41 வது தொடர்.........
கிழக்கு மாகாணத்துக்கு அருகில் உள்ள பொலன்னறுவை மாவட்டத்தின் முஸ்லிம் கிராமங்களான அலிஞ்சிப்பொத்தானை மற்றும் அதன் அருகில் உள்ள சிறிய கிராமங்கள் மற்றும் பள்ளியகொடெல்லை ஆகிய முஸ்லிம் கிராமம் மீதான கொடூரமான தாக்குதல்கள் பற்றி கடந்த பதிவில் விபரித்திருந்தேன்.
இந்த கிராமங்களை முற்றாக அழிக்கும் விதமான தாக்குதல்களை LTTE யினர் ஏன் மேற்கொண்டார்கள் ? அவர்களது இராணுவ நோக்கம் என்ன என்பது பற்றி சற்று ஆராய வேண்டி உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, குடும்பிமலை ஆகிய பிரதேசங்கள் LTTE யினரின் பூரண கட்டுப்பாட்டில் இருந்தன. இவைகள் இரண்டுக்கும் இடையில் உள்ள அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களான புனானை பொத்தானை போன்ற பிரதேசங்கள் ஊடாகவே LTTE யினரின் வாகரை – குடும்பிமலைக்கான போக்குவரத்துக்களை அமைத்திருந்தனர்.
அதாவது குடும்பிமலை காட்டுப் பகுதியிலிருந்து வாகரைக்கும், வாகரையிலிருந்து குடும்பிமலைக்கும் செல்கின்ற LTTE யினரின் பயணப்பாதையில் குறித்த முஸ்லிம் கிராமங்கள் அமைந்திருக்கவில்லை. அதனால் LTTE யினரின் ரகசியமான பயனப்பதைக்கு இந்த கிராமங்கள் ஒருபோதும் இடைஞ்சலாக அமைந்திருக்கவில்லை.
அலிஞ்சிப்பொத்தானை, பள்ளியகொடெல்லை போன்ற முஸ்லிம் கிராமங்கள் தனித்த தீவுகள் போன்று ஒதுக்குப்புறமாக அமைந்திருந்ததன் காரணமாக, இக்கிராமங்களை தாக்குகின்றபோது அவர்களுக்கு உடனடியான பாதுகாப்புக்களோ, உதவிகளோ கிடைத்துவிடாது. அத்துடன், வாகரைப் பிரதேசத்திலிருந்து இலகுவாக சென்று தாக்கிவிட்டு பாதுகாப்பாக வெளியேற முடியும். எனவேதான் LTTE யினருக்கு இந்தக் கிராமங்கள் எந்தவகையிலும் இடைஞ்சலாக இல்லாத காரணத்தினால், இக்கிராமங்கள் எந்தவொரு இராணுவ நோக்கமும் LTTE யினருக்கு இருந்திருக்கவில்லை.
1992.10.15 பள்ளியகொடெல்லை தாக்குதலுக்கு பின்பு முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்தாலும், பாரியளவிலான தாக்குதல்கள் இடம்பெற்றதாக பதிவாகவில்லை. அதாவது தாக்குதல்கள் குறைவடைந்திருந்தது. அதற்காக முற்றாக முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது என்று கூறிவிட முடியாது.
1993,1994 ஆகிய ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மனித உரிமை அறிக்கை குறிப்பிடுகின்றது.
1993 இல் LTTE இயக்கத்துக்குள் ஏற்பட்ட உள் முரண்பாடுகளும், 1994 சந்திரிக்கா குமாரதூங்க அரசாங்கத்துடன் LTTE யினர் மேற்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தை ஆகிய இரண்டு காரணங்களுக்காக முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நிறுத்தியிருக்கலாம். ஆனால் இவைகள் இரண்டும்தான் காரணம் என்று நேரடியாக கூற முடியாது.
LTTE இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தலைமைக்கு சதி செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அதன் பிரதித் தலைவர் மாத்தயாவும், அவரது விசுவாசிகளும் கைது செய்யப்பட்டதுடன், இயக்கத்துக்குள் களையெடுக்கும் நடவடிக்கை ஆரம்பமானது. இந்த நடவடிக்கையானது முஸ்லிம்கள் மீதான கவனம் மறுபக்கம் திரும்பியிருக்கலாம்.
1990 பிரேமதாசாவுடனான பேச்சு முறிவுக்கு பின்பு 1994 இல் சந்திரிக்கா தலைமையிலான அரசாங்கத்துடன் LTTE யினர் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பித்தனர்.
13 -14.10.1994 இல் யாழ்ப்பாணத்தில் இருதரப்பு பேச்சுகள் ஆரம்பமானது. இந்தச் சூழலும் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை தவிர்க்க வேண்டிய அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம்.
சந்திரிக்கா அரசு – LTTE போர்நிறுத்தம் 1995 ஜனவரியில் நடைமுறைக்கு வந்து பல சுற்று பேச்சுக்கள் நடைபெற்றது. பின்பு 18.04.1995 அன்று பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக LTTE யினர் அறிவித்ததுடன், திருகோணமலையில் நங்கூரமிட்டிருந்த கடற்படையின் இரண்டு கப்பல்களை 19.04.1995 அன்று LTTE யினர் தாக்கி அழித்ததன் மூலம் மீண்டும் போர் ஏற்பட்டது.
1996 இல் முஸ்லிம்கள் படுகொலை
1996.09.27 அன்று இரவு கல்முனை பாண்டிருப்பில் உள்ள கோவில் தீ மிதிப்பு நிகழ்வினை பார்வையிடுவதற்காக தமிழ் நண்பர்களுடன் சென்றிருந்தேன். சில நேரங்களின் பின்பு அங்கு இனம்புரியாத பதற்றம் நிலவியது. ஆனால் என்ன நடைபெறுகின்றது என்று எனக்கு புரியவில்லை.
அந்த சந்தர்ப்பத்தில் எனது நண்பர்கள் அவசர அவசரமாக என்னை அழைத்துக்கொண்டு கோவில் வளாகத்தைவிட்டு வெளியேறி கல்முனைக்குடி முஸ்லிம் பிரதேசம் வரைக்கும் என்னுடன் வந்து என்னைவிட்டுவிட்டு சென்றனர்.
மறுநாள் காலையில்தான் விடயம் புரிந்தது. அதாவது தீ மிதிப்பினை பார்வையிடுவதற்காக சென்றிருந்த மருதமுனையை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பாண்டிருப்பு பகுதியில் உள்ள மயானத்தில் கண்டெடுக்கப்பட்டது.
“கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம் ஊர்காவல் படையினர்” என்று தமிழ் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியதை அறிந்து ஆச்சர்யப்பட்டேன். அங்கு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி இளைஞர்கள். பத்திரிகையில் வெளியாகியது போன்று அவர்கள் ஊர்காவல் படையினராக இருந்திருந்தால், இரவு நேரங்களில் LTTE யினரின் நடாட்டமுள்ள அவ்வாறன ஆபத்தான இடங்களுக்கு செல்வதற்கு எந்தவித சந்தர்ப்பமுமில்லை.
இதுபோன்றுதான் பத்திரிகைகள் மூலமாக அன்றைய காலங்களில் பல கொலைகள் நியாயப்படுத்தப்பட்டு வந்தது.
தொடரும்..........
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
