(எம். யூ. எம். சனூன், சுக்ரி ஆசிரியர்)
ஒரு தந்தையின் வியர்வைக்கும், ஒரு தாயின் கண்ணீருக்கும், ஒரு மகளின் அயராத முயற்சிக்கும் "கலைமானி பட்டம்" பரிசாக கிடைத்துள்ளது.
சில வெற்றிகள் வெறும் சாதனைகள் மாத்திரமல்லாமல், அவை ஒரு குடும்பத்தின் பல ஆண்டுகாலக் கண்ணீருக்கும், தியாகங்களுக்கும், வறுமையோடு போராடிய வாழ்க்கைக்கும் கிடைக்கும் அழகான பதில்களாக அமைகின்றன.
அத்தகைய ஓர் உணர்வு பூர்வமான வரலாற்றுச் சாதனை கற்பிட்டி நுரைச்சோலை கிராமத்தில் சாதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டம் (B.A. – General Degree) பெற்று, தனது குடும்பத்தின் முதல் பட்டதாரியாக உயர்ந்துள்ளார் செல்வி அமீஸ் பாத்திமா சிப்ரா.
இந்த வெற்றியின் பின்னால் இருப்பது ஒரு பட்டமளிப்பு விழாவின் மகிழ்ச்சி மட்டுமல்ல, கடல் அலைகளோடு போராடிய ஒரு தந்தையின் வியர்வையும், குடும்பத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்த ஒரு தாயின் தியாகமும், தனது இலட்சியத்தை அடைவதற்காகப் பல தடைகளைக் கடந்து சென்ற ஒரு மகளின் விடா முயற்சியுமாகும்.
கடல் தொழில் என்பது வெறும் தொழில் அல்ல. ஒவ்வொரு நாளும் கடலோடு போராடி, அதன் ஆபத்துகளையும், நிச்சயமற்ற தன்மைகளையும் எதிர்கொண்டு, குடும்பத்தின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடினமான வாழ்க்கைப் பயணமாகும்.
அத்தகைய வாழ்க்கையை வாழ்ந்தவர்தான் சிப்ராவின் தந்தை முஹம்மது அமீஸ்.
கடலில் கிடைக்கும் வருமானம் சில நாட்களில் போதுமானதாக இருக்கலாம். சில நாட்களில் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலையும் ஏற்படலாம்.
ஆனால், இத்தகைய சவால்கள் நிறைந்த வாழ்க்கையிலும் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை அவர் ஒரு போதும் கைவிடவில்லை.
கடல் தொழிலோடு மட்டுமல்லாமல், விவசாயம், கூலி வேலை எனக் கிடைத்த வேலைகளைச் செய்து, தனது குடும்பத்திற்காக இரவு பகலாக உழைத்தார். தனது கஷ்டங்களைப் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கான தடைகளாக மாற்றாமல், அவர்களின் எதிர்காலத்திற்கான படிக்கற்களாக முஹம்மது அமீஸ் மாற்ற முயன்றார்.
தனது மகள் உயர்கல்வி கற்று, ஒரு பட்டதாரியாகத் தனது குடும்பத்தின் பெருமையை உயர்த்த வேண்டும் என்ற கனவை மட்டும் அவர் தனது இதயத்தில் சுமந்துகொண்டிருந்தார்.
இன்று அந்தக் கனவு நனவாகியுள்ளது. ஒரு காலத்தில் கடலுக்குச் சென்று உழைத்துக் குடும்பத்தைப் பாதுகாத்த அந்தத் தந்தை, இன்று தனது மகள் பட்டதாரியாக நிற்பதைக் காணும் பெருமையையும் மகிழ்ச்சியையும் பெற்றுள்ளார்.
ஒரு தந்தையின் உண்மையான வெற்றி என்பது அவர் சம்பாதித்த பணத்தில் மட்டும் அல்லாமல் அவர் தனது பிள்ளைகளுக்காக உருவாக்கிய எதிர்காலத்தில்தான் தங்கி இருக்கின்றது.
சிப்ராவின் தாய் ஷிபானா, பிள்ளையின் வெற்றிக்குப் பின்னால் நின்ற அமைதியான சக்தியாக திகழ்கிறார்.
குடும்பத்தின் பல்வேறு தேவைகளுக்கு மத்தியில், பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருப்பதும், அவர்களுக்கு மனவலிமையையும் தன்னம்பிக்கையையும் வழங்குவதும் பெற்றோரின் அளப்பரிய பணியாகும்.
தந்தை தனது உழைப்பால் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றப் போராடியபோது, தாயின் அன்பும் ஆதரவும் அந்தக் குடும்பத்தின் நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கின்றன.
இன்று தனது மகள் பட்டதாரியாக உயர்ந்து நிற்பதைக் காணும் தாயின் மனதில் எத்தனை மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்திருக்கிறது.
அமீஸ் பாத்திமா சிப்ரா விடா முயற்சியால் உயர்ந்தவர்.
2019 இல் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய செல்வி அமீஸ் பாத்திமா சிப்ரா, தனது கல்விப் பயணத்தின் அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
அங்கிருந்து தனது உயர்கல்விப் பயணத்தைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டில் கலைமானிப் பட்டத்தைப் பெற்றுத் தனது குடும்பத்தின் முதல் பட்டதாரியாக உயர்ந்துள்ளார்.
இது அவரது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, அவரது பெற்றோரின் நீண்டகாலக் கனவின் நிறைவேற்றம், அவரது பாடசாலையின் பெருமை, அவரது கிராமத்தின் மகிழ்ச்சி, மீனவ சமூகத்தின் நம்பிக்கை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சாதனையாகும்.
தனது இலக்கை நோக்கித் தொடர்ந்து முயற்சி செய்து, இன்று ஒரு பட்டதாரியாகத் தனது குடும்பத்தின் முன்னால் பெருமையுடன் நிற்கும் சிப்ரா உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்.
தனது கல்விப் பயணத்தைத் தொடர்ந்த அவர், எதிர்காலத்தில் கல்வித்துறையில் சிறந்து விளங்கி, அடுத்த தலைமுறை மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் ஒருவராகத் திகழ வேண்டும் என்பதே அனைவரினதும் உளப்பூர்வமான எதிர்பார்ப்பாகும்.
செல்வி அமீஸ் பாத்திமா சிப்ராவின் இந்த சாதனை அவர் கல்வி கற்ற நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கும் பெருமை சேர்க்கின்றது.
மீனவக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஒரு புதிய நம்பிக்கை செல்வி பாத்திமா சிப்ரா மூலம் ஏற்பட்டுள்ளது.
மீனவத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்திலிருந்து ஒருவர் பல்கலைக்கழகக் கல்வியை நிறைவுசெய்து பட்டதாரியாக உயர்வது மிகுந்த ஊக்கமளிக்கும் நிகழ்வாகும்.
மீனவ கிராமத்தின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் உயர்கல்விப் பயணத்திற்கு வழிகாட்ட வேண்டும்.
ஒவ்வொரு பெற்றோராலும் பல்கலைக்கழகக் கல்விக்கான அனைத்துச் செலவுகளையும் இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால், பிள்ளைகளின் கல்வி மீதான அக்கறை, அவர்களுக்கான ஊக்கம், சரியான ஆலோசனை, கல்வியைத் தொடர்வதற்கான முயற்சி ஆகியவற்றை வழங்குவதில் ஒவ்வொரு பெற்றோருக்கும் முக்கியமான பங்கு உள்ளது என்பதை இந்த வெற்றி பறைசாற்றுகின்றது.
நுரைச்சோலை கிராமத்தின் பெருமைக்குரிய மகளான செல்வி அமீஸ் பாத்திமா சிப்ராவுக்கும்,
இந்த வெற்றிக்காகத் தமது உழைப்பையும் தியாகத்தையும் அர்ப்பணித்த அவரது அன்புத் தந்தை முஹம்மது அமீஸ் அவர்களுக்கும், அன்புத் தாயார் ஷிபானா அவர்களுக்கும், சிப்ராவின் கல்விப் பயணத்தில் பங்களித்த ஆசிரியர்கள், வழிகாட்டியவர்கள், உறவினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நுரைச்சோலை மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
தான் பட்டம் பெறுவதற்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியருக்கு பாத்திமா சிப்ரா வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அவருடைய நன்றி கலந்த வாழ்த்தில், மதிப்பிற்குரிய சுக்ரி ஆசிரியருக்கு,
என் வாழ்வின் வழிகாட்டியாக விளங்கும் உங்களுக்கு, உங்கள் வழிகாட்டுதலால் தான் இன்று பல்கலைக்கழகம் வரை வந்தேன், உங்கள் வார்த்தையால் தான் இன்று பட்டதாரியாக வெளிவருகிறேன்.
எழுத்துக்கள் மட்டுமல்ல, வாழ்க்கையையும் கற்றுத் தந்தீர்கள், பயம் கொண்டு நின்ற என்னை தைரியமாக மாற்றினீர்கள், ஒரு சகோதரனைப் போல் தோள் கொடுத்து நின்றீர்கள்.
மனமார்ந்த நன்றியுடன் சொல்கிறேன் உங்கள் துஆவும் வழிகாட்டலுமே என் வெற்றிக்கு காரணம் என்று.


