- அரசியல் தலைவரை சர்வதேச சட்டங்களை மீறி  அவருடைய ராணுவ தளபதிகளையும்,இன்னும் பலரையும் அவருடைய குடும்பத்தினருடன் சேர்ந்து படுகொலை செய்த நிகழ்வைக்கூட ஒரு பகிரங்க அறிக்கையின் மூலம் கண்டிக்காமல் விட்டால் பரவாயில்லை அனுதாபமாவது தெரிவிக்காத ஒரு நாடு எங்களுடைய நாடு என்ற ஒரு கேவலமான நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். 


இதைப் பற்றி எங்களுடைய வெளிவிவகார அமைச்சரிடம் நான் கேள்வி கேட்டபோது,  அவர் "ஈரானிய தூதரகத்தின் அனுதாப புத்தகத்தில் கைச்சாத்திடப் போகிறேன் "என்று மட்டும் சொன்னார்.அதைத் தவிர வழமையாக ஒரு வெளிநாட்டு அமைச்சு செய்யவேண்டிய ஒரு பணியை செய்யாமல் விட்ட அந்த விவகாரம்   மூன்றாம் உலக நாடுகளில் எங்களைப் போன்ற பலருக்கு ஏற்பட்டிருக்கிற மிகப்பெரிய அவமானம் மாத்திரமல்ல இப்படி அடிமைத்தனமான நிலைக்கு நாங்கள் போய்விட்டோம் என்பதை யிட்டு நாங்கள் கவலைப்படுகிறோம்.


எனவே இன்றிருக்கிற சூழலில்,   எங்களுடைய ஆட்சியாளர்களுடைய இந்த நிலைப்பாடு நீடிக்க கூடாது ; இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும் என நாங்கள் எல்லோரும் ஒருசேரப் பிரார்த்திக்கவேண்டியது அவசியம். 


இந்த யுத்தம் எங்கள் மீது கொண்டு வருகிற அபாயங்கள் அநேகம் உள்ளன. எண்ணெய்  விலையேற்றம் மற்றும் ,தட்டுப்பாடு மாத்திரமல்ல இந்தப் பிரதேச விவசாயிகளுக்கு இனி பசளைகூட சரிவர வந்து சேர மாட்டாது என்கிற மிகப்பெரிய ஒரு பாதிப்பை நாங்கள் சந்திக்கவிருக்கிறோம்.


இந்தப் பின்னணியில் , புனித ரமழான் மாதத்தின் கடாச்சத்தினால் எல்லாம் வல்ல இறைவன் இதற்கு நாங்கள் எல்லோரும் விரும்பும் ஒரு நல்ல முடிவை தர வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன் என்றார்.


 தேசிய காங்கிரஸ் தலைவரும்,முன்னாள் அமைச்சரும்,அக்கரைப்பற்று மாநகர சபை மேயருமான ஏ.எல்.அதாவுல்லாஹ்,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோரும் உரையாற்றினர்.


இந் நிகழ்வில் உலமாக்கள்.தீகவாபிவிகாராதிபதி,இந்து,கிறித்தவ மத குருமார், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.அப்துல் வாசித்,கோடீஸ்வரன்,முன்னாள் பிரதியமைச்சர் பைசல் காசிம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளருமான எம். எம்.முஷர்ரப் ,மு.கா.பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதிர்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,உறுப்பினர்கள்,திகாமடுல்ல மாவட்ட செயலாளர்,அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


-விருட்ச வேந்தன்.


(நன்றி :தமிழன் 18/03/2026)





No comments