(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினர், மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்துடன் இணைந்து, மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை அவசர மருத்துவ சிகிச்சை பற்றிய பயிற்சியையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தையும் பூநச்சிமுனை மற்றும் வாழைச்சேனை ஆகிய மீன்பிடித் துறைமுகங்களை மையப்படுத்தி, செவ்வாய்க்கிழமை (2026 செப்டம்பர் மாதம் 22) நடாத்தினர்.
கடலை வாழ்வாதாரமாகக் கொண்டு தினசரி ஜீவனோபாயத்தை முன்னெடுக்கும் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் அவசர சந்தர்ப்பங்களில், விரைவான முதலுதவிகளை வழங்குவதற்கான ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கடற்படை செவிலியர் குழுவினரால் நீரில் மூழ்குதல் சம்பவங்களின் போது முதலுதவி அளித்தல், குருதிப்போக்கைக் கட்டுப்படுத்தல், அடிப்படை உயிர்காப்பு முறைகள், பாம்புக்கடிக்கு வழங்கப்படும் அடிப்படைச் சிகிச்சைகள், காயங்களைப் பராமரித்தல் மற்றும் நோயாளிகளைப் பாதுகாப்பாக இடமாற்றுதல் உள்ளிட்ட அடிப்படை அவசர மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. விசேடமாக, கடலில் மீனவர்கள் எதிர்கொள்ளும் அவசர சந்தர்ப்பங்களின் போது செயற்பட வேண்டிய முறைகள் குறித்தும் இங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அத்துடன், தொற்றா நோய்களைத் (NCDs) தடுத்தல், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல், உள்ளூரில் இலகுவாகப் பெறக்கூடிய உணவுகளைப் பயன்படுத்தி ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பேணுதல், புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாட்டிலிருந்து தவிர்ந்திருத்தல், உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுதல் என்பன தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டமும் நடாத்தப்பட்டது. இதற்கு இணையாக, மீனவ சமூகத்தினருக்கான மருத்துவ பரிசோதனை வேலைத்திட்டம் நடாத்தப்பட்டு, இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் உடல் நிறைச் சுட்டி (BMI) என்பனவும் பரிசோதிக்கப்பட்டன.
இலங்கை கடற்படையினர் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தமது பிரதான பொறுப்பிற்கு மேலதிகமாக, கடலோர மக்களின் சுகாதாரம் மற்றும் நலன்புரியை மேம்படுத்துவதற்காகவும் தொடர்ச்சியாகப் பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.






