Breaking News

கல்முனையும், சாய்ந்தமருதுவும் கூறு போடப்பட்டுவிடும் என சந்தேகங்கள் இருந்தன, நற்பிட்டிமுனை உரையில் மு.கா. தலைவர் ஹக்கீம்

(தொகுப்பு: " விருட்சவேந்தன்")

"மர நிழலில் மகிழ்வுறுவோம்"என்ற தொனிப் பொருளில் அண்மையில், கல்முனைத் தொகுதி,நற்பிட்டிமுனைக்கு சென்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய ஆழமான உரை


இந்த கட்சியில் அவரவருக்கு கிடைக்க வேண்டிய அந்தஸ்து என்பது ஒவ்வொரு கட்டத்திலும் கிடைத்தாகவேண்டும், அப்படி கிடைக்காதுவிட்டாலும் இவர்கள் எல்லோருடைய பங்களிப்பு கட்சியின் தலைவருடைய தரப்படுத்தலில் முழுமையான அங்கீகாரத்துடன் மறக்கப்படமுடியாத தொன்றாக இருக்கும் என்பதை மிகத் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


நற்பிட்டிமுனையில் ஏற்பட்டிருக்கின்ற இந்த புதிய உற்சாகபிரவாகம் எல்லோருக்கும் ஒரு நல்ல தெம்பை தந்திருக்கிறது. கல்முனை மாநகர சபைத் தேர்தலில் நற்பிட்டிமுனையில் நாங்கள் தொகுதியை வெல்வதற்கு இன்று தம்பி நிரோசை ஒரு வேட்பாளராக வைத்து அந்த வெற்றி சம்பந்தமாக உற்சாகமாக கதைக்கின்ற அதேநேரம், மருதமுனையில் நான்கு வட்டாரங்களிலும்  நாங்கள் நிச்சயமாக வெல்லுவோம் என்ற  உறுதியோடு  இருக்கிறோம்.


அந்த நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு  இறுதியாக நகர மண்டபத்தில்  கூட்டத்தை நடத்தியபோது அந்த புதிய உற்சாகத்தை அங்கும் கண்டோம்.


கல்முனை மாநகரசபையின் தேர்தல் பிற்போடப்பட்டதும் ஒருபுறத்தில் நல்லதென்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால்,கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரையும் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைமுறையில் இருந்த காலத்திலிருந்து நாங்கள் ஆட்சியில் இருந்துவந்திருக்கிறோம்.


எங்களிடத்திலிருந்து ஆட்சியை பறிக்கவேண்டும் என்பதற்காக கல்முனை நகரை கூறு போடுவதற்கு பலவிதமான சதித்திட்டங்கள் நடந்தன. ஆனால் அவையெல்லாம் இன்று பிசு,பிசுத்துப்போய் விட்டன. 


இந்தப் பின்னணியில் செயல்பட்ட எல்லோரும் என்னைப்பொறுத்தமட்டில் ஒற்றுமைப்பட்டு இந்த கட்சியை மீண்டும் வெற்றிபெற வைப்பதற்கான ஒரு சூழல் உருவாகி வருகிறது என்று நாங்கள் நினைக்கிறோம்.


கல்முனையும், சாய்ந்தமருதுவும் கூறுபோடப்பட்டுவிடும் என்று சில சந்தேகங்கள் இருந்தன. சாய்ந்தமருதுக்கென்று ஒரு அபிலாஷை இருக்கிறது அது நிறைவேறவேண்டும் என்று நாங்களும் எதிர்பார்க்கிறோம், அது நடக்கின்றபோது நற்பிட்டிமுனை அநாதரவாக கைவிட்டுவிடப்படக்விடக்கூடாது என்பதிலும் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.


இவற்றையெல்லாம் செய்கின்றபோது கட்சித் தலைமை முழுமையான அங்கீகாரம் கொடுப்பதற்கு தயங்கியதற்கு காரணமே இந்த ஊரை நாங்கள் முழுக்க அநாதரவாகவிட்டுவிடமுடியாது என்பதுதான்.


புத்திஜீவிகளை பறிகொடுத்த நிலைவரம்


இனப்பிரச்சினை தீவிரமடைந்திருந்த காலத்தில் சாதாரணமான விலையை கொடுத்த ஊரல்ல இது. நிருவாக சேவை உயர் அதிகாரி பளீலைப் போன்ற புத்திஜீவிகளை நாங்கள் பறிகொடுக்கவேண்டிய ஒரு நிலைவரம் இங்கு இருந்தது. அதிலிருந்து மிகப்பெரிய நெருக்குவாரங்களை தொடந்தேர்ச்சியாக நாங்கள் அந்தகால கட்டங்களில் சந்தித்தோம்.


தலைவர் வாழ்ந்த காலகட்டத்தில் சில விடயங்களில் அவர் மிக கண்டிப்பாக இருந்தார்.  எது நடக்கவேண்டும்,எது நடக்கக்கூடாது என்பதில் சில விடயங்களை தெளிவாக அவர் சொல்லியிருந்தார்.


கல்முனை மாநகரத்தில்  ஒரே இரவில் ஒரு பிரதேச சபையை நகர சபையாக்கி மாநகர சபையாக்குகின்ற பெரிய அதிசயத்தை எங்களுடைய தலைவர் நிகழ்த்திக் காட்டினார்.  அதை நடத்தியபோது பல விடயங்களை அன்று சொல்லிக்கொண்டுபோனார்கள். 


அவரது காலாத்திலும் சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகம் பெற்றுத்தருகின்ற விவகாரம்  சொல்லப்பட்டது அதை மீண்டும் நான் இங்கு சொல்லவரவில்லை. 


முஸ்லிம் காங்கிரஸிடமிருந்து கல்முனை மாநகரசபை பறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் சில விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இருந்தாலும் அதற்கு பின்னால் இருக்கிற கல்முனை,சாய்ந்தமருது  இரண்டு பிரதேசங்களிலும் எல்லாப் பதவிகளும் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் .எம் பி ஒர் ஊரில் இருந்தால் மேயர் இன்னோர் ஊரில் இருக்கவேண்டும் என்றெல்லாம் அபிப்பிராயங்கள் இருந்தன ஆனால், இவையெல்லாம் சிலநேரங்களில் சில காரணங்களுக்காக கைகூடியிராது. என்னைப்பொறுத்தமட்டில், மறைந்த தலைவர் எதை தன்னுடைய அந்திம காலத்தில் செய்ய நினைத்தாரோ அதைத்தான் இந்தத் தலைமையும் இந்த கட்டத்தில் செய்கின்றது . முஸ்லிம் காங்கிரஸ் நலிவடைந்து போனதாக சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் .ஆனால், இந்த இயக்கத்தில் இன்னும்  வடகிழக்கிலும்,வடகிழக்கிற்கு வெளியிலும் முஸ்லிம் காங்கிரஸுடைய போராளிகள் முஸ்லிம் காங்கிரஸுடைய போராளிகளாகத்தான் இருக்கிறார்கள் ஆனால் கொஞ்சம் விரக்தியோடும், சற்று சலிப்புத்தன்மையோடும் அவர்கள் இருந்தாலும் இந்த கட்சி மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்பதில் எல்லோருக்கும் பெருவிருப்பமிருக்கிறது.


நல்லது நடக்கின்ற போது எல்லோரும் அதை கொண்டாடுகிறார்கள். எங்களுடைய சகோதரர் நளீம் ஒரு பெரிய தியாகத்தைச் செய்தார்.  பாராளுமன்ற ஆசனத்தை மூன்றுமாதத்தில் திரும்ப கையளித்துவிட்டு ஒர் உள்ளூராட்சி சபைக்கு போட்டியிட அவர் தயாரான விடயம் எல்லோராலும் பாரிய தியாகமாகப் பார்க்கப்பட்டது.


அதைத் தொடர்ந்து நாங்கள் சுழற்சி முறையில் பாராளுமன்ற ஆசனம் வழங்குகின்ற விவகாரத்தில் எங்களுக்கு அது   வாய்ப்பாக போனது அதை நாங்கள் பயன்படுத்தினோம்.


எங்களுக்கெதிராக குழிபறிக்க நினைத்தவர்கள் இந்த கட்சியின் அம்பாறை மாவட்டத்திலுள்ள எழுச்சியை குறைக்கவேண்டும் என நினைத்தவர்களுக்கு எங்களுக்கு நினையாபுறமாக தேசியப்பட்டியலிலிருந்து இரண்டு ஆசனங்கள் கிடைக்கிற ஒரு பேறு எங்களுக்கு கடந்த தேர்தலில் கிட்டியது. 


தலைவரைத் தோற்கடிக்கவேண்டும் என்பதற்கு மிகப் பெரிய பிரயர்த்தனத்தை கண்டியில் செய்தார்கள். முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் நலிவடைந்திடக்கூடாது என்பதற்காக கடந்த பாரராளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய சவால்களை சந்தித்தோம் .


ஆனால் அதைத் தொடர்ந்துவந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏதோ ஒரு அலையில் அள்ளுப்பட்டுப்போன முஸ்லிம் சமூகம் கொஞ்சம் விழித்துக்கொண்டமாதிரி திரும்பவும் இந்த வடகிழக்கு பிரதேசத்தில் ஓர் உள்ளூராட்சி சபையைத்தானும் கைப்பற்றமுடியாத நிலைக்கு ஆட்சியாளர்களை கொண்டுவந்து வைத்திருக்கிறது என்பது ஒரு பெரிய செய்தியைச் சொன்னது .அதன் பின்னணியில் இன்னும் அவர்கள் முயற்சியை கைவிடவில்லை,முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.சட்டத்திற்கு புறம்பாக,சட்டத்திற்கு அமைவாக என்று பல விடயங்களை செய்யத்தலைப்பட்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நாங்கள் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருக்கிறோம்.


அதேநேரம், இந்த கட்சியுடைய உற்சாகம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இன்று இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்களைப் பலப்படுத்துவது என்ற இந்த முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். அந்த முயற்சியில் இன்று செய்யப்பட்ட நியமனங்கள் இந்த இயக்கத்தை ஒரு புதிய யுகத்திற்கு இட்டுச் செல்வதற்கான ஒரு ஆரம்பப்படியாக இருக்கட்டும்  என்று நாங்கள் எல்லோரும் விரும்புகிறோம்


அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும்


இந்த இயக்கம் அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட்டாகவேண்டும்,அதற்கான சந்தர்ப்பமாக இளைஞர்களை நாங்கள் தயார்படுத்தவேண்டும். இது சாமானியமான இயக்கமல்ல. எதிர்கட்சியில் இருந்தபோது இந்த இயக்கம் நலிவடையவில்லை; பலமடைந்திருக்கிறது என்பதற்கு நிறைய முன்னுதாரணங்களை நாங்கள் கண்டிருக்கிறோம்.


தலைவருடைய காலத்தில் எதிர்கட்சியில் எப்படி வீரியமாக மறைந்த தலைவ இந்த இயக்கத்தை புடம்போட்டார்கள் என்பதை புரிந்துகொண்ட போராளிகள் நிறைய இருக்கிற ஊர் இது.


என்னைப்பொறுத்தமட்டில் ,தலைவர் எதை அந்திம காலத்தில் செய்ய தலைப்பட்டாரோ, அதைத்தான் நானும் செய்துகொண்டிருக்கிறேன். தலைவர் அவருடைய அந்திம நாட்களில் இந்த கட்சிக்கு வெளியில் மாற்று முகாம்களிலிருந்த எல்லா அரசியல் பிரமுகர்களையும் நேரடியாகச் சந்தித்து அவர்களையெல்லாம் இந்த கட்சிக்குள் அழைத்தார்.ஒருவரையும் விட்டுவைக்கவில்லை .ஈற்றில் தலைவரின் திடீர் மரணம் நடந்த பிறகு இந்த மண்ணிலிருந்த சகல மாற்றுக்கட்சி முன்னணி அரசியல்வாதிகளும் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்வாதிகளாக மாறினார்கள் என்பதுதான் உண்மை.


கல்முனையை பொறுத்தமட்டில் சகோதரர் ஏ.ஆர்.மன்சூர் கட்சியோடு இணைந்தது மாத்திரமல்ல ,இன்று அவருடைய புதல்வர் ரஹ்மத் மன்சூர் இந்த கட்சியுடைய பொருளாளராக விளங்குவதோடு, கட்சியின் கல்முனை மாநகர பிரதி மேயராகவும் இருந்தார்.  


இவ்வாறு ஒவ்வோர் இடத்திலும் நிந்தவூரில்  எம்.எம்.முஸ்தபாவாக இருக்கட்டும், அட்டாளைச்சேனை டொக்டர் ஜலால்தீனாக இருக்கட்டும் எங்களுடைய அக்கரைப்பற்று முன்னாள் எம். பி உதுமாலெப்பையாக இருக்கட்டும், றிஸ்வி சின்னலெப்பையாக இருக்கட்டும் என்று இப்படி ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.எல்லோரும் இந்த கட்சிக்குள் நான் தலைமைத்துவம் பெற்ற பிற்பாடு முழுமையாக தங்களை இணைத்துக்கொள்கிற அளவிற்கு வந்தார்கள். சிலர் முதுமை அடைந்திருந்த காரணத்தினால், இயங்குநிலை அரசியலில் அவர்களை நாங்கள் நீண்டகாலம் பார்க்கமுடியவில்லை இருந்தாலும் மானசீகமாக இந்த இயக்கத்தை அங்கீகரித்தவர்களாகத்தான் அவர்கள் எல்லோரும் ஈற்றில் மாறினார்கள்.


