43 வது தொடர்..........
இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பமானதும் யாழ்ப்பாணக் கோட்டை படைத்தளம் LTTE யினரால் முற்றுகையிடப்பட்டது. யாழ்க் கோட்டையானது இராணுவம் மற்றும் பொலிசாரின் தளமாக இருந்தது.
இலங்கையின் போரியல் வரலாற்றில் இதனை மிக நீண்டகால முற்றுகையாக இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது ஊடகங்களை ஆக்கிரமித்து தலைப்புச் செய்தியாக அப்போது நாள்தோறும் பிரபலமாக பேசப்பட்டது.
இந்தக் கோட்டையானது போத்துக்கேயரினால் முதன் முதலாக கட்டப்பட்டாலும், அதனை ஒல்லாந்தர்கள் விரிவுபடுத்தி ஐங்கோண வடிவிலான பிரமாண்டமான கோட்டையாக கட்டியமைத்தனர்.
1990 ஜூன் மாதம் கோட்டையை சுற்றிவளைத்த LTTE யினர், தனது நிலைகளை அமைத்து தாக்குதல்களை ஆரம்பித்ததுடன், கோட்டைக்கான விநியோகப் பாதையினை தடை செய்ததன் காரணமாக உணவு, மருந்துப் பொருட்கள், ஆயுதங்கள் என அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கோட்டைக்குள் நிலைகொண்டிருந்த அரச படையினர்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டது.
1990 ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட முற்றுகையானது விரைவில் வீழ்ந்துவிடும் என்றும், கோட்டைக்குள் இருந்த படையினர் விரைவில் LTTE யிடம் சரணடைந்து விடுவார்கள் அல்லது கடல் வழியாக தப்பிச் சென்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1990 செப்டம்பர் மாதம் வரையிலும் அதாவது மூன்று மாதங்களுக்கு மேலாக முற்றுகைப் போர் தொடர்ந்து நடைபெற்றது.
கோட்டையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைவதற்கு LTTE யினர் பலமுறை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு, வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட பிரமாண்டமான தாக்குதல்களை நடத்தி, நுழை வாயில்களை தகர்த்தாலும், கோட்டைக்குள்ளே நுழைய முடியவில்லை.
கோட்டையின் உயரமான மற்றும் அகலமான மதில்கள், அரண்கள் மற்றும் பாதுகாப்பு நிலைகள் உள்ளேயிருந்த படையினருக்கு சாதகமாக அமைந்திருந்தது.
கோட்டைக்குள் இருந்த படையினர்களுக்கான உணவுகள், மருந்துப் பொருட்கள் தீர்ந்துபோன நிலையிலும், ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் குறைந்துகொண்டு வந்த நிலையிலும் படையினர் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.
காயமடைந்த படையினரை மேலதிக சிகிச்சைக்காக வெளியே கொண்டு செல்லவும் முடியவில்லை. முற்றுகையை உடைத்து உள்ளேயிருந்த படையினர்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பகட்டத்தில் வெற்றியளிக்கவுமில்லை. LTTE யினரின் கடுமையான தொடர் தாக்குதலே இதற்கு காரணமாகும்.
வினியோகத்துக்காகவும், காயப்பட்ட படையினரை வெளியேற்றும் நோக்கிலும் ஹெலிக்கொப்டர்கள் மூலமாக கோட்டைக்குள் தரையிறங்கும் பல முயற்சிகள் தோல்வியடைந்தன.
இவ்வாறான நிலையில் ஹெலிக்கொப்டர்களை தரையிறக்கும் முயற்சிகளை கைவிட்டுவிட்டு அதி உயரத்திலிருந்து விமானப்படையினர் கோட்டையை நோக்கி பொதிகளை வீசினர். அவ்வாறு வீசப்பட்டவற்றில் பெரும்பாலானவைகள் கோட்டைக்கு வெளியே அதாவது LTTE யினரின் பிரதேசத்திலும், நீர் நிலைகளிலும் வீழ்ந்தன.
மிக உயரத்திலிருந்து உணவுப் பொதிகள் வீசப்பட்டபோது, LTTE யினரின் சூட்டினால் ஆகாயத்தில் வைத்தே பல பொதிகள் அழிந்தது. இவ்வாறான நிலையில் மிகவும் அரிதாக கிடைக்கின்ற சிறியளவிலான உணவுகள் மாத்திரமே கோட்டைக்குள் சென்றடைந்தது.
ஹெலிக்கொப்டரிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறி தவறி படையினரை நோக்கி சென்றதுண்டு. அந்தவகையில் பொலிசாக கடமையாற்றிய சாய்ந்தமருதை சேர்ந்த எனது தந்தையின் சகோதரரின் புதல்வர் உணவுப் பொதியை எடுக்கச் சென்றபோது கொல்லப்பட்டார்.
இவ்வாறான நிலையில் 1990.09.12 அன்று விமானப்படையின் பிரமாண்டமான சூட்டு ஆதரவுடன் யாழ்ப்பாணக் கடலேரியைக் கடந்து கடற்படைக் கப்பல் மூலமாக கோட்டைக்கு அருகில் அரச படையினர் தரையிறங்கி கோட்டைக்குள் நிலைகொண்டிருந்த சுமார் 200 இராணுவம் மற்றும் பொலிசாரை மீட்டெடுத்தனர்.
இந்த மீட்பு நடவடிக்கைக்கு மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ தலைமை வகித்ததாக கூறப்படுகின்றது.
கோட்டையிலிருந்து அரச படையினர் வெளியேறியதிலிருந்து 1995 இல் ரிவிரச இராணுவ நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்படும் வரைக்கும் யாழ்க் கோட்டை LTTE யினரின் பூரண கட்டுப்பாட்டில் இருந்தது.
யாழ்க் கோட்டை முற்றுகை தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் படவில்லை. அங்கு அவர்களது இயல்பான வாழ்க்கையினை வாழ்ந்து வந்தார்கள்.
யாழ்க் கோட்டையை சுற்றியிருந்த LTTE யினரின் அரண்களை நோக்கி விமானப்படையினரின் கடுமையான தாக்குதல் காரணமாக யாழ்ப்பான நகரம் முழுவதும் அச்சுறுத்தலை எதிர்கொண்டது. குறிப்பாக இதே அச்சுறுத்தலை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களும் எதிர்கொண்டனர்.
இவ்வாறான இக்கட்டான காலகட்டத்தில் LTTE யினருக்கு எதிராக யாழ் முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்பட்டதில்லை. மாறாக LTTE யினருக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.
தொடரும்.............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
