ஈரான் – அமெரிக்க மோதலால் பாலஸ்தீன் பிரச்சினையில் ஏற்பட்ட தாக்கமும், புதிய திருப்புமுனையும்.
கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்பார்கள். இதனை அரசியல் அறிவியல் மொழியில் குறிப்பிடுவதென்றால், “போர் என்பது ஒரு தீர்வினை நோக்கியது”.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கும், பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையில் ஏற்பட்ட இரண்டு வருட கடுமையான போருக்கு பின்பு போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த போர்நிறுத்தமானது அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் நலன் சார்ந்தாக உள்ளதே தவிர, இதனால் பாலஸ்தீனர்களுக்கு எந்தவித நன்மைகளும் இல்லை.
அத்துடன் போர் நிறுத்த நிபந்தனையானது பாலஸ்தீன் போராளிகளுக்கே தவிர, இஸ்ரேலுக்கானதல்ல. ஏனெனில் காசாவில் வழக்கமான விமான குண்டு தாக்குதலையும், மேற்குக்கரை பிரதேசத்தில் பாலஸ்தீனர்களை பலாத்காரமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் தொடர்ந்து இஸ்ரேல் ஈடுபட்டு வருகின்றது.
இதற்கு மத்தியஸ்தர்களாக எகிப்தும், கத்தாரும் ஈடுபட்டிருந்த போதிலும், அமெரிக்காவின் கட்டளையை மீறி பலஸ்தீனர்களுக்காக இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையினை ஓரம்கட்டிவிட்டு டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் Board of Peace என்னும் சபையினை உருவாக்கி, அதில் தனது நண்பர்களை மாத்திரம் இணைத்துக்கொண்டு, காசா பிரதேசத்தினை முற்றிலுமாக கையகப்படுத்தும் நடவடிக்கையினை மிக தந்திரமாக மேற்கொண்டு வந்தனர்.
அவ்வாறு காசாவினை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைக்கு தடையாக இருக்கின்ற பாலஸ்தீன ஆயுத குழுக்களின் ஆயுதங்களை முற்றாக களைவதன் மூலம் எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கு எந்தவித தொந்தரவுகளும் இருக்காது என்பது இவர்களது திட்டமாகும்.
ஆயுத களைவுக்கான நடவடிக்கையினை வேகமாக முன்னெடுத்து வந்ததுடன், காசா என்னும் சிறிய நிலப்பரப்புக்குள் இருபதாயிரம் வெளிநாட்டுப் படைகளை நிறுத்துவதுடன், அதில் ஐயாயிரம் அமெரிக்க படைகளை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
சுற்றிவர இஸ்லாமிய நாடுகள் இருந்தும், பாலஸ்தீனர்கள் தனித்துவிடப்பட்ட நிலையில்தான், ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆரம்பித்தது. இந்த போர் பாலஸ்தீனர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பின்பு காசாவுக்கு படைகளை அனுப்ப தயாராக இருந்த சில நாடுகள் பின்வாங்கியுள்ளதுடன், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இருப்பும் கேள்வியாகியுள்ளது.
எனவேதான் இந்த போர் ஈரான் – அமெரிக்க விவகாரம் மட்டுமல்ல, பாலஸ்தீன பிரச்சினையின் இறுதி தீர்வுக்கான திருப்புமுனையாகவும் அமையலாம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments