24 வது தொடர்............
அன்றைய காலகட்டத்தில் அரசாங்கம் கடுமையான செய்தித் தடையை அமுல்படுத்தியிருந்த நிலையில், உள்ளூர் சாட்சிகள், பாராளுமன்றப் பதிவுகள், சர்வதேச மன்னிப்புச் சபை, ஐக்கிய நாடுகள் விசாரணைகள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் நினைவுகள் ஆகியவற்றைகொண்டே தரவுகள் உறுதிப்படுத்தப் படுகின்றது.
11.06.1990 அன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் மற்றும் இராணுவ நிலையங்கள் தாக்கப்பட்டு இரண்டாம் ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், மறுநாள் 12.06.1990 இல் LTTE யினரிடமிருந்து நிலங்களை மீட்பதைவிட, முற்றுகைக்குள்லிருந்த இராணுவ வீரர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் அரச படையினர் ஈடுபட்டனர்.
சில பகுதிகளில் 12 ஜூன் அன்றும் LTTE யினரின் முற்றுகை தொடர்ந்தது. அதில் கிரான், மற்றும் களுவாஞ்சிக்குடி இராணுவ முகாம்களின் முற்றுகையும் அடங்கும்.
கிரான் இராணுவ முகாமில் 80 க்கும் குறைவான இராணுவ வீரர்கள் 18 ஜூன் வரைக்கும் முற்றுகைக்குள் அகப்பட்டு சரணடையாமல் போர் செய்தனர். அதில் பெரும்பாலானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுவதுடன், LTTE யின் 100 க்கும் மேற்பட்ட உடல்கள் முகாமைச் சுற்றி கிடந்ததாகவும் பதிவுகள் உள்ளது.
13.06.1990 அன்று திருகோணமலை நகரிலிருந்து LTTE யினர் பின்வாங்கத் தொடங்கியதையடுத்து இராணுவத்தினர் திருமலை நகருக்குள் நுழைந்தனர்.
ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் திருகோணமலை நகரில் கடைகள், வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டதாகவும், நகரில் சுமார் 60 தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும், பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
14 ஜூன் அன்று கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் 60 பொலிசார் கொலை செய்யப்பட்டதாகவும், அவர்களின் எரிக்கப்பட்ட உடல்கள் ஜூலை 6 இல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேஜர் ஜெனரல், டென்சில் கொப்பேகடுவ தலைமையில் மட்டக்களப்பின் வடக்கு திசையிலிருந்து மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 3 Brigade Group மற்றும் 4 Gemunu Watch + 5 Vijayabahu Infantry Regiment ஆகியவை மட்டக்களப்பை நோக்கி முன்னேறின.
இந்த முன்னேற்றமானது 19 ஜூன் அன்று மட்டக்களப்பு நகரை அடைந்தது. இந்தப் படையணி கடுமையான எதிர்ப்பையும், சவால்களையும் எதிர்கொண்டு இலக்கை அடைந்தன.
அம்பாறை பகுதியிலிருந்து First Brigade Group, 1 Sinha Regiment மற்றும் 1 Special Forces Regiment ஆகியவை வெல்லாவெளி வழியாக களுவாஞ்சிக்குடி நோக்கி முன்னேறின. இந்தப் படையணி 18 ஜூன் அன்று இலக்கை அடைந்ததாக கூறப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆவணத்தில், 16 ஜூன் அன்று களுவாஞ்சிக்குடியில் உள்ள ஒரு மருத்துவமனை மீது குண்டுத் தாக்குதல் நடந்ததில் 10 நோயாளிகள் கொல்லப்பட்டதாக பதிவு உள்ளது. அந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்று கூறப்படவில்லை.
அத்துடன், கடற்கரை அருகில் இருந்த காரணத்தினால், 11 ஜூன் அன்று முற்றுகைக்குள்ளான கல்முனை இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினர்கள் 13 ஜூன் அன்று கடல்வழியாக மீட்கப்பட்டனர். ஆனால் கல்முனை நகரத்தை அத்தினத்தில் கைப்பற்றுவதற்கு மீட்புப் படையினரால் முடியவில்லை.
களத்தில் இத்தனை வன்முறைகளும், போர்களும் நடைபெற்றிருந்தும், பிரேமதாசா அரசாங்கம் LTTE க்கு எதிராக 17.06.1990 வரைக்கும் வாய் திறக்கவில்லை.
ஆனால் அத்தனை ராஜதந்திர முயற்சிகளும் தோல்வியடைந்ததன் பின்பு 18.06.1990 அன்று வாய் திறந்தனர்.
அதாவது “தென்னிலங்கையில் JVP க்கு எதிராக பயன்படுத்திய கடுமையான அணுகுமுறையினை LTTE யினருக்கு எதிராக பயன்படுத்தப் போவதாக” ஜனாதிபதி பிரேமதாசா அவர்கள் அறிவித்தார். இந்த அறிவிப்புடன் இரண்டாம்கட்ட ஈழப்போர் சந்தேகமின்றி முழுமையாக ஆரம்பமானது.
தொடரும்............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
