26 வது தொடர்.............
11.06.1990 அன்று கிழக்கில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் LTTE யினரால் கைப்பற்றப்பட்டதன் மூலம், இரண்டாவது ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு LTTE யினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கிழக்கு மாகாணத்தை மீட்கும் இராணுவ நடவடிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டது போன்ற பாரிய எதிர்ப்புக்கள் அம்பாறை மாவட்டத்தில் இராணுவத்துக்கு இருக்கவில்லை.
சம்மாந்துறை:
அம்பாறையை தளமாகக் கொண்டிருந்த அரச படைகள் முன்னேறி சம்மாந்துறையை நோக்கிச் சென்றன. அதன்பின்னர் 14.06.1990 அன்று அரச படைகள் சம்மாந்துறைக்குள் நுழைந்தன.
சம்மாந்துறையை கைப்பற்றும் அரச இராணுவ நடவடிக்கையில் பாரிய மோதல்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை. மாறாக, LTTE யினர் ஏற்கனவே சுற்றுப்புறப் பகுதிகளுக்குப் பின்வாங்கியிருந்த சூழலில் படைகள் சம்மாந்துறை நகருக்குள் எதிர்ப்பின்றி நுழைந்தன.
பொத்துவில்:
அம்பாறை மாவட்ட தென்பகுதியின் முக்கிய இராணுவ நடவடிக்கையானது பொத்துவிலை நோக்கியதாகும். 11.06.1990 அன்று பொத்துவில் பொலிஸ் நிலைய சுற்றிவளைப்பில் LTTE யினரின் எண்ணிக்கை மிகக் குறைவானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் LTTE யினரின் அதிகமான வாகனங்கள் பொத்துவில் பகுதியில் நடமாடியதன் காரணமாக பெரிய எண்ணிக்கையிலான போராளிகள் இருப்பது போன்று தோன்றியது. இதனால் அருகிலிருந்த அரசுப் படைத் தளங்கள் உடனடியாக வெளியே வராமல் இருந்தன.
15.06.1990 அன்று இராணுவமும், விசேட அதிரடிப் படையினரும் பொத்துவில் நகருக்குள் நுழைந்தன. அரச படைகள் நுழைவதற்கு முன்பு LTTE யினர் நகரைவிட்டு பின்வாங்கி கோமாரியை நோக்கிச் சென்றனர். பின்பு பெரும்பாலான தமிழ் மக்கள் பொத்துவிலிலிருந்து கோமாரியை நோக்கி கால்நடையாகச் சென்றனர்.
இதன்மூலம் பாரிய மோதலுக்கு பின்பு அரச படைகள் பொத்துவிலை கைப்பற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை.
வீரமுனை:
இராணுவத்தினர் வீரமுனைக் கிராமத்துக்குள் 18.06.1990 அன்று நுழைந்தபோது பெரியளவில் மோதல் இருக்கவில்லை. ஆனால் உள்ளூர் சாட்சிகளின்படி, வீதிகளில் நின்ற 13 பேரை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களை காணவில்லை என்றும், பின்னாட்களில் அகதி முகாம் சோதனை செய்யப்பட்டு பலர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
வீரமுனை படுகொலை பற்றி அதிகமாக பேசப்படுகின்ற காரணத்தினால், எதிர்வருகின்ற நாட்களில் வீரமுனை பற்றிய சிறப்புக் கட்டுரையில் அது பற்றி விரிவாக அலசுவோம்.
கல்முனை:
கல்முனையின் நிலை வேறுபட்டது. 11.06.1990 அன்று கல்முனையில் பொலிஸ் நிலையம், இராணுவ முகாம் ஆகியவற்றின் சுற்றிவளைப்பின்போது ஆரம்பத்தில் கடுமையான மோதல் இடம்பெற்றது.
பொலிசாருடனான மோதலில் இரண்டு LTTE உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். மோதல் நடைபெற்ற அதே தினத்தில் பொலிசார் மோதலை நிறுத்திக்கொண்டு LTTE யினரிடம் சரணடைந்தனர்.
கல்முனை ASP யின் உத்தரவின் பேரிலேயே மோதல் நிறுத்தப்பட்டது. பொலிசார் சரணடைந்த பின்பு LTTE யினரால் அதே ASP கொல்லப்பட்டார்.
ஆனால் இராணுவத்தினர் 13.06.1990 அன்று கடல் வழியாக தப்பிச் செல்லும் வரைக்கும் தொடர் மோதலில் ஈடுபட்டனர். குறைந்த எண்ணிக்கையிலான இராணுவத்தினர் அங்கு இருந்ததன் காரணமாக இராணுவத்தினருக்கு உதவியாக பீரங்கி ஆதரவு சூட்டுக்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
20.06.1990 அன்று இராணுவத்தினர் மீண்டும் கல்முனை நகருக்குள் நுழைந்தது. அவ்வாறு நுழைவதற்கு முன்பாக நகரை நோக்கி “கொண்டவெட்டுவான்” முகாமிலிருந்து கடுமையான எறிகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தனர். இதனால் பல தமிழ் பொது மக்களும் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலினால் கல்முனையின் மகளிர் நிலையத்தில் இருந்த சுமார் 150 சிறுமிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் இந்த சிறுமிகளை காப்பாற்றும் நோக்கில் 14.06.1990 அன்று கல்முனையிலிருந்து சாய்ந்தமருது கடற்கரை வழியாக இரவு நேரத்தில் காரைதீவுக்கு அழைத்துச் சென்றனர். இதற்காக அப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் உதவினர்.
இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலுக்கு பின்பு LTTE யினர் பின்வாங்கியதும், இராணுவம் நகருக்குள் நுழைந்தது. இதனைத் தொடர்ந்து கல்முனை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுற்றிவளைப்புக்கள், தேடுதல்கள் நடத்தப்பட்டு, சந்தேகத்தின் பேரில் பல தமிழ் பொதுமக்கள் மீது பெருமளவிலான கொலைகள் மற்றும் காணாமல் போதல்கள் இடம்பெற்றதாக UTHR உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் பதிவு செய்துள்ளன.
தொடரும்.........
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
