JobVibe.lk - Sri Lanka Job Portal

முஸ்லிம் ஜிஹாத் அமைப்பும், தமிழ் தேசிய இராணுவமும்.

15வது தொடர்........

கடந்த 14வது தொடரில் “TNA உறுப்பினர்களில் சிலர் தங்களது ஆயுதங்களை விலைக்கு விற்றுவிட்டு அந்த பணத்தின் மூலமாக கொழும்பில் தங்கியிருந்து பின்பு வெளிநாடு சென்றதான தகவல்களும் உள்ளன. அவ்வாறென்றால், அவர்களுக்கு பணம் வழங்கி ஆயுதங்களை பெற்றுக் கொண்டவர்கள் யார் ?” என்ற கேள்வியுடன் விடையின்றி தொடரை முடித்திருந்தேன். 

ஜிஹாத், முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழர்களை கொன்றார்களா ? என்ற தலைப்பில்தான் இந்த கட்டுரை தொடரை எழுதி வருகிறேன். கட்டுரையின் தலைப்புக்கு அவசியமான வரலாற்று சம்பவங்களை மாத்திரம் இங்கே குறிப்பிட்டு வருகின்றேனே தவிர, முழு வரலாறுகளும் இதில் சேர்க்கப்படவில்லை.  

ஆரம்ப காலங்களில் முஸ்லிம் மக்கள் மீதும், முஸ்லிம் கிராமங்கள் மீதும் தமிழ் ஆயுத இயக்கத்தினரால் கிழக்கில் தாக்குதல் நடத்திய சந்தர்ப்பங்களில், தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில், ஆயுததாரிகளை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்துவதற்கு எந்தவித சக்தியும் முஸ்லிம்களிடம் இருக்கவில்லை, 

அதாவது முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை என்பதனை நிரூபிக்கும் வகையில் நடைபெற்ற வரலாற்று உண்மைச் சம்பவங்களை கடந்த பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.  

TNA யினர் விற்பனை செய்த ஆயுதங்களை இந்த நாட்டில் வாழ்ந்த மூன்று சமூகங்களில், தமிழ் தரப்பினரோ, சிங்கள தரப்பினரோ பெற்றுக் கொண்டதற்கான எந்தவித சந்தர்ப்பமும் இருக்கவில்லை. அப்படியென்றால் முஸ்லிம் தரப்பினர் விலைக்கு வாங்கியிருக்கலாம் என்று எடுத்துக் கொள்ளலாம். 

TNA என்று அழைக்கப்பட்ட தமிழ் இராணுவத்தின் வீழ்ச்சிக்கு பின்பு முஸ்லிம் இளைஞர்களிடம் ஆயுதங்கள் இருந்ததான குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அவ்வாறென்றால், எவ்வாறு அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைத்தது ? அரசாங்கம் வழங்கியதா ? அரபு நாடுகள் வழங்கியதா ? வெளிநாடுகளிலிருந்து கடற்பரப்பின் ஊடாக கப்பலில் ஆயுதங்கள் வந்ததா ? என்ற சந்தேகமான கேள்விகளுடன் ஆராய்ந்தபோது அவ்வாறு எதுவும் இல்லை. 

இன்னுமொரு வகையில் கூறுவதென்றால், முஸ்லிம்களிடம் ஜிஹாத் அமைப்பு இருந்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றதே தவிர, அவர்களுக்கு எவ்வாறு ஆயுதங்கள் கிடைத்தது என்று எவராலும் நிரூபிக்க முடியவில்லை. 

அதாவது TNA என்னும் தமிழ் தேசிய இராணுவம் இல்லாதிருந்திருந்தால், முஸ்லிம்களுக்கு ஆயுதங்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்று எடுத்துக் கொள்ளாலாம்.      

அப்போது முஸ்லிம் கிராமங்கள் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்த காரணங்களினால், தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதங்களின் தேவைப்பாடு மிக அவசியமாக இருந்தது. ஆயுதங்களை எவ்வாறு பெறலாம் என்று பலரும் சிந்தித்தது பற்றி கடந்த பதிவுகளில் விபரமாக குறிப்பிட்டிருந்தேன். 

சில முஸ்லிம் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து தங்களது கிராமங்களை பாதுகாக்கும் நோக்கில், தன்னார்வ அமைப்புக்களை உருவாக்கி, அதற்கு ஜிஹாத் போன்ற பொருள்படுகின்ற பெயர்களை சூட்டியிருந்தனர். 

குறித்த அமைப்புக்களின் பெயரானது பாலஸ்தீன், லெபனான், காஸ்மீர் போன்ற நாடுகளில் உள்ள பலம் வாய்ந்த பிரபலமான இயக்கங்களின் பெயர்களை ஒத்ததாக இருந்ததன் காரணமாக, இங்குள்ளவர்களையும் அதுபோன்ற சக்திவாய்ந்த இயக்கம் என்ற பார்வை இருந்தது. 

ஆனால் அமைப்பின் பெயருக்கு ஏற்ற சக்திவாய்ந்த ஆயுதங்களோ, ஆளணிகளோ அவர்களிடம் இருக்கவில்லை, அத்துடன் முறையான கட்டமைப்பும், ஒருங்கமைப்பு இருக்கவில்லை. எடுத்துக்காட்டாக, சாய்ந்தமருதில் ஒரு குழு இருந்தால், கல்முனையில் இருக்கின்ற இன்னுமொரு குழுவுக்கும், மூதூரில் இருக்கின்ற குழுவுக்கும் எந்தவித தொடர்பாடலும், தொடர்புகளும் இருக்கவில்லை. 

மேலும், குறித்த ஜிஹாத் இயக்கங்களுக்கு குறிப்பிட்டுக் கூறக்கூடிய பிரபலமான தலைவர்களும் இருக்கவில்லை. ஜிஹாத் என்று கூறுகின்றார்கள் ஆனால் அதன் தலைவர் யார் என்று கேட்டால் தெரியாது. 1990 காலங்களில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்ன அவர்கள் ஜிஹாத் பற்றி பாராளுமன்றத்தில் பேசியதன் பின்புதான் அதன் பெயர் நாடு முழுவதும் பிரபலமடைந்தது.   

நான் இங்கே இதுவரையில் எழுதியுள்ளது 1990க்கு முற்பட்ட வரலாறாகும். அதாவது இரண்டாவது ஈழப்போர் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள வரலாறு. இந்த வரலாறையும், இரண்டாவது ஈழப்போருக்கு பிந்திய வரலாறையும் ஒன்றாக கலக்க வேண்டாம். இரண்டும் வேறுபட்டது. வரலாறு தெரியாவிட்டால், தேடி அறிந்துகொள்ளுங்கள். 

2000ம் ஆண்டுக்கு பின்பு பிறந்தவர்கள், சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு பரப்பப்படுகின்ற பொய்யான தகவல்களை படித்துவிட்டு அவைகளை உண்மை என்று நம்புகின்றனர். சிலருக்கு கிழக்கில் TNA என்னும் தமிழ் தேசிய இராணுவம் இருந்தது பற்றி நான் எழுதும் வரைக்கும் தெரிந்திருக்கவில்லை. 

தொடரும்................

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال