எம்.யூ.எம்.சனூன்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில், புத்தளம் தாருல் குர்ஆன் அல் கரீம் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கான ஊடகப்பயிற்சிப் பட்டறை அண்மையில் தாருல் குர்ஆன் அல்கரீம் அரபுக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தாருல் குர்ஆன் அல் கரீம் கல்லூரியின் அதிபரும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உப தலைவருமான அஷ்ஷேக் எம்.இஸட்.சௌக்கி பஹ்ஜி அவர்களின் வழிகாட்டலில், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.பக்ருதீன் அவர்களினால் இப்பயிற்சிப் பட்டறை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இப்பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
எதிர்கால சமூகத்திற்குத் திறமையான ஊடகவியலாளர்கள், சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்படும் ஊடகப் பணியாளர்களை உருவாக்கும் உயரிய நோக்கில் இவ்வாறான பயிற்சித் திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக, புத்தளம் நகரிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இவ்வாறான ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதுடன், பிரதேசத்திலுள்ள அனைத்து மத்ரஸாக்களிலும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பயனுள்ள பயிற்சி நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஏ.பி.ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி தெரிவித்தார்.
இன்றைய மாணவர்களை நாளைய சமூகத்தின் சிறந்த வழிகாட்டிகளாகவும், அறிவார்ந்த, திறமையான மற்றும் பொறுப்புணர்வுள்ள ஊடகப் பணியாளர்களாகவும் உருவாக்குவதே இம்முயற்சியின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.







