(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து, கொழும்பு கோட்டை சுங்கத் திணைக்களத் தலைமையகத்திற்கு முன்னால் உள்ள பகுதியில் வியாழக்கிழமை (2026 ஒக்டோபர் 15)மேற்கொண்ட விசேட கூட்டு சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்த வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகள் அடங்கிய தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான ரங்கல நிறுவனத்தினரும், மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட இந்த விசேட கூட்டு சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் (01) சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்த மின்னணு சிகரெட்டுகள் முப்பது (30) உடன் குறித்த சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், இந்தக் கூட்டு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய யட்டியந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரையும் மின்னணு சிகரெட்டுகள் அடங்கிய தொகையையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெலிக்கடை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


