JobVibe.lk - Sri Lanka Job Portal

வீரமுனை படுகொலையும், முஸ்லிம்களின் பங்களிப்பும் ?

37 வது தொடர்...........

தமிழர்களின் வரலாற்றில் வீரமுனை படுகொலை மிகவும் பிரபலமான ஒன்றாகும். வீரமுனைக் கிராமத்தில் 253 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டு அல்லது கொல்லப்பட்டனர். இது ஒரே நாளில் நடைபெற்ற சம்பவமல்ல. மாறாக 18.06.1990 தொடக்கம் 15.08.1990 வரையான சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற சம்பவங்களாகும். 

ஆனால் வீரமுனை படுகொலையானது ஒரே நாளில் நடைபெற்றது போன்று பரவுகின்ற செய்திகள் தவறானது.  

11.06.1990 இல் இரண்டாவது ஈழப்போர் ஆரம்பமானதும், LTTE யினரிடமிருந்து கிழக்கை மீட்கும் இராணுவ நடவடிக்கையில் 18.06.1990 அன்று வீரமுனை கிராமத்துக்குள் இராணுவத்தினர் நுழைந்தனர்.    

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை தொகுதியின் சம்மாந்துறை, செந்நெல் கிராமம், சொறிக்கல்முனை, மல்வத்தை ஆகியன வீரமுனையை சுற்றியுள்ள அயல் கிராமங்களாகும்.  

வீரமுனைக் கிராமத்தை இராணுவத்தினர் கைப்பற்றிய 18.06.1990 அன்று 13 பேரை இராணுவத்தினர் அழைத்துச் சென்றதாகவும் அவர்கள் மீண்டும் திரும்பவில்லை என்றும் பதிவாகியுள்ளது.  

இராணுவ நகர்வின்போது LTTE யினருடன் சண்டைகள் நடைபெற்றதனால், வீரமுனை மக்களும் அதனை சுற்றியுள்ள கிராமத்து மக்களும் பாதுகாப்புத்தேடி வீரமுனை பிள்ளையார் கோவிலிலும், அதனை அண்டிய பாடசாலையிலும் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.      

அகதி முகாமில் மக்களோடு மக்களாக LTTE யினர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் காரணமாக, இராணுவத்தினருடன் முகமூடி அணிந்து வந்த சிலர், அடையாளம் காண்பித்ததற்கு அமைவாக 29.06.1990 அன்று அகதி முகாமிலிருந்த பலரை இராணுவ வாகனத்தில் அழைத்துச் சென்றனர். 

இங்கே முகமூடி அணிந்து வந்து காட்டிக்கொடுத்தவர்கள் யார் என்பதுதான் சிந்திக்க வேண்டிய விடயமாகும். ஏனெனில் இவ்வாறான நடவடிக்கைகளில் EPRLF, TELO, PLOTE ஆகிய இயக்க உறுப்பினர்களும் அதனுடன் தொடர்புள்ள குழுக்களும் இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டது அனைவரும் அறிந்தது.  

மேலும் 05.07.1990 அன்று 13 இளைஞர்களும், 10.07.1990 அன்று 15 இளைஞர்களும் வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். 

16.07.1990 அன்று அகதி முகாமிலிருந்து தங்களது வீடுகளை பார்ப்பதற்காக சென்ற எட்டு பெண்கள் மல்வத்தை சோதனை சாவடியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்பு கொல்லப்பட்டதாக UTHR பதிவு செய்துள்ளது.  

26.07.1990 அன்று 32 இளைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களில் 23 பேர் பாடசாலை மாணவர்கள் என்றும், மீண்டும் திரும்பவில்லை என்றும் கூறப்படுகின்றது. 

29.07.1990 அன்று குடும்பத்துடன் பயணித்த எட்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக பதிவாகி உள்ளது. 

01.08.1990 அன்று சவளக்கடை வீதியில் சென்ற 18 பேர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெண்களும் அடங்கும் என்றும் பதிவாகியுள்ளது.  

மேலே குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் வீரமுனையில் படுகொலை செய்யப்பட்ட 253 பேர்களுள் அடங்கும்.  

12.08.1990 அன்று ஓர் எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. சம்மாந்துறை பகுதியில் வயல் வெட்டப்பட்டு குமிக்கப்பட்டிருந்த சூடுகள் (நெற்கதிர்கள்) தீயிட்டு எரிக்கப்பட்டதுடன், சம்மாந்துறையை சேர்ந்த பல முஸ்லிம் விவசாயிகள் அங்காங்கே கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவங்களினால் இளைஞர்கள் ஆத்திரப்பட்டபோது, பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாதவாறு பிரபல மார்க்கத் தலைவர் அலியார் ஹசரத்தினால் இளைஞர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். 

ஆனாலும் 11.08.1990 அன்று இரவு ஏறாவூர் பகுதியில் 173 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து சில முஸ்லிம் கும்பல்கள் வீரமுனை பிள்ளையார் கோவில் அகதி முகாமுக்குள் புகுந்து கத்தி, வாள் போன்ற ஆயுதங்களினால் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் பத்துப் பேர் கொல்லப்பட்டதுடன், சிலர் காயமடைந்தனர்.  

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சில முஸ்லிம் இளைஞர்களே தவிர, முஸ்லிம் ஊர்காவல் படையினர் அல்ல. ஏனெனில் 20.09.1990 க்கு முன்பு முஸ்லிம் கிராமங்களில் ஊர்காவல் படை அரசாங்கத்தினால் அமைக்கப்படவில்லை. 

அவ்வாறு முஸ்லிம் ஊர்காவல் படை இருந்திருந்தாலும், இராணுவத்தின் தீர்மானத்தை மீறி அவர்களினால் எதுவும் செய்ய முடியாது என்பது யதார்த்தமாகும். இந்த உண்மையை புரிந்துகொள்ளும் ஆற்றல் சிலரிடம் இல்லை.  

இந்த சம்பவங்களையடுத்து வீரமுனையில் நடைபெற்ற அனைத்து கொலைகளுக்கும் முஸ்லிம்களுக்கும் பங்கு உள்ளது என்று சித்தரிக்கப்பட்டது. அகதி முகாமிலிருந்த மக்கள் வழங்கிய வாக்குமூலத்தில் முஸ்லிம்கள் எங்களை தாக்கியதாக கூறப்பட்டதே இதற்கு காரணமாகும். 

முகமூடி அணிந்துகொண்டு வீரமுனை படுகொலையில் இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட தமிழ் ஆயுத இயக்கங்களின் பங்களிப்பு பற்றி எந்த ஊடகமும் வாய் திறப்பதில்லை.  

இந்தியப் படையினர் அம்பாறை மாவட்டத்திலிருந்து செல்லும் வரைக்கும் வீரமுனைப் பகுதி TELO, EPRLF ஆகிய இயக்கங்களை சார்ந்திருந்தது. LTTE யினரின் ஆளுகைக்கு பின்பு அது LTTE யின் கோட்டையாக மாறியது.    

தொடரும்...........

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال