நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகள் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசம் என்பதனால், அங்கு பெரும்பான்மை இன மக்களை குடியேற்றுவதன் மூலம் தமிழ், முஸ்லிம் மக்களின் இன விகிதாசாரத்தை குறைக்க முடியும் என்பது அன்று டி.எஸ். சேனாநாயக்கா போன்ற தலைவர்களினால் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.
1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும், வடக்கு கிழக்கு பகுதிகளில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு, குடியேற்றங்களை நிறுவும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே உள்ளது.
இதனை எதிர்த்து ஆரம்ப காலங்களில் தமிழ் தலைவர்கள் அகிம்சை வழியிலும், பின்பு வந்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியும் போராடினார்கள். அதாவது அவர்களது போராட்டத்துக்கு இதுவும் நியாயமான காரணமாக அமைந்தது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆயுத போராட்டம் உக்கிரமடைந்தபோது அங்கு சிங்கள குடியேற்றங்கள் தற்காலிகமாக பின்னடைவினை சந்தித்தது.
ஆனால் 2009 இல் யுத்தம் முடிவுற்றதன் பின்பு வடக்கு கிழக்கு பகுதிகளில் காணிகளை சுவீகரித்து அதனை புனித பிரதேசங்களாக பிரகடப்படுத்துதல் மற்றும் பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் சிலைகளை நிறுவுதல் போன்றன நடைபெற்று வருகின்றன.
யுத்த காலங்களில் திருகோணமலை நகரம் உட்பட பல இடங்களில் புலிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் சிலைகள் நிறுவப்பட்டு அதற்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது. அப்போது பலம்வாய்ந்த புலிகளாலேயே அதனை தடுக்க முடியவில்லை.
1948 க்கு முன்பு வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்த இன விகிதாசாரத்தையும், இன்று உள்ள இன விகிதாசாரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் குடியேற்றத்தின் உயர்ச்சியை புரிந்துகொள்ள முடியும்.
எனவே, அகிம்சைகளையும், ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும், வார்த்தைகளால் மாத்திரம் போதித்துக்கொண்டு, நடைமுறையில் வணங்குவதற்கு மக்களே இல்லாத பிரதேசங்களில் அவர்களது கடவுள்களை பலாத்காரமாக நிறுவுவதன் மூலம், இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது. இது மீண்டும் ஒரு 1983 க்கே கொண்டுசெல்லும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
