புத்தளம் தில்லையடியில் முச்சக்கர வண்டி சாரதியை கொலை செய்த சந்தேக நபர் கைது
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புத்தளம், தில்லையடி – ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் கடந்த சனிக்கிழமை (21) இரவு தனது முச்சக்கரவண்டியில் வாடகை பயணம் ஒன்றிற்காகச் சென்ற அப்துல் லத்தீப் என்ற 75 வயதுடையவர் என்பது கண்டறியப்பட்டது. அன்றைய இரவு 9.30 மணியளவில் சந்தேகநபர் உயிரிழந்தவரின் வீட்டிற்கு வந்து, முச்சக்கர வண்டியை வாடகை அமர்த்தி அழைத்துச் சென்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முச்சக்கரவண்டியை கொள்ளையிடும் நோக்கில், சந்தேகநபர் சாரதியின் கழுத்துப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, சடலத்தை கீழே தள்ளிவிட்டு முச்சக்கரவண்டியை எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் புத்தளம் முல்லை வீடமைப்புத் தொகுதியில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் சந்தேகநபர் முச்சக்கரவண்டியை கைவிட்டுச் சென்றுள்ளதுடன், பொலிஸார் அந்த வாகனத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை (22) அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்பதும், பணம் மற்றும் முச்சக்கரவண்டியை கொள்ளையிடுவதற்காகவே இந்தக் கொலையைச் செய்துள்ளதாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments