(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படை, ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் பற்றிய அலுவலகம் (UNODC) மற்றும் ஜெனரல் சர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சமுத்திர ஆய்வுகளுக்கான பிராந்திய மையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள, கப்பல்களில் ஏறுதல், சோதனையிடுதல், கைது செய்தல் மற்றும் மறைக்கப்பட்ட இடங்களை பரிசோதிக்கும் முறைகள் பற்றிய பயிற்சிப் பாடநெறிக்கு இணைவாக, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அதிமேதகு Rémi Lambert அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் திங்கட்கிழமை (2026 செப்டம்பர் 28) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகம் மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர், கடற்படை பிரதி பிரதம அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் நலிந்த திசாநாயக்க ஆகியோரைச் சந்தித்து, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, சிறப்புப் படகுகள் படைப்பிரிவின் தலைமையகப் பயிற்சிப் பள்ளியில் இடம்பெறும் பயிற்சித் திட்டத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்ற தூதுக்குழுவினர், பாடநெறிக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் நடைமுறைப் பயிற்சிப் பயிற்சிகளையும் பார்வையிட்டனர்.
மேலும், சிறப்புப் படகுகள் படைப்பிரிவின் பயிற்சிகளைப் பார்வையிடுவதற்காக இலங்கையிலுள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தூதரகம், ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் (UNODC), சமுத்திர ஆய்வுகளுக்கான பிராந்திய மையம் மற்றும் பிரான்ஸ் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அத்துடன், இந்நிகழ்வில் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சமுத்திர ஆய்வுகளுக்கான பிராந்திய மையத்தின் பணிப்பாளர் கெப்டன் ஜானக குணவர்தன, சிறப்புப் படகுகள் படைப்பிரிவின் பயிற்சிப் பள்ளியின் கட்டளைத் தளபதி கெப்டன் தர்மசிரி ஹேரத், சிறப்புப் படகுக் படையணியின் கட்டளை அதிகாரி கொமாண்டர் லக்மால் வீரக்கொடி உட்பட கடற்படைப் படையினரும் கலந்துகொண்டனர்.













