விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ஈரான் உதவியதா ? இறுதிப் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் பங்களிப்பு என்ன ?
ஈரானுடனான போரில் யாரும் யாரயும் ஆதரிக்கலாம். அது அவரவர் சுதந்திரம். ஆனால் விடுதலை புலிகளை அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு உதவியதற்காகத்தான் ஈரானை வெறுக்கின்றோம் என்ற கருத்தை ஏற்க முடியாது.
வடக்கில் “கிபீர்” விமானங்கள் குண்டு போடாத இடங்கள் இல்லை, அத்துடன் கடற் புலிகளை அழிப்பதற்கு “டோரா” படகுகளின் பங்களிப்பு பிரதானமானது.
இஸ்ரேலிய தயாரிப்பான கிபீர் விமானமும், டோரா அதிவேக படகும் விடுதலை புலிகளை அழிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு இஸ்ரேல் வழங்கியதுடன், ஏராளமான இராணுவ உதவிகளையும் செய்தது.
சுமார் பத்துக்கு மேற்பட்ட புலிகளின் கப்பல்கள் 2006 தொடக்கம் 2009 வரையில் தாக்கி அழிக்கப்பட்டதனால் புலிகளுக்கான ஆயுத விநியோகம் முற்றாக தடைப்பட்டது.
இந்த கப்பல்கள் அனைத்தும் பல்வேறு நாடுகளில் பதிவு செய்யப்பட்டு அந்நாட்டு கொடிகளுடன் சர்வதேச கடற் பரப்பில் பயணித்ததனால் புலிகளின் கப்பல்களை இலங்கை அரசால் அடையாளம் காண முடியவில்லை.
ஆனால் அமெரிக்கா இதனை மோப்பம் பிடித்து இலங்கை அரசுக்கு துல்லியமான புலனாய்வு தகவல்களை வழங்கியதன் காரணமாக புலிகளின் கப்பல்களை இலங்கை கடற்படையினர் அழித்தனர்.
இவ்வாறு அமெரிக்கா இலங்கை அரசுக்கு இந்த உதவியை செய்திருக்காவிட்டால், புலிகளுக்கான ஆயுத விநியோகம் தடைப்பட்டிருக்காது. அன்றைய போரின் திசையும் மாறியிருக்கலாம்.
அத்துடன் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா தடை செய்திருந்தது. இதுவும் புலிகளுக்கு பாரிய பின்னடைவாகும்.
இவைகளெல்லாம் அமெரிக்காவும், இஸ்ரேலும் விடுதலை புலிகளை அழிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளாகும்.
மேலும், இரண்டு வருட காசா போரில் கொத்துக் குண்டுகளினால் சுமார் ஒரு லட்சம் வரையிலான மக்களை இஸ்ரேல் கொலை செய்தபோது எவரும் அனுதாபப்படவில்லை. ஆனால் ஈரான் இஸ்ரேல் மீது கொத்துக் குண்டுகளை பாவிப்பதாக சிலர் புலம்புவது வேடிக்கையாக உள்ளது.
எனவேதான் சில நண்பர்கள் இஸ்ரேலை ஆதரிப்பதனை நாங்கள் தவறு என்று கூறவில்லை. ஆனால் விடுதலை புலிகளை அழிப்பதற்கு ஈரான் உடந்தையாக இருந்ததன் காரணத்தினால்தான் இஸ்ரேலை ஆதரிக்கிறோம் என்பவர்கள் எவரும் விடுதலை புலிகளின் உண்மையான விசுவாசியாக இருக்க முடியாது. அவ்வாறாணவர்களது நோக்கம் வேறு.
இலங்கையும், ஈரானும் நீண்டகால நட்பு நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, ராஜதந்திர உறவுகள் உள்ளது. ஆனால் அது எந்தவகையிலும் இராணுவ ரீதியிலானதல்ல.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments