JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கையின் உப்பு உற்பத்தித் துறையின் 50 ஆண்டுகால அனுபவத்தைப் பதிவு செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூல் வெளியீடு.

இலங்கையின் சூரிய உப்பு உற்பத்தித் துறையில் 50 ஆண்டுகால அனுபவத்தையும் அறிவையும் ஆவணப்படுத்தும் வகையில், பொறியியலாளர் பாலசிங்கம் ஏகாம்பரம் அவர்களால் எழுதப்பட்ட Solar Salt Manufacturing Production நூலின் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் புத்தளம் நஜாத் வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச்சங்கத்தின் தலைவரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான ரனீஸ் பதூர்தீன் தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தியதுடன், இலங்கையின் உப்பு உற்பத்தித் துறையின் வளர்ச்சி, சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் தொடர்பான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக, சங்கத்தின் சார்பில் சுமார் 12 பக்கங்களைக் கொண்ட சிறப்புக் கட்டுரை ஒன்றும் தயாரிக்கப்பட்டது. 

ரனீஸ் பதூர்தீன் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியில், புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச்சங்கத்தின் முகாமையாளர் இஸட்.ஏ.ரஸ்மி அக்கட்டுரையைத் தொகுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கட்டுரையின் மூலம், உப்பு உற்பத்தித் துறையில் சங்கத்தின் பங்களிப்பு, அதன் வளர்ச்சிப் பயணம், எதிர்கொண்ட சவால்கள் மற்றும் எதிர்கால நோக்கங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்த முடிந்தது. இது சங்கத்தின் வரலாற்றைப் பதிவு செய்வதோடு, எதிர்காலத் தலைமுறையினருக்கும் பயனளிக்கும் ஒரு பெறுமதிமிக்க ஆவணமாக அமைகிறது.

இலங்கையின் உப்பு உற்பத்தி மற்றும் விநியோகத் துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில்துறை வல்லுனர்கள், கல்விச் சமூகத்தினர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டமை இந்நிகழ்வுக்குக் கூடுதல் சிறப்பைச் சேர்த்தது.

மேலும் உப்புத் தொழில் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய முன்னாள் உப்பு ஆலை முகாமையாளர் பாலசிங்கம் ஏகாம்பரம் அவர்கள் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். 

ஐம்பது ஆண்டுகால அனுபவம் என்பது ஒரு தனிநபரின் சாதனை மட்டுமல்ல, அது ஒரு தொழில்துறையின் வரலாறு, அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கான வழிகாட்டியாகும்.

அந்த வகையில், இந்நூல் வெளியீடு இலங்கையின் உப்பு உற்பத்தித் துறையின் வரலாற்றைப் பாதுகாப்பதற்கும், அடுத்த தலைமுறையினருக்கு அனுபவங்களையும் அறிவையும் கடத்துவதற்கும் முக்கியமான பங்களிப்பாக அமைகிறது.

புத்தளம் உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில், இத்தகைய பெறுமதிமிக்க நூலை உருவாக்கிய பொறியியலாளர் பாலசிங்கம் ஏகாம்பரம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் ரனீஸ் பதூர்தீன் தெரிவித்துள்ளார்.

உப்பு உற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதுகாத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, உப்புத் தொழில்துறையின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், எதிர்காலத்திலும் சங்கம் தனது பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்பதாகவும் ரனீஸ் பதூர்தீன் தெரிவித்தார்.

உப்புத் தொழில்துறையின் வரலாற்றைப் பாதுகாத்து உற்பத்தியாளர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி இலங்கையின் உப்பு உற்பத்தித் துறையின் முன்னேற்றத்திற்கு அனைவரும் கைகோர்க்க முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

























Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال