47 வது தொடர்.........
LTTE இயக்கத்துக்கு எங்குமில்லாத வரவேற்பு ஆரம்பகாலங்களில் முஸ்லிம் பிரதேசங்களில் கிடைத்ததானது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் அந்த ஆதரவை நீண்டகால அரசியல் உறவாக மாற்றுவதற்குப் பதிலாக, LTTE யினர் தங்களது இறுக்கமான கட்டுப்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொண்டதானது அவர்களது ராஜதந்திரத் தவறுகளில் ஒன்றாகும்.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் தலையீடுகளையும், சுதந்திரமற்ற இறுக்கமான கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியதன் காரணமாக விடுதலைப் புலிகளை ஆதரித்த பலர் பின்னாட்களில் வெறுப்படைய ஆரம்பித்தனர். இதனை ராஜதந்திர ரீதியில் கையாழ்வதற்கு புலிகள் தவறிவிட்டனர்.
முஸ்லிம்கள் மத்தியில் பின்வருவோரிடம் கப்பம் அல்லது வரி வசூலிக்கப்பட்டது.
👉வர்த்தகர்கள், முதலாளிகள்.
👉விவசாயிகள், போடிமார்கள்.
👉ரெக்டர்கள், மீன்பிடிப் படகுகளுக்கு.
👉கடைகள் மற்றும் சிறு தொழில் செய்பவர்களிடம்.
👉மரம் மற்றும் Timber வர்த்தகத்தில் LTTE யினரின் நேரடித் தலையீடு.
👉மணல் சேகரித்து விற்பவர்களிடம்.
👉சில இடங்களில் தேநீர் கடைகளுக்கு மாதாந்த வரி.
👉மாட்டு வண்டில்களுக்கும் வசூலிக்கப்பட்டது.
இவ்வாறான வரியினால் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், பணம் மற்றும் சொத்துக்கள் வைத்திருந்த தொழில்துறை நபர்களில் சிலர் அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறத் தொடங்கியதாகவும் UTHR பதிவு செய்துள்ளது.
கப்பம் செலுத்துவதை ஏன் வெறுத்தனர் ?
முஸ்லிம் மக்களுக்கு வரி வசூல் வெறும் பணப் பிரச்சினையாக மட்டும் இருக்கவில்லை.
ஒரு வர்த்தகர் அல்லது தொழிலதிபர் மீது விதிக்கப்பட்ட தொகை அவருடைய பொருளாதார வருவாயைவிட அதிகமாக இருந்தால், அதைத் தொடர்ந்து செலுத்துவது சிரமமாகியது. சிலர் தொடர்ந்து செலுத்தினர். பின்னர் நஷ்டம் காரணமாக செலுத்த மறுத்தனர்.
ஆரம்ப காலங்களில் போராட்டத்திற்கு ஆதரவாக முஸ்லிம் வர்த்தகர்கள் தாமாகவே முன்வந்து உதவி செய்தல் என்ற ரீதியில் பணம் அல்லது பொருட்களை தாரளமாக வழங்கினர். ஆனால் பின்னர் அதே உதவி கட்டாய வரியாக அல்லது கப்பம் என்ற ரீதியில் அழுத்தம் வழங்கியபோது வர்த்தகர்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டது.
ஒருவர் விருப்பத்துடன் உதவுவதற்கும், அழுத்தத்தின் பேரில் பணம் செலுத்துவதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளது.
2002 இல் சமாதான காலத்திலும் இந்தப் பிரச்சினை பூதாகரமாக இருந்தது. LTTE யினரின் அழுத்தங்கள் பற்றி முஸ்லிம் மக்கள் புகார் வழங்கியிருந்தனர். இது பற்றி Human Rights Watch பதிவு செய்துள்ளது.
2002.04.13 அன்று முஸ்லிம் காங்கிரசின் தூதுக் குழுவினரும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் கிளிநொச்சியில் சந்தித்து பேச்சுக்கள் நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். இந்த பேச்சுக்களில் முஸ்லிம்களிடம் வரி அல்லது கப்பம் வசூல் செய்வது பற்றியும் பேசப்பட்டது.
முஸ்லிம்களிடம் வரி வசூலிப்பது பற்றி LTTE யின் தலைவர் வே. பிரபாகரனின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது,
அதில், “வடக்கு–கிழக்கில் உள்ள கடைகளில் பெரும்பாலானவை தமிழர்களுடையவை என்பதால், தமிழர்களிடமிருந்து மட்டும் வரி வசூலித்து முஸ்லிம் கடைகளைத் தவிர்ப்பது நடைமுறையில் சிரமமாக இருக்கும்” என்று பிரபாகரன் கூறியதாகவும்,
அதற்கு “முஸ்லிம்கள் LTTE யின் போராட்டத்தை தங்களுடைய போராட்டமாகக் கருதாத நிலையில், அவர்களை அச்சுறுத்தி வசூலிப்பது நியாயமற்றது” என்று முஸ்லிம் தரப்பினர் விளக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக 22.02.2002 அன்று அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் “அச்சுறுத்தல், கடத்தல், பணம் பறித்தல் மற்றும் துன்புறுத்தல்” போன்ற நடவடிக்கைகளிலிருந்து விலக வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு சாதகாமான ஒன்றாகும்.
முஸ்லிம்களிடம் எப்போதும் ஒரு கேள்வி இருந்து வருகிறது. அதாவது “நாம் தமிழ் பேசுகிறோம் என்பதற்காக தமிழ் தேசிய அரசியல் இயக்கத்தின் கீழ் வாழ வேண்டுமா? அல்லது தனியான “முஸ்லிம்” இனம் என்ற அடிப்படையில் தனித்துவமான அரசியல் உரிமைகளுடன் வாழ வேண்டுமா?” என்பதுதான் அந்த கேள்வியாகும்.
ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு உணவு வழங்கி உதவிய அதே முஸ்லிம்களே பின்னாட்களில் அன்னியப்படுத்தப்பட்டனர். LTTE யின் பொருளாதாரத் தலையீடு மற்றும் கட்டாய வரி வசூல் முஸ்லிம்களை மேலும் அந்நியப்படுத்தியது என்று UTHR தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.
இந்த கருத்தானது LTTE யுடனான உறவு முறிவின் வரலாற்றை மிகச் சுருக்கமாக விளக்குகிறது:
ஒரு காலத்தில் தாராளமாக உதவி செய்த சமூகமே பின்னர் கட்டாய கப்பம் வழங்க நிர்பந்திக்கப்பட்டனர். அதனால் ஏற்பட்ட மனக் கசப்புகள்தான் முஸ்லிம்களை LTTE யினர் தாக்கிய காரணிகளில் ஒன்றாக எடுத்துக்கொள்ளலாம்.
தொடரும்.............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
