32 வது தொடர்........
நாட்டை பிரித்து தனியான தமிழீழ அரசை உருவாக்கும் நோக்கில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைந்ததனால் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன ஓர் தந்திரோபாயத்தை மேற்கொண்டார்.
அதாவது வடகிழக்கில் தமிழர்களுடன் இணைந்து வாழ்கின்ற இன்னுமொரு சமூகமான முஸ்லிம் சமூகத்தை தமிழ் மக்களுடன் இணையாமல் நிரந்தரமாக பிரிக்க வேண்டும் என்பதுதான் அந்த தந்திரோபாயமாகும்.
ஒரே மொழியை பேசுகின்ற இரண்டு சிறுபான்மை சமூகங்களும் ஒன்றுபட்டால், நாடு துண்டாடுவதனை யாராலும் தடுக்க முடியாது என்பது ஜே.ஆர் போட்ட கணக்காகும்.
1984 இல் இஸ்ரேலிய தூதரகம் இலங்கையில் நிறுவப்பட்டு இஸ்ரேலின் ஆலோசனைக்கு அமைவாகவே ஜே.ஆர் பல திட்டங்களை மேற்கொண்டார். அவ்வாறு நிறுவப்பட்ட இஸ்ரேலிய தூதரகத்துக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இலங்கையில் இஸ்ரேலின் வருகைக்குப் பின்பு அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அவ்வப்போது கிழக்கில் தமிழ் – முஸ்லிம் எல்லைக் கிராமங்களில் பலவிதமான அசம்பாவிதங்கள் நடந்தேறியது. அவைகள் திட்டமிட்ட சதி என்பதனை இரண்டு சிறுபான்மை சமூகங்களும் புரிந்துகொள்ளத் தவறி விட்டனர்.
இரண்டாவது ஈழப்போரில் கிழக்கை மீட்கும் இராணுவ நடவடிக்கையில், LTTE என்ற சந்தேகத்தில் ஏராளமான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் போனமை, கொல்லப்பட்டு, டயரில் போட்டு எரிக்கப்பட்டமை பற்றி கடந்த பதிவுகளில் விபரமாக குறிப்பிட்டிருந்தேன்.
அன்றைய இராணுவ நடவடிக்கையில் “கெப்டன் முகமட் முனாஸ்” என்ற பெயர் கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. தற்போதும் அந்த பெயரை மறக்கவில்லை.
கடத்தல்கள், காணாமல் போனமை மற்றும் கொடூரமான கொலைகளுடன் தொடர்புபடுத்தப்பட்ட மிகவும் சர்ச்சைக்குரிய பெயராக இருந்ததனால், கெப்டன் முகமட் முனாஸ் என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்தியது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக செயற்பட்ட இவர், மக்களை திரட்டி, பெரும் திரளான தமிழ் மக்கள் முன்பாக அடிக்கடி கூறிய வசனம் “”நான் ஒரு முஸ்லிம், எனக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் பயமில்லை”” என்பதுதான் அவரது பிரதான பேச்சாக இருந்தது.
அவ்வாறு அவர் தமிழ் மொழியில் பேசும்போது அது தமிழை தாய் மொழியாகக் கொண்ட ஒருவரது மொழிநடை அல்ல என்பதனை சிலர் மாத்திரமே புரிந்துகொண்டனர். ஆனால் இதனை அன்றைய பெரும்பாலான தமிழ் மக்கள் குறிப்பாக படித்தவர்கள்கூட கெப்டன் முகமட் முனாஸ் என்பவர் ஒரு முஸ்லிம் என்றுதான் நம்பினார்கள்.
ஆனால் அவர் ஒரு முஸ்லிமல்ல, அவர் காலி பிரதேசத்தை சேர்ந்த ஒரு சிங்கள கிறிஸ்தவர். ஆனால் தமிழ் மொழியை பேசக்கூடியவர். இவரது உண்மையான பெயர் “”மாட்டீன் பீரீஸ்”” அல்லது Dias Richard ஆகும். இந்த உண்மையை அறிந்தவர்களுக்கு மாத்திரமே ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் முனாஸ் குழுவினர்தான் தமிழர்களை அழித்தார்கள் என்று கூறுபவர்கள் இப்போதும் உள்ளார்கள்.
இந்த செயற்பாடானது மாட்டீன் பீரீஸ் என்பவரினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக கருதுவது தவறு. இது அன்றைய பிரேமதாசா அரசாங்கத்தின் சூழ்ச்சித் திட்டங்களில் இதுவும் ஒன்று.
போருக்குப் பின்னர் நடைபெற்ற “Operation Jackal” என அழைக்கப்பட்ட இரவு நேர நடவடிக்கைகளில் வெள்ளை வேன்கள் பயன்படுத்தப்பட்டு பலர் கடத்தப்பட்டனர். மட்டக்களப்பு பகுதியில் குறித்த நடவடிக்கைக்கு “கெப்டன் முனாஸ் - Dias Richard” தலைமை தாங்கியதாக UTHR பதிவு செய்கிறது.
கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 159 தமிழ் மக்கள் காணாமற்போன வழக்கில் அடையாளம் காணப்பட்ட நான்கு அதிகாரிகளில் இவரும் ஒருவர்.
Dias Richard உடன் ராசீக் குழு, ப்லொட் மோகன் ஆகியோருடன் நெருங்கி செயற்பட்டதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் கிழக்கில் தமிழ் - முஸ்லிம் உறவுகளை நிரந்தரமாக பிரிக்கும் சூழ்ச்சித் திட்டங்களாகும். இவ்வாறான திட்டங்கள் அப்போது வெற்றியளித்தது. இதுபோன்று ஏராளமான சம்பவங்கள் மிக ரகசியமாக நடந்தேறியுள்ளது.
தொடரும்.................
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
