தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழியர் போராட்டம்
நூருல் ஹுதா உமர்
அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் 21.02.2026 மற்றும் 22.02.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஏற்பாட்டில் இன்று (25.02.2026) மதிய இடைவேளையில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சி.எம்.ஏ. முனாஸ் தலைமையேற்றதுடன், செயலாளர் எம்.எம்.எம். காமில் அவர்களின் நெறிப்படுத்தலில் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்கள் மற்றும் நிர்வாகப் பிரிவுகளைச் சேர்ந்த பெருமளவான ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் போது, பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள விகிதம், மாதாந்த ஈடுசெய்யும் கொடுப்பனவு (MCA), விசேட கொடுப்பனவு, அதிக நேரக் கணக்கீடு, ஓய்வூதிய நலன்கள் மற்றும் நியமன நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் உடனடி தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
முக்கிய கோரிக்கைகளாக அரச சேவைக்கும் பல்கலைக்கழக சேவைக்கும் இடையே நிலவி வந்த சம்பள விகித வேறுபாட்டை திருத்தி, பழைய நிலையை மீட்டெடுத்தல், MCA கொடுப்பனவை 36% ஆகக் குறைத்த நடவடிக்கையை திருத்தி, உடன்பாட்டின்படி 75% ஆக உயர்த்தல், ரத்து செய்யப்பட்ட விசேட கொடுப்பனவை மீண்டும் வழங்குதல், ஜனாதிபதி அறிவித்த வழிமுறைகளுக்கு ஏற்ப அதிக நேரக் கணக்கீட்டை திருத்துதல் போன்றன முன்வைக்கப்பட்டது.
மேலும் மேலதிக கோரிக்கைகளாக ஓய்வூதிய நலன்களை மேம்படுத்தல், தையல் கூலி, கடன் எல்லைகள் உள்ளிட்ட கொடுப்பனவுகளை பொருளாதார நிலைக்கு ஏற்ப திருத்துதல், நியமன நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தல், இடர் கடன் சுற்றறிக்கையை திருத்தி ஊழியர் நலத்திட்டங்களை வலுப்படுத்தல் போன்றன முன்வைக்கப்பட்டது. மேலும், இப்போராட்டத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்து இறுதி முடிவுகளை எடுக்க 01.03.2026 அன்று கொழும்புவில் நேரடி சந்திப்பு நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
அரசாங்கம் உடனடி தீர்வுகளை வழங்காவிட்டால், தொடர்ச்சியான மற்றும் தீவிரமான போராட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





No comments