JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் சாஹிரா கல்லூரியின் நீண்டகால கனவு நனவானது. பிரமாண்டமான வரவேற்புடன் புதிய பஸ் கையளிப்பு.

எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் சாஹிரா கல்லூரியின் நீண்ட காலக் கனவான பாடசாலைக்கு என சொந்தமாக ஒரு பஸ்ஸைப் பெற்றுக்கொள்ளும் இலக்கு வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. 

"பவர் 90" (1990 சாதாரண தரம், 1993 உயர்தரம்) பழைய மாணவர் அணியின் 2026 ஆம் ஆண்டுக்கான விசேட திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டது. 

'BUS FOR MY ZAHIRA' என்ற பெயரில் சுமார் 8 மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த 2 கோடி ரூபாய் திட்டத்தின் ஊடாக, புதிய பஸ் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸை வரவேற்கும் விதமாக புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இருந்து பாடசாலை வரை பிரமாண்டமான வாகனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள், ஊர் மக்கள் மற்றும் நலன்விரும்பிகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

பேரணியைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் அதிபர் ஐ.ஏ. நஜீம் தலைமையில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், புத்தளம் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹமட், பவர் 90 அமைப்பின் தலைவர் கவிஞர் எஸ்.ஏ.சீ.பி. மரிக்கார் உட்பட சுமார் 500 க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் முக்கிய அம்சங்களாக, பஸ்ஸின் முறையான பயன்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதற்காக "பவர் 90" அணியினரால் விசேட யாப்பு ஒன்று தயாரிக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த பஸ்ஸை முறையாக முகாமைத்துவம் செய்வது தொடர்பில் பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் ஆகியோருக்கு இடையில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பஸ்ஸின் பயணங்களை இலகுவாகவும் நவீன முறையிலும் நிர்வகிக்க புதிய "வெப் தளம்" ஒன்றும் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது.  நடைபெறவுள்ள மாவட்ட மட்ட கால்பந்துப் போட்டிக்கான பாடசாலை அணியின் பயணத்தை இந்த Portal ஊடாக புக் செய்து, அதிபர் நஜீம் இதனை ஆரம்பித்து வைத்தார்.

பவர் 90 அணியின் தொடர் முயற்சியாலும், முறையான வழிகாட்டலாலும், அதிபர், பாடசாலை சமூகம், ஏனைய அணிகள் என்பவற்றின் பலமான பங்களிப்பாலும் சாத்தியமாகியுள்ள இந்த திட்டம், புத்தளம் சாஹிரா கல்லூரியின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.













Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال