எம்.யூ.எம்.சனூன்
புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் விசேடநிகழ்வு தேடல் மீடியாக் கல்லூரி மூலமாக அண்மையில் (14) மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தேடல் மீடியா கல்லூரியின் நிறுவனரும், தலைவருமான எஸ்.ஐ.எம்.ஹம்தி உமர் பாரூக் மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்குச் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் சிறப்புப் பரிசுகளை வழங்கி கௌரவித்ததுடன், 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுத் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி வாழ்த்தி சிறப்பித்தார்.
கிராமப்புற சூழலில் பயின்று சாதனை படைக்கும் மாணவர்களின் திறமைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதும், அவர்களின் உயர் கல்விப் பயணத்திற்குத் தேவையான தன்னம்பிக்கையை ஊட்டுவதும் இவ்வாறான நிகழ்வுகளின் முக்கிய நோக்கமாகும்.
அந்த வகையில் தேடல் மீடியாக் கல்லூரி முன்னெடுத்துள்ள இச்சேவை அப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஒரு புதிய திருப்பத்தையும் பெரும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வை மிக நேர்த்தியாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய பாடசாலை அதிபர் எம்.யூ.எம்.சாஜஹான் அவர்களுக்கும், பாடசாலை ஆசிரியர் பெருந்தகைகளுக்கும், நிர்வாகத்தினருக்கும் தேடல் மீடியாக் கல்லூரி தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் இந்நிகழ்வை மிகவும் திறம்பட ஒருங்கிணைத்த தேடல் மீடியாக் கல்லூரியின் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை பஜீலா பர்வீன் அவர்களுக்கு கல்லூரி சார்பாக பிரத்தியேக நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்திலும் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயம் கல்வி, விளையாட்டு மற்றும் கலைத்துறைகளில் பல வரலாற்று சாதனைகளைப் படைத்து, சமூகத்திற்குப் பயனுள்ள சிறந்த பிரஜைகளை உருவாக்க வேண்டும் எனத் தேடல் மீடியாக் கல்லூரி தனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.





