JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் வட மாகாண முஸ்லிம்களின் 36 ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு.

எம்.யூ.எம்.சனூன்

1990 ம் ஆண்டு வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் 36 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அக்டோபர் 28, 29ஆம் திகதிகளில் புத்தளம் பாலாவி கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் சிறப்பு ஏற்பாட்டில் கண்காட்சியும், கருத்துப் பகிர்வு நிகழ்வும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் பாலாவி தலைமை அலுவலக விசேட கலையரங்கில் நடைபெற்றது.

ஏ.ஆர்.ஏ. ரமீஸின் நெறிப்படுத்தலில், நிறுவன உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் 350 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களும் உள்ளூர் வாசிகளும் கலந்து கொண்டனர்.

வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்திற்கு முந்தைய வாழ்வியல், பாரம்பரியம், கலாசாரம், சமயத் தலங்கள், வதிவிடங்கள், சமூக உறவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளைப் பிரதிபலிக்கும் புகைப்படத் தொகுப்புகள், வரலாற்றுப் பொருட்கள் மற்றும் கண்காட்சிப் பதிவுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அத்துடன், வரலாற்று அனுபவப் பகிர்வுகள், கருத்தாடல்கள் மற்றும் உரைகளும் நடைபெற்றன.

1990ஆம் ஆண்டு வெளியேற்றத்தினால் மக்கள் எதிர்கொண்ட துயரங்கள், இழப்புகள், தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான அன்றைய உறவுகள், வெளியேற்றத்திற்குப் பின்னரான சவால்கள் மற்றும் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்புகள் தொடர்பிலும் கருத்துகள் பகிரப்பட்டன.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையும் ஆதங்கங்களையும் கேட்டறிந்ததுடன், தமது கருத்துக்களையும் முன்வைத்தனர்.

மேலும், உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் ஜவ்பர்தீன் ரழியூத்தீன், சமூகச் செயற்பாட்டாளர் சறீன், கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் தவிசாளர் ஏ.எம். பாயிஸ் மற்றும் நிறுவன உறுப்பினர் எஸ்.எம். அனிபா ஆகியோரின் கருத்துரைகளும் நிகழ்வில் முக்கியத்துவம் பெற்றன.

இதன்போது, பாதிக்கப்பட்ட மக்கள் தமது கடந்தகால அனுபவங்கள், இழப்புகள், உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பூர்வீக வாழ்விடங்களுடன் தொடர்புடைய எதிர்பார்ப்புகளை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்து கொண்டனர். மக்களின் அபிலாஷைகள் உரிய அரச மற்றும் நிர்வாகத் தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இடம்பெயர்ந்த மக்களை அனுசரித்து, உதவிகளையும் வளங்களையும் பகிர்ந்துகொண்ட உள்ளூர் சமூகத்தினருக்கும் ஏனைய தொடர்புடைய அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

36 ஆண்டுகள் கடந்தும் மறையாத வலிகளையும், நிறைவேறாத எதிர்பார்ப்புகளையும் வரலாற்றுச் சான்றுகளுடன் அடுத்த தலைமுறைக்குக் எடுத்துச் செல்லுதல், சமூக நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் பாரபட்சமற்ற உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் தளமாக இந்நிகழ்வு அமைந்தது.

“நினைவுகூர்வோம்! மீளத் திரும்புவோம்! மீண்டும் ஒன்றாய் வாழ்வோம்!” என்ற மகுட வாசகத்துடன், வரலாற்றை மறக்காமல் பாதுகாத்து, ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கிய மக்களின் எதிர்பார்ப்பையும் இந்நிகழ்வு வெளிப்படுத்தியது.






















Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال