எம்.யூ.எம்.சனூன்
கோயம்புத்தூரில் நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் மூன்று ஓட்டப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த வீரர், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதே தனது அடுத்த இலக்கு என தெரிவி்த்துள்ளார்.
இந்தியாவின் கோயம்புத்தூரில் நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் மூன்று ஓட்டப் போட்டிகளில் பதக்கங்களை வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்த தடகள வீரர் பிரதீப் குமார ஜயகொடி புதன்கிழமை (14) தனது சொந்த ஊரான குளியாப்பிட்டி நாரம்மல விகல்பொல திரும்பியபோது, ஊர் மக்களால் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு உற்சாகமாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்த போட்டியில் 5,000 மீற்றர், 10,000 மீற்றர் மற்றும் 15,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்ற அவர், மூன்று போட்டிகளிலும் பதக்கங்களை வென்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இந்தச் சாதனை விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
பல்வேறு வாழ்க்கைச் சவால்களுக்கு மத்தியிலும் தனது முயற்சியைக் கைவிடாமல் சர்வதேச அளவில் சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது தாயார் சுகவீனமடைந்துள்ளதுடன், தமக்குத் தூங்குவதற்குக்கூட முறையான படுக்கை வசதி இல்லாத கடினமான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சிரமங்களுக்கு மத்தியிலும் மனம் தளராமல் விளையாட்டுத் துறையில் தொடர்ந்து முயற்சித்து, நாட்டிற்காகப் பதக்கங்களை வென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இலங்கைக்குப் பெருமை சேர்ப்பதே தனது இலட்சியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வீரரின் சாதனையைப் பாராட்டும் வகையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், சக்தி தொலைக்காட்சியின் குருநாகல் மாவட்ட நிருபரும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஊடகப் பணிப்பாளரும் குழுமப் பணிப்பாளருமான ஊடகவியலாளர் ஏ.டபில்யூ.எம். பஸ்லான் அவர்களும் கலந்துகொண்டார்.
மேலும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் குருநாகல் மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்களுக்கான பணிப்பாளர் துஷாந்தி மதரா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான வை.பி.எம்.முஸம்மில் மற்றும் திருமதி எம்.ஆர்.எப்.ரிப்னா உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விளையாட்டு வீரர்களின் திறமையை அங்கீகரிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான பயிற்சி வசதிகள், பொருளாதார உதவிகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குவது அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகும். உரிய ஆதரவு கிடைக்கும்போது, இவ்வாறான திறமையான வீரர்கள் மேலும் பல சர்வதேச சாதனைகளைப் படைக்க முடியும்.
பிரதீப் குமார ஜயகொடி அவர்களுக்கு ஊர் மக்கள் வழங்கிய இந்த உற்சாக வரவேற்பு, அவரது சாதனைக்குக் கிடைத்த சமூக அங்கீகாரமாக அமைந்துள்ளது. அவரது ஒலிம்பிக் கனவு நனவாகவும், எதிர்காலத்தில் இலங்கைக்காக மேலும் பல சர்வதேச வெற்றிகளைப் பெற்றுத்தரவும் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.




