JobVibe.lk - Sri Lanka Job Portal

முஸ்லிம் ஊர்காவல் படையினர்களுக்கு நிகழ்ந்த சம்பவம்.

36 வது தொடர்............

இலங்கையில் யுத்தம் ஆரம்பமாகி வடக்கு கிழக்கு பகுதிகளிலும், அதன் எல்லைகளிலும் உள்ள சிங்கள கிராமங்களும், சிங்கள குடியேற்றப் பகுதிகளும் அச்சுறுத்தலை எதிர்கொண்டதன் காரணமாக சிங்கள எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் நோக்கில் 1984 இல் முதன் முதலாக ஊர்காவல் படையை அரசாங்கம் உருவாக்கியது. 

ஆனால் அவ்வாறான காலகட்டத்தில் எந்தவொரு முஸ்லிம் கிராமங்களிலும் ஊர்காவல் படையினரை உருவாக்கியதில்லை.  

இதனை இன்னுமொருவகையில் கூறுவதென்றால், 1985 தொடக்கம் 20.09.1990 வரையிலான காலப்பகுதியில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் இருந்ததில்லை என்பது வரலாற்று ஆதாரமாகும். அக்காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை முஸ்லிம் ஊர்காவல் படையினர் கொலை செய்தார்கள் என்பது போலிப் பிரச்சாரம் என்பது நிரூபிக்கப்படுகின்றது. 

முஸ்லிம் கிராமங்களில் ஊர்காவல் படையினர்களை உருவாக்க வேண்டுமென்று தலைவர் அஷ்ரப் பாராளுமன்றத்தில் அழுத்தம் வழங்கியது பற்றி கடந்த பதிவில் விபரமாக குறிப்பிட்டிருந்தேன். 

தலைவர் அஷ்ரப்பின் கோரிக்கையை பிரேமதாசா அரசாங்கம் ஏற்றுக்கொண்டதற்கு அமைவாக, 20.09.1990 க்கு பின்பு முஸ்லிம் கிராமங்களில் ஊர்காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. 

கிழக்கு மாகாணத்தின் அனைத்து கிராமங்களிலிருந்தும் இளைஞர்கள் ஆர்வத்துடன் இணைந்து கொள்வதற்கு முன்வந்தனர். இதற்காக ஊர் தலைமகள், பள்ளிவாசல் நிருவாகத்தினர் முன்னின்றனர். 

கிழக்கு மாகாணத்திலேயே சம்மாந்துறை கிராமத்திலிருந்துதான் அதிகமான எண்ணிக்கையாக 90 பேர் இணைந்து கொண்டதாக பதிவாகியுள்ளது.  

தங்களது ஊர்களை பாதுகாப்பதற்காக சமூக உணர்வோடு ஆர்வத்துடன் ஊர்காவல் படையில் இணைந்துகொண்ட முஸ்லிம் இளைஞர்கள், நாட்கள் செல்லச் செல்ல அதில் வெறுப்பும், அச்சமும் ஏற்பட்டது. 

ஆரம்பத்தில் இணையும்போது சம்மாந்துறையில் 90 ஆக இருந்தவர்களின் எண்ணிக்கை, ஒரு மாதம் நிறைவடைவதற்குள் 29 ஆக குறைந்தது. அதாவது 61 பேர் இடையில் விலகிச் சென்றனர். அதுபோல் அனைத்து ஊர்களிலும் ஆர்வமுடன் சேர்ந்தவர்கள் காலப்போக்கில் விலகிச்செல்ல ஆரம்பித்தனர். இவர்களை நிருவகிக்கும் அரச படையினர்களின் கெடுபிடிகளும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.  

ஊர்காவல் படையினரை பொலிஸ் மற்றும் இராணுவத்தினர்களின் அடிமைகள் போன்று எடுபிடிகளாக பாவிக்கப்பட்டனர். அதாவது கிராமங்களை பாதுகாக்கும் பணியில் அவர்கள் இணைக்கப்பட்டிருந்தாலும், அந்த பொறுப்புக்கள் மாத்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. 

பாதுகாப்புப் படையினரின் முகாம்கள், பொலிஸ் நிலையங்களில் அடிக்கடி வளாகத்தை கூட்டித் துப்பரவு செய்யும் வேலைகள் மற்றும் சிற்றூழியர்களுக்கான கீழ்நிலைப் பணிகள் வழங்கப்பட்டதாக UTHR அறிக்கையில் கூறப்படுகின்றது.  

அத்துடன் ஊர்காவல் படை என்பது ஊரோடு அரச தொழில் என்றுதான் இளைஞர்கள் ஆர்வத்துடன் இணைந்தனர். அதற்கு ஊதியமாக நாள் ஒன்றுக்கு 30/- ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அந்தச் சிறிய சம்பளமும் முறையாக வழங்கப்படவில்லை.  

ஊர்காவல் படையில் இணைந்துகொண்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு மூன்று (3) நாட்கள் மாத்திரம் பயிற்சி வழங்கப்பட்டு சொட்கண் (Shotguns) துப்பாக்கியும், பத்து ரவைகளும் வழங்கப்பட்டது.  

குறித்த ஆயுதங்களும், பயிற்சிகளும் LTTE யினரின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு போதுமானதல்ல. LTTE யினர் பயன்படுத்துகின்ற AK47, T56, M16, LMG, GPMG, RPG   போன்ற ஆயுதங்களை சொட்கண் துப்பாக்கி மூலமாக எதிர்கொள்ள முடியாது என்பதனை ஊர்காவல் படையில் இணைந்த பின்புதான் முஸ்லிம் இளைஞர்கள் உணர ஆரம்பித்தனர். அதாவது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முன்வந்தவர்களுக்கே பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவியது.    

ஊர்காவல் படையில் இணைவதற்கு முன்பாக குறைந்தது பொலிசாருக்கு வழங்கப்பட்டது போன்று இயந்திரத் துப்பாக்கிகள் வழங்கப்படும் என்றுதான் எதிர்பார்த்திருந்தனர். இறுதியில் இவர்கள் அரச படையினர்களுக்கு முதலாம்கட்ட பாதுகாப்பு அடுக்கு போன்ற தோற்றம் உருவானது. 

மேலும் சில இடங்களில் எல்லைக் கிராமங்களில் தமிழ் பொது மக்களுக்கு எதிராக பழிவாங்கும் நோக்கில் அத்துமீறிய தாக்குதல்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டதாக ஊர்காவல் படையினர் மீது குற்றச்சாட்டுக்களை Human Rights Watch பதிவு செய்துள்ளது.  

தொடரும்..................

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال