JobVibe.lk - Sri Lanka Job Portal

LTTE யினரின் வருகையும், முஸ்லிம்களின் வரவேற்பும், முஸ்லிம் காங்கிரசின் வெளியேற்றமும்.

17 வது தொடர்......... 

சுமார் 5000 பேர் அடங்கிய முதலாவது தொகுதி இந்தியப் படையினர் 1989.10.25 திகதி அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளியேறியதுடன், 1990.03.24 திகதி வட-கிழக்கிலிருந்து முழுமையாக வெளியேறினர்.  

இந்தியப் படையினரின் வெற்றிடத்தை TNA சட்டவிரோதமான முறையில் பொறுப்பேற்றன. அம்பாறை மாவட்டத்தில் 1989.11.05 திகதி TNA மீது LTTE யினர் முதலாவது தாக்குதலை ஆரம்பித்தனர். அதன்பின்பு முழு அம்பாறை மாவட்டத்தின் கட்டுப்பாட்டையும் LTTE யினர் கைப்பற்றியதுடன், படிப்படியாக இந்தியப் படையினர் வெளியேறிய இடங்களை கைப்பற்றி பின்பு வடகிழக்கின் முழுக் கட்டுப்பாடும் LTTE யினர் வசம் வந்தது. 

1985 தொடக்கம் 1989 வரையிலான காலங்களில் EPRLF, PLOTE, TELO. Tri-Star, ENDLF ஆகிய இயக்கங்கள் கிழக்கில் முஸ்லிம்கள் மீது வன்முறைகளில் ஈடுபட்டதன் காரணமாக, அவ்வியக்கங்கள் மீதான வெறுப்பினால் LTTE யினர் மீது முஸ்லிம்களுக்கு அபிமானம் ஏற்பட்டது. 

அத்துடன், சுய பாதுகாப்புக்காக முஸ்லிம் கிராமங்களில் உள்ள சில இளைஞர்கள் புனித ஜிஹாத் என்ற பெயரில் அமைப்புக்களை உருவாக்கினாலும், அதனை உயிரோட்டமுள்ள இயக்கமாக கட்டமைப்பதற்கு போதிய ஆயுதங்கள் இருக்கவில்லை. 

இந்த நிலையில், EPRLF போன்ற இயக்கங்கள் தனது சமூகத்துக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக வெறுப்படைந்த முஸ்லிம் போராளிகள் சிலர் அவ்வியக்கத்தைவிட்டு விலகி முஸ்லிம் அமைப்புக்களுக்கு பயிற்சி வழங்கினர். ஒருசிலர் ஆயுதங்களுடன் வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது.  

இவ்வாறான நிலையில், 1989 நவம்பர் மாதத்தில் TNA (தமிழ் தேசிய இராணுவம்) க்கு எதிராக LTTE யினரின் இராணுவ நடவடிக்கை காரணமாக, அதிலிருந்த தப்பிச்சென்ற சிலர் ஆயுதங்களை விற்பனை செய்தது பற்றி முன்பு குறிப்பிட்டுள்ளேன். அவ்வாறு விற்பனை செய்த ஆயுதங்களை பணம் படைத்தவர்களின் உதவியுடன் முஸ்லிம் இளைஞர்கள் வாங்கியதாக குறிப்புக்களில் உள்ளது.

இந்தியப் படையின் இறுதிப் படையணி 1990.03.24 திகதி முற்றாக வெளியேற இருந்த நிலையில், 1990.03.01 அன்று, வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள், திருகோணமலையில் நடைபெற்ற மாகாணசபைக் கூட்டத்தில் ‘Eelam Democratic Republic’ என்னும் ஒன்றை உருவாக்குவதற்கான தீர்மானத்தை முன்வைத்தார். 

இந்த நடவடிக்கையானது ஒருதலைப்பட்சமான ஈழ சுதந்திரப் பிரகடன முயற்சியாக இலங்கை அரசாங்கத்தால் கருதப்பட்டு, பின்னர் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவினால் 25.03.1990 அன்று வடகிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி நிர்வாகத்துக்குள் கொண்டுவரப்பட்டது.

வடகிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டதானது பிரேமதாசா புலிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக அப்போது பேசப்பட்டது. 

இந்தியப்படையின் வெளியேற்றத்துடன், அவர்களின் துணையுடன் இயங்கிய ஏனைய தமிழ் இயக்கங்களின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறினர்.   

இந்த நிலையில், வடகிழக்கின் முழு நிருவாகத்தையும் LTTE யினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். LTTE யினர் மீது முஸ்லிம்களுக்கு அப்போது மிதமிஞ்சிய நம்பிக்கை இருந்தது. இதனால் முஸ்லிம் பிரதேசங்களில் LTTE யினருக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. அடிக்கடி விருந்துகள் படைக்கப்பட்டது. சம்மாந்துறையின் புலிகளின் பொறுப்பாளருக்கு ஊர் மக்களினால் மோட்டார் வைக் வழங்கப்பட்டது. 

பல முஸ்லிம் இளைஞர்கள் LTTE இயக்கத்தில் இணைந்துகொண்டதுடன், இன்னும் பலர் LTTE யின் பிரதித் தலைவர் மாத்தையா தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியான “விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி” யில் இணைந்து கொண்டனர். 

வடகிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு புலிகளினால் மரண தண்டனை விதிப்பட்டிருந்ததன் காரணமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் EPRLF இயக்கத்தினரைப் போன்று வடகிழக்கிலிருந்து வெளியேறினர். 

அதாவது முஸ்லிம்கள், LTTE க்கு வரவேற்பு வழங்கிய நிலையில், முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் காங்கிரஸ் LTTE யின் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறியது.   

தொடரும்..........

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال