JobVibe.lk - Sri Lanka Job Portal

இ-விசா மோசடி வழக்கு விசாரணை மீண்டும் மார்ச் 25 இல் சுமந்திரன் , ஹக்கீம்,பாட்டலி சம்பிக்க உயர் நீதிமன்றில் வாதம்

இலத்திரனியல் விசா (E-visa)வழங்கும் செயல்முறையை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உடன்படிக்கைகளின் சட்டப்பூர்வத்தன்மையை மீள்பரிசீலனைக்குட்படுத்த  பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர்  திங்கட்கிழமை (09) உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் சட்டமுதுமானி ரவூப் ஹக்கீம் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி  எம்.ஏ.சுமந்திரன்,  பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் சர்ச்சைக்குரிய அந்த அமைச்சரவை முடிவை எதிர்த்து தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைகள் மனுக்கள் திங்கட்கிழமை (9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதன்போதே, சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிரிவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிரிவர்தன, இ-விசா வழங்கும் செயல்முறை தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் சட்டப்பூர்வத்தன்மையை மீள்பரிசீலனை செய்ய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் முடிவு செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


இதுதொடர்பான கருத்தாடல்கள் தற்பொழுது இடம்பெற்று வருவதாகவும், அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தெரிவிக்க ஒரு திகதியை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். 


அப்போது, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணத்தை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இந்த உடன்படிக்கைகளின் சட்டப்பூர்வத்தன்மையை இந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் மீள்பரிசீலனை செய்வதானாலும்,  அவற்றின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து நீதிமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்று கூறினார்.

இந்த செயல்முறையின் மூலம் நாடு பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் இதன் மூலம் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கூறினார். 


இந்த வழக்கில்  மனுதாரர் ஒருவரான சட்டமுதுமானி ரவூப் ஹக்கீம் , நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணத்தை முன்வைத்து,நீதிமன்றம்  இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்த காலக்கட்டத்தில், அதாவது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இ-விசாக்கள் வழங்கும் செயல்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மாற்றத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து, நாடு பாரிய இழப்பைச் சந்தித்ததாகக் கூறினார்.


இந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர், இதனை ஆராய்ந்து இது தொடர்புடைய உடன்படிக்கைகளை மீள்பரிசீலனை செய்வதற்காக கருத்தாடல்களை நடத்தி வருவதாகக் கூறியபோதிலும், இந்த இ-விசா வழங்கும் செயல்முறைக்கு புதிய டெண்டர்கள் வழங்கப்பட வேண்டுமானால், பகிரங்க விலைமனுக்கள் கோரப்பட்ட பின்னரே அதைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.


இவ்வாறு செய்யாவிட்டால், முன்னர் நடந்த அதே  தவறு மீண்டும் நிகழும் வாய்ப்புள்ளது என்றும் ரவூப் ஹக்கீம்  சுட்டிக்காட்டினார். எனவே, இந்த மனுக்களை விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்தை அவர் கோரினார்.


 இதன்போது, தொடர்புடைய உடன்படிக்கைகளின் சட்டப்பூர்வத்தன்மையை ஆராய்ந்து முடிவுகளை எடுக்க பிரதிவாதிகளுக்கு நேரம் வழங்குவது பொருத்தமானது என்று பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மனுதாரர்களின் சட்டத்தரணிகளிடம் சுட்டிக்காட்டினார்.


அதன்பின்னர், இந்த மனுக்கள் விசாரணை செய்யப்படுமென்று அவர் தெரிவித்தார். அதன்படி, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி இது தொடர்புடைய மனுக்களை மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல் படுத்த தவறியதற்காக , நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு குடிவரவு குடியகல்வு  கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு முன்னர் விளக்க மறியலும், பின்னர் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.பிரஸ்தாப வழக்கு தொடர்ந்தும் உயர் நீதிமன்றத்தில்  விசாரிக்கப்பட்டு வருகிறது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال