34 வது தொடர்.............
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை சம்பவமானது சர்வதேச ரீதியில் பிரபலமான ஒன்றாகும். 03.08.1990 அன்று இரவு, காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஹுசைனியா பள்ளிவாசல் ஆகியவற்றில் இஷா தொழுகையில் ஈடுபட்டிருந்த ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர்.
UTHR யின் அறிக்கையின் பிரகாரம் ஆரம்பத்தில் 120 பேர் கொல்லப்பட்டு 75 பேர் கடுமையாகக் காயமடைந்ததாகவும், பின்பு மருத்துவமனையில் காயமடைந்தவர்களும் உயிரிழந்ததன் காரணமாக மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆகும்.
இது போன்ற கொலைச் சம்பவமானது காத்தான்குடியில் மாத்திரம் நடைபெற்ற ஒன்றல்ல. இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதிலிருந்து கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஒருபுறமும், LTTE என்ற சந்தேகத்தில் தமிழர்கள் காணாமல் போன சம்பவங்கள் மறுபுறமும் நடந்தேறியது.
காத்தான்குடி படுகொலைச் சம்பவத்துக்கு சில வாரங்களுக்கு முன்பு அதாவது 12.07.1990 அன்று காத்தான்குடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 168 பேர் குருக்கள்மடம் பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும், காத்தான்குடி சம்பவத்துக்கு சில நாட்களுக்கு பின்பு 11 – 12.08.1990 இல் ஏறாவூர் பகுதிக்குள் நுழைந்து 173 பேரை கொலை செய்த சம்பவமும் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த கொலையை செய்தவர்கள் யார் என்ற சந்தேகம் அப்போது இருக்கவில்லை. ஏனெனில் இதனை செய்தது LTTE யினர் என்பது அப்போது பரவலாக பேசப்பட்ட விடயம்.
இதனை நாங்கள் செய்யவில்லை என்று LTTE யினர் ஒருபோதும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அத்துடன் LTTE தலைவர் வே. பிரபாகரன் தலைமையில் 2002 இல் வட்டக்கச்சியில் நடைபெற்ற சர்வதேச பத்திரிகையாளர் மாநாட்டில்கூட மறுப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால் 2009 LTTE அழிக்கப்பட்டு அதன் பொறுப்புள்ள தலைவர்கள், முக்கிய தளபதிகள் எவரும் உயிருடன் இல்லாத நிலையில், காத்தான்குடி படுகொலைக்கும் LTTE யினருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சமூகத்தளங்களில் சிலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
அத்துடன் பொறுப்புள்ள ஊடகம் ஒன்று இதனை வேறு நபர்கள் அல்லது குழுக்கள் மீது சந்தேகம் வரும்படியான சோடிப்புக்களை பொறுப்பற்ற முறையில் அண்மையில் வெளியிட்டிருந்ததனையும் காணக்கூடியதாக இருந்தது.
அவ்வாறென்றால் LTTE யினர் பலமாக இருந்தபோது எவரும் மறுப்பு தெரிவிக்காத நிலையில், தற்போது மறுப்பு தெரிவிப்பதற்கான காரணம் என்ன ? காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையை உண்மையில் செய்தது யார் ? அதற்கு ஆதாரம் என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.
அன்றைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னவிடம் காத்தான்குடி விவகாரம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு 07.08.1990 அன்று அரசாங்க ரகசிய புலனாய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு பாராளுமன்றத்தில் பதில் வழங்கினார்.
“”04.08.1990 அன்று LTTE யின் மட்டக்களப்பு தளபதி கருணா, யாழ்ப்பாணத்தில் உள்ள LTTE யினரின் உயர் பீடத்துக்கு ரேடியோ மூலம், தமது ஆட்கள் இலங்கை இராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்ட முஸ்லிம் ஜிஹாத் இளைஞர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அழித்துள்ளதாக செய்தியை வழங்கியுள்ளார்”” கருணாவின் ரேடியோ செய்தியை ஒட்டுக் கேட்டதன் மூலம் இதனை அறிந்ததாக அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். இதனை சர்வதேச மன்னிப்புச் சபையும் உறுதிப்படுத்துகிறது.
இந்த தகவலுக்கு ஆதாரமாக 07.08.1990 பாராளுமன்ற உரைகள் அடங்கிய ஹன்சாட்டை பார்வையிடுவதன் மூலம் உறுதிப்படுத்த முடியும்.
அப்போது யாழ் குடாநாடு முழுவதும் LTTE யினரின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன், தலைமயகமும் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்தது.
இங்கே பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கையின்படி, கருணா என்று குறிப்பிட்டது அன்றைய கிழக்குத் தளபதி கருணா அம்மானைத் தவிர வேறு எவரும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. இந்தக் கொலையில் கருணா நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என்பது புரிகிறது. ஆனால் இது பற்றி கருணா ஒருபோதும் வாய் திறந்ததாக தெரியவில்லை.
கருணா, அவரது தலைமைக்கு வழங்கிய தகவல் மூலம் ஒன்றைப் புரியக்கூடியதாக உள்ளது. அதாவது கிழக்கில் முஸ்லிம் ஜிஹாத் அமைப்பை அழிக்கும்படி வந்த கட்டளைக்கு அமைவாக பொது மக்களை கொலை செய்துவிட்டு ஜிஹாத் அமைப்பினரை கொலை செய்ததாக தலைமையை ஏமாற்றி இருக்கலாம்.
அல்லது தனிப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக மக்களை கொன்றுவிட்டு ஜிஹாத் இயக்கத்தை அழித்துள்ளதாக தலைமையிடம் நல்ல பெயர் எடுக்க முற்பட்டிருக்கலாம்.
அப்போது முஸ்லிம்கள் வட மாகாணத்திலிருந்து முற்றாக வெளியேற்றப் பட்டிருந்தாலும், கிழக்கில் செய்தது போன்று படுகொலைகள் வடக்கில் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும்...................
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
