எம்.யூ.எம்.சனூன்
மக்களின் நலன் மற்றும் சமூக சேவைகளை முன்னிறுத்தி, ஜே.டீ.எம்.நிறுவனத்தின் அனுசரணையுடன், அதன் உரிமையாளர் அல்ஹாஜ் நியாஸ் அவர்களால் புத்தளம் தள வைத்தியசாலைக்கு சுமார் 35 கட்டில் மெத்தைகள் அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு (22) வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
வைத்தியசாலையின் 7ஆம் இலக்க வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நன்கொடை, சமூக நலனில் அக்கறை கொண்ட மனிதநேயப் பணியாக அமைந்துள்ளது.
இந்நன்கொடையானது புத்தளத்தின் சமூக சேவையாளரும், பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருபவருமான அல்ஹாஜ் முஜீபுர் ஹாஜியார் அவர்களூடாக, புத்தளம் தள வைத்தியசாலையின் உயரதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் மிஸ்பாஹி, உப தலைவர் அஷ்ஷேக் ரியாஸ் தேவ்பந்தி, புத்தளம் பெரிய பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஆர்.எம்.சலீம், நஹ்தா அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் அஜ்மல், உறுப்பினர் சகோதரர் ஹஸீபுல்லாஹ் மற்றும் சிட்டி பாய்ஸ் அமைப்பின் தலைவர் பயாஸ் ஆகியோர் கலந்துகொண்டு, இச்சமூகப் பணிக்குத் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
ஒரு நோயாளி குணமடைவதற்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவதுடன், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் மிக முக்கியமான மனிதநேயப் பணியாகும். அந்த வகையில், வைத்தியசாலையின் தேவையைக் கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட இந்த அன்பளிப்பு, நோயாளிகளுக்கும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