தலைவர் இருந்த காலத்தில் இந்த நாட்டின் அரசியலில் மிக மூத்த அரசியல் பிரமுகர் மாத்திரமல்ல முஸ்லிம்களின் அரசியலில் வேறு எந்த அமைச்சரும் செய்திராத  மாபெரிய சேவையை செய்த கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்களும் இந்த கட்சியில் சேர்ந்துகொண்ட பிறகு முழுமையாக தன்னை இணைத்துக்கொண்டார்.


இந்த இயக்கம் காலத்தின் தேவை, 


இந்த இயக்கம் என்பது காலத்தின் தேவையாக இருந்தது, அது ஒவ்வொரு கட்டத்திலும் உணரப்பட்டபோது, ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தோடு தங்களை இணைத்துக்கொண்டார்கள். மிகப்பெரிய விரோதம் பாராட்டியவர்கள் இந்த இயக்கத்தினுடைய வளர்ச்சியைப்பத்தி மாற்று சிந்தனையோடு இருந்தவர்கள் எல்லோரும் படிப்படியாக, குறிப்பாக வடகிழக்கு மண்ணில் முழுமையாக இந்த இயக்கத்தை அங்கீகரிக்கிற ஒரு நிலைமையில்தான் கடைசியில் தங்களுடைய அந்திம காலத்தை அவர்கள் சந்தித்தார்கள்.  


அது தலைவருடைய இறுதி கட்டங்களில் அவர் எடுத்த மிக வேகமான முயற்சி, ஒரு சாமானியமான முயற்சியல்ல, வீடுவீடாக போய் ஒவ்வொருவரையும் ஆரத்தழுவி இந்த இயக்கத்தோடு அவர்களை இணைக்கிற பணியைத்தான் அவர் செய்தார்.இன்று இயக்கத்திலிருந்து தூரப்போனவர்கள் இந்த இயக்கத்தோடு வருகிற ஒரு காலமாக இது மாறி வருகிறது என்பதை நாங்கள் இன்று பார்க்கிறோம்.  


இன்னுமொரு தேர்தல் வருவதற்கு முன்பாக  முழுமையாக அது உள்ளூராட்சி சபை தேர்தலாக இருக்கட்டும் அல்லது மாகாண சபைத் தேர்தலாக இருக்கட்டும் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மீள் இணைவுகள் என்பது சாத்தியப்படலாம்,அவ்வாறு  சாத்தியப்படும் என்பதில் நான் நம்பிக்கையுடையவனாக இருக்கிறேன். 


எனவே யாருக்கும் நாங்கள் கதவு மூடியவர்களாக இல்லை,இது எல்லோரையும் அரவணைக்கிற இயக்கம் மாத்திரமல்ல, இந்த சமூகம் அரசியல் ரீதியாக பலமான ஒரு இயக்கமாக மாறவேண்டும் என்பதற்காகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் அமைக்கப்பட்டது.


தலைவருடைய மறைவுக்கு பிறகு வெவ்வேறு காரணங்களுக்காக சிதைவுகள் ஏற்பட்டாலும், அவையெல்லாம் சரிசெய்யப்பட்டு மீண்டும் ஒரு பலமான இயக்கமாக வருவதற்கான நல்ல சைகைகள் தென்படுகின்ற  காலம் இது.


இவையெல்லாம் நடைபெறுகிற காலத்தில் அதற்கு உறுதுணையாக இளைஞர்கள் தயார்படுத்தப்படவேண்டும், 


இந்த இயக்கத்துடைய பூர்வீகம் சம்பந்தமாக இதனுடைய பலம் சம்பந்தமாக, பலவீனங்களை களைவது சம்பந்தமாக அவர்களோடு நாங்கள் அளவளாவ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இளைஞர்களை ஒற்றுமைப்படுத்துகிற இந்த முயற்சியை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். அது நிச்சயமாக இந்த இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்துகிற ஒரு செயல்பாடாக சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கையிருக்கிறது.





No comments