JobVibe.lk - Sri Lanka Job Portal

அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவது அடக்கு முறைகள் இடம்பெற வாய்ப்பளிக்கும் எச்சரித்திருந்ததாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் சபையில் தெரிவிப்பு

"அனர்த்த முகமைத்துவ சட்டத்தின் கீழ் அனர்த்த நிலைமையை அறிவித்து , உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள  வழிவகைகள் இருக்கத்தக்கதாக, அவசரகால சட்டத்தை அமல்படுத்துவது பல்வேறு அடக்குமுறைகள் இடம் பெற வாய்ப்பளிக்கும் என்பதாக எச்சரித் திருந்தோம்" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.


பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீது    வெள்ளிக்கிழமை(6) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்  இதனைக் கூறினார்.


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,


கௌரவ தலைமை தாங்கும் குழுக்களின் பிரதித்  தவிசாளர் அவர்களே, அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பது தொடர்பான இந்த பிரேரணை குறித்து,

எனக்கு முன் பேசிய உறுப்பினர் உட்பட, தற்போது உரையாற்றிய  உறுப்பினர்கள் பலர் இந்த அவலநிலைக்கு ஆளான மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு  திரும்புவதற்காக,

அவசரகால அனர்த்த விதிமுறைகளை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஒருவரை நியமிக்க வேண்டியதன் அவசியத்தையும் கருத்திற் கொண்டு, இதனை மேலும் நீடிக்க வேண்டும் என்று கூறினார்கள்.


ஆனால், அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் அனர்த்த நிலைமையை அறிவித்திருந்தால், அந்தச் சட்டத்தின் 10, 11 மற்றும் 12-வது பிரிவுகளின் கீழ் தேவையானவற்றைச் செய்திருக்க முடியும் என்பதை நாங்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம்.


ஏனெனில் இது ஒரு அவசர நிலைமை. குறிப்பாக ஒரு அவசரகால நிலைமையை (Emergency situation) அறிவிக்கும்போது, இந்த விதிகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காகவே அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் அனர்த்த நிலையை அறிவித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.


ஆனால் அவற்றை பயன்படுத்தாமல், இந்த அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதால் பல்வேறு அடக்குமுறைகள் இடம்பெற வாய்ப்பிருப்பதாக நாங்கள் எச்சரித்திருந்தோம்.


அவ்வாறிருக்க, இப்போது அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கவும் அவர்களைப் பாதுகாக்கவும் எல்லாவற்றையும் செய்துள்ளோம் என்று எவ்வளவு பெருமையாகப் பேசினாலும்,

சாதாரண சட்டத்தின் கீழ் செய்திருக்க வேண்டிய காரியங்களைக் கூட, இந்த அவசரகாலச் சட்டத்தை வைத்துக்கொண்டு செய்யப்பட்டிராத ஒரு சூழல் நிலவுவதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


ஒரு சம்பவத்தை உதாரணமாகச்  சொல்வதானால்,சென்ற டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி ஒரு பிரதேசத்தில் வசிக்கும் மக்கள், தமது உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்த ஒரு பாரிய கற் குவாரி அகழ்வை (Stone Quarry) நிறுத்துவதற்கு ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதி உதவி கோரியிருந்தனர்.

இந்தக் கல் குவாரி அகழ்வு இலுக்வத்தை -உருலேவத்த வீதியை முழுமையாக உள்வாங்கியுள்ளது. கிரிவவுல பிரிவில் உடுநுவர பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் இந்தக் கல் குவாரி உள்ளது.


அங்குள்ள மொனரகந்த மற்றும் சிந்துரன்கந்த ஆகிய இரண்டு மலையடிவாரங்களிலும் பெரிய கல் குவாரிகள் உள்ளன. அவை இயங்கிக் கொண்டிருப்பதால் கிராம மக்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

 மண்சரிவுகள் ஏற்படுவது மட்டுமன்றி, வீடுகள் அமைந்திருந்த   இடங்களிலிருந்து மக்கள் இடம்பெயர வேண்டியுள்ளது. வீடுகள் மட்டுமல்ல, மரங்கள், கால்வாய்கள் என அனைத்தும் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.


இவ்வளவு நடந்தும் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் எவரும் அந்தப் பகுதிக்குச் செல்லவில்லை. அங்குள்ள பொத்குல் விகாரை எனும் புராதன ரஜமகா விகாரைக்குச் செல்லும் வீதி கூட முழுமையாக உள் வாங்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் அதைக் கவனிக்கவில்லை.

அங்கிருந்து 24 வீடுகள் அகற்றப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.


 ககுல்தெனிய பிரதேசத்தில் 38 வயது இளைஞன் , அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.


அந்தக் கல் குவாரிக்கு அருகிலுள்ள பகுதியில் வீடு முழுமையாகத் தரைமட்டமாகிப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னரே, 2016 இல் ரம்மலக என்ற கிராமத்தில் இதேபோன்ற சம்பவம் நடந்தபோது, இந்தக் கல் குவாரியை நிறுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

தற்போது அந்த உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. 


உடுநுவர பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகள் இதற்கு அனுமதி வழங்கியது குறித்துப் பெரிய பிரச்சினை உள்ளது.


இது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல. பொத்குல் விகாரைக்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் மொனரகந்த, சிந்துரன்கந்த பகுதிகளில் இவ்வாறான கற் குவாரிகள் இயங்க எப்படி அனுமதி வழங்கப்படுகிறது என்பது கேள்வியாக உள்ளது.


இன்றைய (6)'டெய்லி மிரர்' (Daily Mirror) பத்திரிகையின் தலைப்புச் செய்தியைப் பார்த்தால், "சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இலங்கை இன்னும் உலகின் மிக மோசமான நாடுகளில் ஒன்றாக உள்ளது" என்று வந்துள்ளது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, உயிரிழப்புகளை உண்டாக்கும் இவ்வாறான கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் செயற்பாடு குறித்து அதிகாரிகள் இன்னும் அந்தப் பகுதிக்குச் சென்று ஆராயவில்லை.


அங்கு எம்.பிக்கள் கூட யாரும் செல்லவில்லை. இவ்வாறான சூழலில், அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்திச் சாதாரண சட்டத்தின் கீழ் செய்ய வேண்டியவற்றைக் கூடச் செய்யாத இந்த அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனம் உள்ளது என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி, இப்பகுதியில் எழில் மிகு பூங்கா ஒன்றை அமைப்பதற்காக நிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


 லங்காத்திலக விகாரை, எம்பக்க விகாரை, கடலாதெனிய விகாரை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரைகளுக்கு இடையே உள்ள இந்த பொத்குல் விகாரை ரஜமகா விகாரைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


வீதிகள் அனைத்தும் சீரழிந்துவிட்டன. இந்தக் கல் குவாரியைத் தொடர அனுமதி வழங்கிய அதிகாரிகளே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அவர்கள் அங்கு வரவில்லை.தேசிய கட்டிட ஆய்வு நிறுவன  (NBRO) அதிகாரிகளும் இன்னும் அங்கு செல்லவில்லை.

மக்களுக்குத் தமக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து எந்தத் தெளிவும் இல்லாத நிலை நீடிக்கிறது. இது குறித்து இந்த பாராளுமன்றத்தின்  கவனத்திற்குக் கொண்டுவருவதுடன், மக்கள் ஜனாதிபதிக்கு வழங்கிய அந்த மகஜரையும்  நான் சபையில் சமர்ப்பிக்கிறேன்.


அதேபோல் உடுநுவரவுக்கு அருகிலுள்ள கழுகமுவ பிரதேசத்திலும் மக்கள் ஒரு பெரிய போராட்டத்திற்குத் தயாரானார்கள். ஜனாதிபதி அங்கு சென்றபோது அவரிடம் ஒரு மகஜரை கையளித்தனர்.

அதன் பிறகு அதிகாரிகள் வந்து ஒரு அறிக்கையை வழங்கினர். ஆனால் அது ஏற்கனவே பாதிக்கப்பட்ட மண்சரிவு பகுதி குறித்து வழங்கப்பட்ட பழைய அறிக்கையின் பிரதிதான். தற்போதைய பாதிப்புகள் குறித்து எந்த மதிப்பீடும் செய்யப்படவில்லை.


மக்கள் போராட்டத்தில் ஈடுபடும்போதுதான் அதிகாரிகள் சிலர் அங்கு வருகிறார்கள். பழைய எல்பிட்டிய பகுதியிலும் இன்னும் யாரும் சென்று பார்க்கவில்லை.


அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் என்ன செய்கிறது? அவசரகாலச் சட்டம் இல்லாமலேயே சாதாரண சட்டத்தின் கீழ் செய்ய வேண்டியவற்றைக் கூட இவர்கள் செய்வதில்லை.


மேலும் கிழக்கு மாகாணத்தில் மாதெல் வலை மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்குப் பெரிய பிரச்சினை உள்ளது. இயந்திரங்களைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரினாலும் அது சரியாக வழங்கப்படுவதில்லை.

சுனாமி மற்றும் பேரழிவுகளுக்குப்  பிறகு மீனவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகளை வழங்குவதில் பாரிய தாமதம் நிலவுகிறது.


இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது குறித்து எமது அதிருப்தியைத் தெரிவிக்கிகிறோம்.


 இந்த அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது முற்றிலும் தேவையற்ற ஒன்றாகும். எனவே இதனை நீக்க  வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.


(ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال