எம்.யூ.எம்.சனூன்
ஆசிய உதைபந்தாட்டக் களத்தை நோக்கி நகர்ந்து வருகிறார், புத்தளம் பாலாவியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் முஹம்மது அகாஸ்.
ஆரம்பமாகவுள்ள 17 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண காற்பந்தாட்ட தொடருக்கான இலங்கை தேசிய அணியைத் தெரிவு செய்யும் தீவிரப் பயிற்சிகளும் தேர்வுகளும் நாடளாவிய ரீதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
கொழும்பு களனி மைதானத்தில் புத்தளம் மாவட்ட வீரர்களுக்கான உத்தியோகபூர்வ தெரிவுப் போட்டி மிகக் கடுமையான சவால்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.
இதில் புத்தளம் மண்ணின் பெருமை மிகு அடையாளமான புத்தளம் பாலாவி முஸ்லிம் கல்லூரி மாணவரும், புத்தளம் யாழ் முஸ்லிம் யுனைட்டட் அணியின் திறமை மிக்க இளம் வீீீரருமான முஹம்மது அகாஸ் புத்தளம் மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தி களமிறங்கினார்.
கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தெரிவுகளில், தனது அசாத்திய திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த முஹம்மது அகாஸ் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.
தேசிய அணிக்கான வாய்ப்பினை உறுதி செய்யும் இறுதிச் சுற்றுத் தெரிவு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெறவுள்ளது.
இறுதிக் கட்டத்திலும் முஹம்மது அகாஸ் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியில் இடம் பிடித்து புத்தளம் மண்ணுக்கும் ஊருக்கும் பெருமை சேர்க்க பாலாவி முஸ்லிம் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், கல்வி சாரா ஊழியர்கள், புத்தளம் காற்பந்தாட்ட லீக் நிர்வாகிகள் மற்றும் யுனைட்டட் கழகத்தினர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.


