JobVibe.lk - Sri Lanka Job Portal

தலைவரின் மனைவியை மு.கா தலைவர் பதவியில் அமர்த்துவதற்கு சந்திரிக்கா மேற்கொண்ட முயற்சி.

16.09.2000 அன்று யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தலைவரது மரணச் செய்தியை அறிந்து இந்நாட்டு முஸ்லிம் மக்களும், கட்சிப் போராளிகளும், அதியுயர்பீட உறுப்பினர்களும் செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்த நிலையில், மக்களினதும், போராளிகளினதும் விருப்பத்துக்கு மாற்றமாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் பதவியில் தலைவரது மனைவி பேரியல் அஸ்ரப்பை நியமிக்கின்ற ரகசிய வேலைகளில் ஒரு கூட்டத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதற்கான அரச அனுசரனை பலமாக இருந்தது.  


அந்தவகையில் அதியுயர் பீடத்துடன் தொடர்பில்லாத தலைவரின் மனைவி பேரியல், தலைவரின் மகன் அமான் மற்றும் அப்போது துறைமுக அதிகார சபைக்கு பிரதி தலைவராக இருந்த எம்.ஐ.எம். ரபீக் ஆகிய மூன்று பேரின் பெயர்கள் தலைவரின் உடல் நல்லடக்கம் செய்வதற்கு முன்பே திடீரென அதியுயர் பீட உறுப்பினர்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தது.      


அப்போது சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன முன்னணி ஆட்சியில் இருந்தது. 2௦௦௦ இல் நடைபெற இருந்த பொதுத் தேர்தலில் சந்திரிக்காவை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பதற்கு தலைவர் அஷ்ரப் அவர்கள் பல நிபந்தனைகளை விதித்துடன், தலைவர் மக்காவில் இருந்துகொண்டு ஜனாதிபதி சந்திரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்துவதற்காக ரவூப் ஹக்கீமை தலைவர் அஷ்ரப் நியமித்திருந்தார். 


ரவூப் ஹக்கீமின் பிடிவாதக் கொள்கை சந்திரிக்காவை பல தடவைகள் திணறச்செய்திருந்தது. இப்படிப்பட்டவர் முஸ்லிம் காங்கிரசுக்கு தலைவராக வந்தால் முஸ்லிம் காங்கிரசை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொள முடியாது என்று சந்திரிக்கா கணக்குப்போட்டிருந்தார்.  


எனவே அஷ்ரப் அவர்களின் மனைவி ஒரு பெண் என்பதனால் முஸ்லிம் காங்கிரசுக்கு தலைவராக பேரியல் நியமிக்கப்பட்டால் தனது பூரண கட்டுப்பாட்டின் கீழ் முஸ்லிம் காங்கிரசை வழிநடாத்த முடியும் என்று சந்திரிக்கா திட்டமிட்டார். 


சந்திரிக்காவின் இந்த திட்டத்துக்கு அமைய முஸ்லிம் காங்கிரசின் அடுத்த தலைவராக பேரியல் அஷ்ரப் அவர்களை நியமிப்பதற்கு தனது அனைத்து அரச இயந்திரங்களையும் பயன்படுத்தியதுடன், “இத்தா” அனுஸ்டித்துக்கொண்டிருந்த பேரியலின் இல்லத்துக்கு சென்று பேரியலுக்கு தைரியமும், மேலதிக ஆலோசனைகளும் வழங்கினார்.    


எவ்வளவுதான் அரச இயந்திரங்கள் பேரியல் அஷ்ரப் அவர்களுக்காக வேலை செய்தாலும் கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் மக்களும், கட்சிப் போராளிகளும், அதிஉயர்பீட உறுப்பினர்களில் பெரும்பாலானோரும் பெண்ணொருவர் முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்குவதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். 


அது ஒருபுறமிருக்க, “”தலைவர் அத்தனை பாரத்தையும் எனது தலையில் கட்டிவிட்டு திடீரென தலைவர் மரணித்துவிட்டாரே”” என்று அப்போது முஸ்லிம் காங்கிரசின் மூத்த துணை தலைவராக இருந்த மருதூர்கனி ஒப்பாரி வைத்து அழுத காட்சி இப்போதும் என் கண்முன்னே வந்து செல்கிறது.  


இந்தநிலையில் கொழும்பில் உள்ள சில காடையர்களை கூலிக்கு அமர்த்தியதன் மூலம் கட்சியின் தலைமையகமான தாருஸ்சலாத்தை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் முயற்சியில் ரவூப் ஹக்கீமுக்கு எதிரான அணி தீவிரமாக செயற்பட்டது. 


கிழக்கு மாகாண மக்கள் ரவூப் ஹக்கீமைத்தான் தலைவராக வருவதற்கு விரும்புகின்றார்கள் என்ற செய்தி காரணமாக, நாங்கள் தாருஸ்சலாம் சென்றபோது அங்கிருந்த சிலர் “”மட்டக்களப்பான் எல்லாரும் இங்கிருந்து வெட்டக்கெரங்குங்கடா”” என்று கோஷமிட்டனர். அப்போது சிலர் தாக்கப்பட்டனர். இவ்வாறானவர்கள் பின்னாட்களில் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து கொண்டனர். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال