27 வது தொடர்.........
காரைதீவு
இராணுவ நடவடிக்கையில் 20.06.1990 அன்று கல்முனை நகரை கைப்பற்றியதை தொடர்ந்து, அதே தினத்தில் வெள்ளைக் கொடியுடன் காரைதீவு அகதி முகாம் அமைந்திருந்த பாடசாலை மீது ஹெலிகொப்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக பதிவாகியுள்ளது. இதில் மூவர் கொல்லப்பட்டதாகவும் மூவர் காயமடைந்ததாகவும் அறிக்கை கூறுகிறது. இந்த தாக்குதல் நடந்து மறுநாள், 21.06.1990 அன்று இராணுவம் காரைதீவுக்குள் நுழைந்தது.
இந்த நடவடிக்கையில் LTTE யினருடன் நீண்ட நேர நேரடி மோதல்கள் எதுவும் நடைபெற்றதற்கான ஆதாரம் எதுவுமில்லை.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் LTTE யினர் 15.06.1990 அன்றிலிருந்து வேகமாகப் பின்வாங்க ஆரம்பித்தனர். காரைதீவு, கல்முனை, அக்கரைப்பற்று போன்ற இடங்களில் இராணுவம் நுழைந்தபோது பெரிய அளவிலான LTTE யினரின் எதிர்ப்பு இல்லையென்பது இதற்கு சான்றாகும்.
காரைதீவு நகருக்குள் இராணுவம் நுழைந்தபோது சுற்றிவளைப்புக்கள் தேடுதல் வேட்டைகள் நடைபெற்றன. அதில் கைது செய்யப்பட்ட 26 பேர் ஓர் அறையில் அடைக்கப்பட்டதாகவும், பின்பு அந்த அறைக்குள் கைக்குண்டு வீசப்பட்டதாகவும், பின்பு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் பலர் கொல்லப்பட்டு, சிலர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
போர் தொடங்கியதிலிருந்து காரைதீவு பகுதியில் மாத்திரம் சுமார் 150 பேர் வரையில் தமிழர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று பதிவாகியுள்ளது.
நிந்தவூரில் முஸ்லிம்கள் படுகொலை
22.06.1990 அன்று நிந்தவூரில் 62 முஸ்லிம்கள் LTTE யினரினால் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வெளியாகி, அப்போது நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இது ஓர் திட்டமிட்ட வதந்தியாக பார்க்கப்பட்டது.
அப்போது Associated Press தகவலை அடிப்படையாகக் கொண்ட பதிவுகளில், ஆரம்பத்தில் இலங்கை பாதுகாப்புத்துறை 62 முஸ்லிம்களை LTTE கொன்றதாக தெரிவித்தது. ஆனால் அடுத்த நாள் இந்த அறிக்கை தவறான தகவலை அடிப்படையாகக் கொண்டது என்று இராணுவம் மறுப்பு தெரிவித்தது.
இவ்வாறான வதந்திகள் ஏன் பரப்பப்பட்டது ? ஏனைய பகுதிகளில் உள்ள முஸ்லிம்களை LTTE யினருக்கு அல்லது தமிழ் மக்களுக்கு எதிராக திசை திருப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டதா போன்ற பல சந்தேகங்களை அப்போது தொற்றுவித்தது.
அக்கரைப்பற்று
24.06.1990 அன்று கேணல், சரத் பொன்சேகா தலைமையில் அக்கரைப்பற்று நகருக்குள் இராணுவம் நுழைந்தது. இராணுவம் நகருக்குள் நுழைவதற்கு முன்பே அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் பலர் தேவாலயம் மற்றும் பாடசாலைகள் போன்ற இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தார்.
அக்கரைப்பற்று நகருக்குள் இராணுவம் நுழைந்த பின்பு இராணுவத்தின் அடுத்த நகர்வானது அக்கரைப்பற்று - பொத்துவில் பாதையான திருக்கோவில், தம்பிலுவில், கோமாரி ஆகியவற்றை நோக்கியதாக இருந்தது.
அக்கரைப்பற்று – பொத்துவில் பாதை
திருக்கோவில் பகுதியிலிருந்து 18.06.1990 அன்று LTTE யினர் தனது பாதுகாப்பு நிலைகளை விட்டு காட்டுப் பகுதிகளை நோக்கி பின்வாங்கியதாகவும், இன்னும் சிலர் விமானப் படையினரின் தாக்குதலினால் கொல்லப்பட்டதாகவும் அறிக்கைகள் கூறுவதுடன், இதன் சரியான எண்ணிக்கை தெரியவில்லை.
அவ்வாறு பின்வாங்கிச் செல்லும்போது LTTE யினரின் பல பதுங்குக் குழிகளையும், காவல் நிலைகளையும் விட்டுச் சென்றதாகவும், அவைகளை இராணுவத்தினர் வருவதற்கு முன்பாகவே பொதுமக்களினால் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அக்கரைப்பற்று – பொத்துவில் பாதை வழியாக முன்னேறிய அரச படைகள் கோமாரி வரை சென்று பொத்துவில் பகுதியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் மூலம், அம்பாறை மாவட்டத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததனால் பொத்துவில் வரையிலான அரச படை முன்னேற்றம் நிறைவு பெற்றது.
இதில் முக்கியமான இராணுவ உண்மை என்னவென்றால், LTTE யினர் 11.06.1990 அன்று கிழக்கு மாகாண பொலிஸ் நிலையங்களை கைப்பற்றியிருந்தாலும், 15.06.1990 அன்று முதல் அம்பாறை மாவட்டத்தின் பல நகரங்களிலிருந்து எதிர்பார்த்த நீண்டகால போர் நடவடிக்கையில் ஈடுபடாமல் கட்டம் கட்டமாக பின்வாங்கத் தொடங்கியது.
அம்பாறை மாவட்டத்தில் அரச படைகள் சில இடங்களில் LTTE யினருடன் மோதலை எதிர்கொண்டாலும், கல்முனை, காரைதீவு, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் போன்ற இடங்களில் பெரும்பாலும் LTTE யினர் வலிந்து பின்வாங்கிய பின்னர் அப்பிரதேசங்களின் கட்டுப்பாட்டினை அரச படையினர் பெற்றனர்.
தொடரும்..............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
