(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கையின் மறைந்திருக்கும் சொர்க்கமான வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் டொல்பின் (Dolphins). காற்று சறுக்கு விளையாட்டு (Kite Surfing), அழகிய தீவுகள், குளங்கள், இயற்கை வனங்கள், ஆறுகள் என பல்வேறுபட்ட இயற்கை வளங்களை கொண்டது. உலகமே வியந்து பார்க்கும் வடமேல் மாகாணத்தின் பெருமையை கொண்டாடும் நாள் இது.
வயம்ப அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, கற்பிட்டி பிரதேச சபை மற்றும் கற்பிட்டி சுற்றுலா ஹோட்டல் சங்கம் இணைந்து நடத்தும் இந்த கொண்டாட்ட நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (27) கற்பிட்டி ஹிரு பீச் ரிசோட் (Hiru Beach Resort) இல் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய தலைமையில் இடம்பெற்றது.
வடமேல் மாகாணத்தின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், உள்ளூர் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், ஹோட்டல் துறையை வலுப்படுத்தவும் இது ஒரு முக்கிய சந்தர்ப்பமாக கருதப்பட்டதுடன்
வடமேல் மாகாணத்தின் சுற்றுலா எதிர்காலம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் கயான் ஜனக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான எம் ஜே எம் பைசல், வடமேல் மாகாண அமைச்சு செயலாளர் வன்னிநாயக்க, வயம்ப அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் நயன காரியவசம், வயம்ப சுற்றுலா பணிப்பாளர் நாயகம் நாலக குமார, புத்தளம் மாவட்ட சுற்றுலா இணைப்பாளர் நிமல் பத்திரன, கற்பிட்டி பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம் ரிகாஸ், உப தவிசாளர் சமன் குமார ஹேரத் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் என பலரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.














