எம்.யூ.எம்.சனூன்
குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்காக வென்டிலேட்டர் இயந்திரமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு (21) புதன்கிழமை காலை 09 மணிக்கு குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
குளியாப்பிட்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் சுகாதார நலனை முன்னிறுத்தி, பள்ளிவாசல் நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட மனிதநேயப் பணியின் ஒரு பகுதியாகவே இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குளியாப்பிட்டி ஜாமியுல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, குளியாப்பிட்டி பகுதியைச் சூழவுள்ள ஏனைய பள்ளிவாசல்களின் நிர்வாகங்களுக்கும் இத்திட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்தந்த பள்ளிவாசல் நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் பொதுமக்களிடமிருந்து நிதி சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இவ்வாறு பல்வேறு முஸ்லிம் ஊர்களின் பள்ளிவாசல் நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் மொத்தமாக 55 இலட்சம் ரூபா நிதி சேகரிக்கப்பட்டது.
இந்த முயற்சி, சமூகத்தின் கூட்டு முயற்சிக்கும், பிறருக்கு உதவும் மனப்பாங்கிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஆரம்பத்தில், குளியாப்பிட்டி வைத்தியசாலைக்குத் தேவையான சீ.டீ. ஸ்கேன் இயந்திரத்தையும் அதற்கான கட்டடத்தையும் அமைப்பதற்காக நிதி சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதற்காகப் பிரதேச மக்களும் முஸ்லிம் சமூகத்தினரும் தங்களது பங்களிப்புகளை வழங்கினர்.
எனினும், பிரதேசத்தைச் சேர்ந்த கொடையாளர் ஒருவர் தனது சொந்த நிதியில் குறித்த கட்டிடத்தை நிர்மாணித்து வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
அத்துடன், சீ.டீ. ஸ்கேன் இயந்திரத்தை சுகாதார அமைச்சின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொது மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதியை வைத்தியசாலையின் மற்றுமொரு அத்தியாவசியத் தேவைக்காகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெடன்கமுவ முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்காக வென்டிலேட்டர் இயந்திரமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வைத்தியசாலைப் பணிப்பாளர் வழங்கிய தகவல்களின்படி, தீவிர சிகிச்சைப் பிரிவில் காணப்பட்ட ஐந்து வென்டிலேட்டர் இயந்திரங்களில் மூன்று இயந்திரங்கள் மாத்திரமே அப்போது செயற்படும் நிலையில் இருந்தன. ஐந்து வருடங்களுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த இயந்திரங்கள் அடிக்கடி செயலிழக்கும் நிலையும் காணப்பட்டது.
இதனால், தீவிர சிகிச்சைப் பிரிவின் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கும், நோயாளிகளுக்குத் தேவையான சுவாச உதவியை வழங்கும் வசதிகளை வலுப்படுத்துவதற்கும் புதிய வென்டிலேட்டர் இயந்திரமொன்றைப் பெற்றுக்கொள்வது அவசியமானதாகக் கருதப்பட்டது.
இந்தத் தேவையைக் கருத்திற்கொண்டு, சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து வென்டிலேட்டர் இயந்திரத்தை வழங்குவதற்கான நிறுவனத்திற்குக் கொடுப்பனவு செலுத்தும் வகையில் காசோலை வழங்கப்பட்டது.
குளியாப்பிட்டி ஜாமியுல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளிவாசலில் தற்போதைய பேஷ் இமாமாகக் கடமையாற்றி வரும் ரியாஸ் மௌலவி அவர்கள் அனைவர் சார்பாகவும் அவர்களின் கரங்களால் இந்தக் காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
வைத்தியசாலைக்குத் தேவையான வென்டிலேட்டர் இயந்திரத்தை வழங்கும் நிறுவனத்தின் சார்பில் பிரதிநிதி ஒருவர் காசோலையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அதிகாரிகளான எம்.எம்.எம். அய்யூப் மற்றும் எம்.என்.எம்.சாஜித் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நற்பணியை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குளியாப்பிட்டி ஜாமியுல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஏனைய பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகள், இமாம்கள், நிதி சேகரிப்பில் பங்களித்த பொதுமக்கள் மற்றும் இந்த முயற்சி வெற்றியடைய உதவிய அனைவரினதும் பங்களிப்பும் பாராட்டத்தக்கதாகும்.
மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, நிதியுதவி வழங்குவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.
மதம், இனம், மொழி ஆகிய வேறுபாடுகளைக் கடந்து, மனிதநேயத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து மக்களின் நலனுக்காகச் செயல்பட முடியும் என்பதை இத்தகைய சமூகப் பணிகள் எடுத்துக்காட்டுகின்றன. ஒரு சமூகத்தினரால் வழங்கப்படும் பங்களிப்பு, ஒட்டுமொத்தப் பிரதேச மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும்போது, அது பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு, சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வை மேலும் வலுப்படுத்துகிறது.
குறிப்பாக, நோயாளிகளின் நலனையும் உயிர் காக்கும் மருத்துவ வசதிகளையும் முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள், சமூகப் பொறுப்புணர்வையும் பிறருக்கு உதவும் உயரிய பண்பையும் எதிர்காலச் சந்ததியினரிடையே வளர்க்க உதவுகின்றன.
சமய நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் சமூக மேம்பாட்டை முன்னிறுத்தும் இத்தகைய நற்பணிகள் எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.






எங்கு போனாலும் இறைச்சி ரொட்டி .ரோல்ஸ் அதை மட்டும் விட்டுடாதீங்க சரி எங்க அந்த தண்ணி போத்தலை காணும்
ReplyDelete