JobVibe.lk - Sri Lanka Job Portal

CVF: வடகிழக்கு மாகாணசபையில் தமிழ், முஸ்லிம் இராணுவம்.

பதின்மூன்றாவது தொடர்..............

இந்திய படையினர் நிலைகொண்டிருந்த காலத்தில், வடகிழக்கில் பாதுகாப்பு நிலைமை மோசமாக இருந்தது. வடகிழக்கு மாகாண சபையின் நிர்வாகம், பொது மக்களின் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கினை பேணுவதற்கான ஆயுதம் ஏந்திய துணை பாதுகாப்புப் படையாக Citizen’s Volunteer Force (CVF) உருவாக்கப்பட்டது. 

இதற்கான அரசாங்க வர்த்தமானி அறிவிப்பு 02.11.1988ல் வெளியிடப்பட்டது. பின்னர் 18.01.1989 அன்று Citizens Volunteer Force Regulations உருவாக்கப்பட்டு, அதன் பணிகள் மற்றும் ஆட்சேர்ப்பு தகுதிகள் வரையறுக்கப்பட்டன. 

இது சட்டரீதியாக இலங்கை அரசின் படையணியாக இருந்தாலும், நடைமுறையில் CVFக்கான ஆளணி திரட்டல் மிகவும் சர்ச்சைக்குரியதாக அமைந்தது. EPRLF, ENDLF, TELO, PLOTE உறுப்பினர்களும் மற்றும் அதனுடன் தொடர்புடைய தமிழ் ஆயுதக் குழுக்களும் இணைந்ததுடன், அதற்கு மேலதிகமாக தமிழ் இளைஞர்கள் கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். 

வடகிழக்கு மாகாண சபையை EPRLF ஆட்சி செய்ததாலும், CVF படையணியை திரட்டுவதில் EPRLF இயக்கம் முன்னின்று செல்வாக்கு செலுத்தியதாலும், அது EPRLF இயக்கத்தின் துணைப்படை என்ற பார்வை இருந்தது. ஆனால் அது பிழையான தகவலாகும். CVF என்பது சட்டரீதியான அரச படையாகும்.  

அத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை உறுப்பினர்கள் மூலமாக முஸ்லிம் இளைஞர்கள் சேர்க்கப்பட்டனர். முஸ்லிம் இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 1,000 பேர் வரையில் இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.   

1989 இல் சுமார் 4,000 க்கு மேற்பட்ட இளைஞர்கள் CVF இல் கட்டாயமாக சேர்த்துக் கொள்வதற்காக தடுத்து வைக்கப்பட்டதாகவும், சுமார் 1,300 பேர்கள் வரையில் கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவதற்காக கொழும்புக்குத் தப்பிச் சென்றதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது. 

CVF யில் கட்டாய ஆட்சேர்ப்பு காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவியது. இது LTTE யினருக்கு சாதகமாக இருந்தது.    

ஆரம்பத்தில் CVF இல் இணைத்துக் கொள்வதற்கான படையினரின் எண்ணிக்கை 3,000 என அனுமதிக்கப்பட்டது. ஆனால் பின்பு 7,000 ஆக அதிகரித்து அதனை இராணுவ மயமாக்க முயற்சிக்கப்பட்டது.   

CVF படையினருக்காக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஊரணி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட பயிற்சி நிலையங்களில் இந்தியப் படையினரினால் பயிற்சி வழங்கப்பட்டு, அதனை இந்திய புலனாய்வு அமைப்பான RAW அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர். அவர்களுக்கு S-84 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டது. இது LTTE யினர் பயன்படுத்திய AK47, T56 ஆகிய துப்பாக்கிகளைவிட குறைந்த திறனுடையது.   

CVF படையினருக்கான பயிற்சியில் கலந்துகொண்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிற்சி நிலையங்களில், ஏனைய தமிழ் இயக்கத்தினரினால் பாகுபாடுகளும், அச்சுறுத்தல்களும், உயிர் ஆபத்துக்களும் இருந்தது. பலர் இம்சைப்படுத்தப்பட்டனர்.  

பயிற்சிகள் நிறைவடைவதற்கு முன்பாக ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள், பயிற்சி நிலையத்திலிருந்து தப்பி ஓடிவந்தனர். தங்களது பிள்ளைகளுக்கு ஏற்பட்ட கொடுமை காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்களிடம் பெற்றார்கள் வழங்கிய அழுத்தத்தினால், மாகாணசபை உறுப்பினர்கள் EPRLF உயர்மட்டம் மற்றும் இந்திய படை அதிகாரிகளிடம் பேசி CVFயில் இணைந்த பல முஸ்லிம் இளைஞர்களை பெற்றாரிடம் ஒப்படைத்தனர். எஞ்சிய சிலர் CVF படைமுகாம் என்ற போர்வையில் EPRLF, ENDLF, TELO, PLOTE இயக்கத்தினருடன் கடமையில் அமர்த்தப்பட்டனர். 

அவ்வாறு கடமையின்போது குறித்த தமிழ் இயக்கதினர்களின் எடுபிடிகளாகவும், அடிமைகள் போன்றும் CVF முஸ்லிம் உறுப்பினர்கள் பயன்படுத்தப்பட்டனர். LTTE யினரும் CVF யினரை கடுமையாக இலக்கு வைத்தனர்.  

அத்துடன் LTTE யினரின் தாக்குதலுக்கு முதலில் முகம் கொடுக்கும் விதமாக முன்னரங்கு காவல் நிலையங்களில் முஸ்லிம் உறுப்பினர்கள் நிறுத்தப்பட்டனர். 

இரவு நேரங்களில் EPRLF மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்கள் நன்றாக தூங்கும்போது அவர்களை கண்விழித்து காவல் காக்கும் கடமைகளை முஸ்லிம் CVFயினர் மேற்கொண்டதனை கல்முனை ரெஸ்ட்ஹவுஸ் முகாமில் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான நிலையில் ஒருசில மாதங்களிலேயே தொண்ணூறு சதவீதமான முஸ்லிம் இளைஞர்கள் CVF யிலிருந்து விலகியிருந்தனர். 

அதுபோன்று கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் இளைஞர்களும் காலப்போக்கில் அதிலிருந்து தப்பிச் சென்றனர், இன்னும் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றனர். இவ்வாறான நிலையில் CVF படையணியானது எதிர்பார்த்த வெற்றியினை வழங்கவில்லை. அதாவது செயலிழந்தது.  

தொடரும்................

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال